வளர்ச்சிகள் சென்றடையாத மலைக் கிராமங்கள்: வரமா, சாபமா?

மலையும் மழையும் இயற்கையின் அழகியலாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. மலையில் வாழும் மக்களுக்கும், மழையில் அவதிப்படும் மக்களுக்கு தான் அவற்றால் ஏற்படும் வலி புரியும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை உள்ளது. அங்கு மலையாளிப் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மலையில் உள்ள பல ஊர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை. சாலைகளும் படு மோசமாக இருக்கும். போதுமான மருத்துவ வசதி இல்லை. பல கிராமங்களில் கழிவறைகளையும் காண முடியாது.

முன்னேறிய மாநிலம் தமிழகம் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவது எல்லாம் ஜவ்வாது மலைக்குச் சென்றால் சுக்குநூறாக உடைந்துவிடும். ஜவ்வாது மலையில் பின் தங்கிய ஊர்களில் கொண்டிகாலூரும் ஒன்று.

குள்ளர்கள் தேசத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொண்டிகாலூர் கிராமம். ஜவ்வாது மலையின் சிறுநகரமான ஜமுனா மரத்தூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கொண்டிகாலூர் உள்ளது.

கொண்டிகாலூரை நெருங்க 10 கிலோமீட்டர் தொலைவு இருக்கையில் அலைபேசி அலைவரிசைகள் துண்டிக்கப்படும். தார்சாலை 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துடன் நிறைவுறுகிறது.

அதற்கு மேல் செல்ல வேண்டுமென்றால் குண்டும் குழியுமான சாலைகளைக் கடந்தாக வேண்டும். அதனால் தான் அவ்வழியே பேருந்துகள் செல்வதில்லை. நாங்களும் இருசக்கர வாகனத்தில் பல சிரமங்கங்களுக்கு மத்தியில் பயணித்தோம்.

இடையிடையில் 5 நிமிடம் வண்டியிலிருந்து இறங்கி நடந்தோம். பாதி தூரம் வாகனத்திலும் பாதி தூரம் நடந்தும் கொண்டிகாலூர் கிராமத்தை அடைந்தோம்.

என்னை கிராமத்திற்கு அழைத்துச் சென்றவர் மலைவாழ் மக்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்.

ஜவ்வாது மலையில் திரும்பும் இடமெல்லாம் சாமையைப் பார்க்க முடியும். மேட்டுநிலமாக இருப்பதால் சாமை விளைவிக்க வாட்டமாக இருப்பதாகக் கூறுகிறார்கள் மலைவாழ் மக்கள். கொண்டிகாலூரிலும் இதே நடைமுறை தான்.

கொண்டிகாலூரில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான வீடுகள் குடிசைகள் தான். கல் வீடுகள், விரல் விட்டு எண்ணுமளவு தான் உள்ளன.

மருத்துவமனைக்கோ, நியாய விலைக்கடைக்கோ (ration shop) செல்லவேண்டுமென்றால் சுமார் 8 கிலோமீட்டருக்கு தொலைவுக்குப் பயணம் செய்ய வேண்டும். அங்குள்ள ஆண்கள் பலரிடம் இருசக்கர வாகனம் கூட இல்லை. 

வாகனம் இல்லாத ஆண்களும், பெண்களும் கால்நடையாகத் தான் ரேஷன் பொருட்களையும் வீட்டிற்கு தேவையான மற்ற பொருட்களையும் தலையில் சுமந்தபடியே கொண்டிகாலூருக்கு சென்று சேர்க்க வேண்டும்.

மேடு-பள்ளமுடைய மோசமான பாதையில் நடந்து செல்லுவதே சிரமம். தலையில் கூடுதல் சுமையையும் சுமந்து வரும் அந்த ஊர் மக்களின் வலி எவ்வளவு கொடுமையானது! நினைத்தாலே மனம் பதைக்கிறது.

கொண்டிகாலூர் கிராமத்திற்குள்ளேயே ஆரம்பப் பள்ளி இருக்கிறது. உயர்கல்வி படிக்க வேண்டுமென்றால் தினமும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பயணிக்க வேண்டும்.

இங்குள்ள மாணவர்கள் பெரும்பாலும், உண்டு, உறைவிடப் பள்ளியில் படிப்பதால் மாணவர்களின் நேரமும், ஆற்றலும் மிச்சமாகிறது.

இருப்பினும் ஓரிரு குழந்தைகள் தினமும் காலையில் 5 கிலோமீட்டர் தொலைவும் மாலையில் 5 கிலோமீட்டர் தொலைவும் பயணிக்கிறார்கள். இவ்வாறு பயணிப்பதால் குழந்தைகள் எளிதில் சோர்வடைகிறார்கள். இதனால் படிப்பில் நாட்டம் குறைகிறது.

இவர்கள் ஏன் உண்டு, உறைவிடப் பள்ளியில் படிக்கக் கூடாது? தாய், தந்தையை இழந்த பெண் குழந்தை, தாத்தா, பாட்டியையும் விட்டுப் பிரிவதை ஏற்றுக்கொள்ளுமா?

பெற்றவர்களையும் உற்றாரையும் சிறுவயதில் பிரிந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது முறையாகுமா?

கிராம மக்கள் மாடுகளையும், ஆடுகளையும் வாங்கி வளர்க்கிறார்கள். அவையனைத்தும் நாட்டு வகை மாடுகளே.

மலையிலுள்ள சிற்றூர்களில் நாம் கலப்படம் என்பதையே பார்க்க முடியாது. கால்நடை, அவர்கள் விளைவிக்கும் உணவு மட்டுமல்லாமல் அவர்களின் அன்பும் கலப்படமில்லாத தூய்மையானவை.

காட்டுக்குள் வாழ்வதால் அவ்வப்போது விலங்குகளின் தொந்தரவை மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

இரவு நேரத்தில் கொண்டிகாலூரை விட்டு வெளியேறுவதோ, வெளியூரிலிருந்து கொண்டிகாலூருக்கு செல்வதோ பாதுகாப்பானதல்ல. தெரு விளக்குகள் இல்லாததால் காட்டெருமைகளிடம் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கிராமங்கள் இயற்கையுடன் இயைந்தவை. அங்கு ஒருபோதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்று பேஷன் சூழலியலாளர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை கொண்டிகாலூர் கிராமச் சூழல் சுக்குநூறாக உடைத்தெறிகிறது.

அங்கு அமைக்கப்பட்ட தண்ணீர் டேங்க் 100 குடும்பங்களுக்கு போதுமான நீரைத் தருவதில்லை. மேட்டு நிலம் என்பதால் தண்ணீர் டேங்க் நிறைவதில்லை.

அங்கு அமைந்திருக்கும் அரசுப் பள்ளியின் கழிப்பறைகளும் தண்ணீர் வசதி இல்லாமல் பயனற்றுக் கிடக்கின்றன.

தெருவிளக்கு, தண்ணீர், போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளது போதாதென்று அந்தக் கிராம மக்கள், வன அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

வீட்டிற்குத் தேவையான விறகுகளை எடுப்பதற்கு காலையில் செல்பவர்கள் மதியம் 2 மணியளவில் தான் வீடு திரும்புவார்கள். அவர்களுக்கு தேவையான விறகுகளை சேகரிக்கும்போது வன அதிகாரிகள் கண்ணில் சிக்கினால், அன்றைய நாள் இருண்ட நாள் தான்.

வீட்டிற்குத் தேவையான விறகுகள் சேகரித்தாலோ, வீடு கட்டுவதற்கு தேவையான பாறை உடைத்தாலோ மக்கள் பயன்படுத்தும் உபகரணங்களையும் கையாடல் செய்துகொண்டு வன அதிகாரிகள் லஞ்சம் வசூலிக்கின்றனர்.

விறகு வெட்டச் செல்லும் பெண்களை சற்றும் மரியாதை கொடுக்காமல் வசைச்சொற்களால் பேசுவது தொடர்கதையாக உள்ளது.

கொண்டிகாலூர் மக்கள் அனைவருக்கும் பயிர் செய்வதற்கான பட்டா நிலமில்லை. எந்நேரம் வேண்டுமானாலும் வன அதிகாரிகள் பயிர்களை நாசம் செய்யலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

போக்குவரத்து வசதிகளே இல்லாத ஓர் ஊரில் சமையல் செய்வதற்கான சிலிண்டர் கிடைப்பதற்கான வசதியே இல்லை.

அப்படி இருக்க அந்த ஏழை எளிய மக்கள் விறகுகளை சேகரிக்கவும் தடையிட்டால் எப்படி தான் சமைப்பது? விறகுகளை எடுப்பதற்கெல்லாம் பத்தாயிரம் இருபதாயிரம் என அபராதம் விதித்தால் வேலை வாய்ப்பற்ற மக்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்?

சட்டப்படி வனத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு வனத்தின் மீதும் அங்குள்ள பொருட்கள் மீதும் அதிகளவான உரிமை உள்ளது.

வனத்தில் விளையும் பொருட்களை வீட்டிற்கு பயன்படுத்துவதற்கும், உணவு தேவைக்காக வன நிலங்களில் பயிரிடுவதற்கான உரிமையை வன உரிமை சட்டம் (Recognition of Forest Right 2006) உறுதி செய்துள்ளது.

காடுகளும் மலைகளும் அங்கு வாழும் பூர்வகுடிகளால் மட்டுமே பாதுகாக்கப்படும். அவர்களை அப்புறப்படுத்துவது இயற்கை வளங்களுக்கும், அவர்களுக்கும் ஒருபோதும் நன்மை பயக்காது.

வன உரிமைச் சட்டத்தின் நோக்கமே வனத்தின் மீதான பழங்குடியினர் உரிமையை பாதுகாக்கப்பதுடன் வன வளங்களையும் பாதுகாப்பது தான்.

சட்டம் பழங்குடியினருக்கு பாதுகாப்பாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இயந்திரங்களின் அதிகாரிகள், விளிம்புநிலை மக்களை ஏமாற்றுபவர்களாக இருப்பது ஜனநாயகத்தின் சாபக்கேடு.

அரசு இயந்திரத்தின் தோல்வி ஒரு புறமிருக்க எம்மக்களின் வழிகளை உணராத மேட்டுக்குடியினரின் பார்வையும் செயலும் எம்மக்களை மேலும் காயப்படுத்துகிறது.

காட்டுப் பகுதி சினிமா எடுப்பதற்கு ஏற்ற இடமென்பதால் தமிழ் படம் ஒன்றிற்கு ஷீட்டிங்க் கொண்டிகாலூரில் ஒரு மாத காலம் எடுக்கப்பட்டது.

அங்குள்ள கோவிந்தன் (பெயர் மாற்றப்பட்டது) சினிமாக்காரங்களுக்கு அங்கு ஷூட்டிங் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளார். அவர் செய்த வேலைகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் ஆறாயிரம் மட்டுமே.

நான் அவரிடம், ’ஏன் அண்ணா சம்பளம் கூட்டி கேட்கவில்லை’ என்று கேட்டேன். அவரது பதில் நெகிழ்ச்சியடையச் செய்தது.

”வெளியூர்ல இருந்து மலைக்கு, அதுவும் எங்க ஊருக்கு வந்தவங்களுக்கு, நாங்க தானே மா பாதுகாப்பு.

நீ எங்கேயிருந்தோ எங்க ஊருக்கு வந்திருக்க, உன்னை நாங்க தானே நல்லபடியா கவனிச்சு அனுப்பனும். எங்கள நம்புனவங்கள நாங்க பத்திரமா பாத்துக்கிறதுக்கு பணம் கேட்க முடியுமா?” என்றார்.

அவரது அந்த வார்த்தைகளை கேட்டு என் உள்ளம் கனத்தது. அவை வெகுளி தனமாக மட்டும் பார்த்தோம் என்றால் நாம் தான் முட்டாள்.

அறிவு ஜீவிகள், பணக்காரர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் செத்துப்போன மானுடம் கோவிந்தன் அண்ணா போன்ற எளிய மனிதர்களிடம் உயிர்ப்புடன் இருக்கிறது.

மனித இனத்தின் மாண்பே எல்லையற்ற அன்பும், நம்பிக்கையும் தானே. அவை ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும் எளிய மனிதர்களால் தூக்கிப்பிடிக்கப்படுகிறது.

– குணாளினி சௌமியா

Comments (0)
Add Comment