மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தாய் மண் தமிழகமே!
என் சிரம் தாழ்த்திய முதல் வணக்கம்!
இன்று உலகில் எந்தவித உடல் குறைபாடுகள் இல்லாத மக்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறமையும், பொருளாதார வசதியும், அவர்களின் கல்வி அறிவுக்கு ஏற்றாற் போல், தொழில் வசதியும் காணப்படுகிறது.
ஆனால், உடலில் சில பாகங்கள் வளர்ச்சியற்ற நிலையில் காணப்படும் மாற்றுத் திறனாளிகளின் நிலைமை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகவும், கேள்விக்குரியதாகவும் காணப்படுகிறது.
பிரதான நடைபதைகளில், சாலை ஓரங்களில் இருந்து அவர்கள் படும் சிரமம், சாதாரண இயல்பு வாழ்க்கை வாழும் என்னைப் போன்றவர்களுக்கு பெரும் கவலை தருகிறது.
இன்று அனைத்து வசதி வாய்ப்புடன் வாழும் மக்களுக்கே பல தேவைகள், பிரச்சினைகள் என்று பலவகைப் பாதிப்புகள் காணப்படும்போது, இந்த மாற்றுத் திறனாளி மனிதர்களுக்கு எத்தனை தேவைகளும், சிரமங்களும் இருக்கும்?
அவர்களால் மற்ற சாதாரண மனிதர்கள் வாழும் வாழ்க்கையை வாழ முடிகிறதா? அவர்கள் மீது யாரும் உரிய பாசத்தைக் காட்டுகிறார்களா? அவர்களுக்கு உதவிக்கென்று யாரும் இருக்கிறார்களா?
அவர்களின் தேவையைக்கூட பல வகையான சிரமங்களுக்கு மத்தியில் செய்து கொள்கின்றனர்.
அவர்களின் மன வேதனையைச் சொல்லக் கூட, அவர்கள் அருகில் யாரும் இருப்பதில்லை. இதுவே அவர்களை மேலும் மேலும் பலவீனமாக்கி விடுகிறது.
ஒரு சிறந்த உடல் நலம் கொண்ட மனிதனால், அவர்கள் வாழக்கூடிய ஒரு நாள் வாழ்க்கை முறையை வாழவே முடியாது.
சராசரியான, நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை தாங்களும் வாழ வேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அந்த மக்களிடம் உண்டு என்பதை அவர்களுடன் சிறுது நேரம் பேசினாலே உணர்ந்துகொள்ள முடியும். இது நான் எதிர்கொண்ட அனுபவம்.
40 வயதுடைய ஒரு ஆண், கை, கால் ஊனமுற்ற நிலையில், அவர் படும் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவருக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு வலி அவருக்கு ஆறுதலாக யாருமே இல்லை என்பது தான்.
இதுபோல் பார்வையற்ற ஒரு இளைஞர், எம்.ஏ வரை கற்று தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை; வேலை வாய்ப்புகள் கூட கிடையாது என்று சொன்னபோது அவர்களால் எப்படித்தான் தினசரி வாழ்வைச் சமாளித்து எப்படித்தான் வாழ முடியும்?.
இவர்களைப் போல், இன்னும் எத்தனையோ பேர் இவ்வாறான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட பலரை நாம் பல இடங்களில் காண முடிகிறது.
இவர்களின் நிலைமையைப் பார்க்கும்போது பெரும் கவலையாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்பது என் எண்ணமும் தவிப்பும் ஆகும்.
இவர்களுக்குச் சமுதாயத்தில் உள்ள வசதிபடைத்த மக்களும், அரசாங்கமும் இணைந்து உதவி செய்ய முன் வர வேண்டும் என்பது என்னைப் போன்ற மாணவியின் நம்பிக்கையும், ஆசையும் ஆகும்.
– தனுஷா, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவி.