புலம் பெயர் தமிழர்களின் துயரங்களும் அனுபவங்களும்!

* யாதும் ஊரே யாவரும் கேளிர்! எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!… என்று தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்திருக்கின்றார்கள் என்றால், தமிழர்களுக்கு உலகளாவிய கடல் பயண அனுபவம் இருந்திருப்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது!

* சிலர் பிழைப்புக்காக பயணம் செய்தார்கள். சிலர் பிழைப்பைத் தேடி பயணம் செய்தார்கள். அவர்களில் பலர் அடிமைகளாக, கூலிகளாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்தார்கள். பின்பு புலம் பெயர்ந்து அங்கேயே குடியேறினார்கள்.

* அந்த தமிழர்களின் சோகக் கதைகளையும், சொந்த கதைகளையும் வரலாற்று ரீதியாக, ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்துவதற்கு இந்த நூலாசிரியர் மிகவும் பொருத்தமானவர்! ஏனெனில் அவரே ஒரு புலம் பெயர்ந்த தமிழர்!

* தமிழ் மரபு அறக்கட்டளை என்பது ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பு.

அதன் தலைவர் முனைவர் க. சுபாஷினி புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றி 15 ஆண்டுகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு, 304 துணை நூல்கள், 29 வலைத்தள குறிப்புகளைப் படித்து, ஆதாரங்களை சேகரித்து அவற்றை மனதில் உள்வாங்கி இந்த நூலை ஒரு ஆய்வு நூலுக்கு இணையாகப் படைத்துள்ளார்!

* இந்த நூலில் 2500 ஆண்டுகளின் தமிழர் புலப்பெயர்வு பற்றிய தகவல்களை ஆதாரத்துடன் தந்துள்ளதாக கூறுகின்றார்! இதற்காக சுபாஷினிக்கு ஒரு சபாஷ்!

* நூலுக்கு சிறப்பான ஒரு அணிந்துரையை சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

“மனிதன் என்பவன் மரம் அல்ல; வேறூன்றி நிற்பதற்கு! மாறாக அவனுக்கு கால்கள் இருக்கின்றன! அவன் நடந்து கொண்டே இருக்கிறான்! என்கிறார் யுவான் கொய்ஸ்ட்டியாலோ (Juan Goytisolo)” என்ற தனக்கு மிகப் பிடித்தமான மேலும் பொருத்தமான பொன்மொழியை இங்கு மேற்கோள் காட்டுகிறார்!

* புலம் பெயர்ந்த மக்கள் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் தனது அணிந்துரையில்:

*”புலம் பெயரும் மக்கள் தங்களோடு எடுத்துச் சென்றது தங்கள் தாய் மண்ணின் நினைவுகளைத் தான் !

பஞ்சம் பிழைக்க அடிமைகளாக, கூலிகளாக புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் தங்களோடு கொண்டு சென்றது சிறு தெய்வங்களைத் தான்!

ஆர். பாலகிருஷ்ணன்

* மாரியம்மன்; காளியம்மன்; பத்ரகாளி; பேச்சியம்மன்; சுடலைமாடன்; முனியாண்டி; கருப்பசாமி இவர்களைத் தான் அவர்கள் கொண்டு சென்றார்கள்!

* ‘மனிதனுக்கு கடவுள் துணை! கடவுளுக்கு மனிதன் துணை’ என்பது புலம் பெயர் மானிடத்தின் அடிப்படை உளவியல்” என்று விளக்கம் தந்துள்ளார் ஆர். பாலகிருஷ்ணன்!

* நூலாசிரியர் முனைவர் க. சுபாஷினி தனது முன்னுரையில் புலம் பெயர் மக்களின் வலியை வேதனையோடு பதிவிடுகின்றார்.

“புலம் பெயர்வது எளிதல்ல. அது ஒருவர் வாழ்கின்ற ஆதி நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி, மற்றோரு அன்னிய இடத்தில் வைப்பதற்கு ஒப்பானதாகும்.

இதனால் வாழ்வியல் மாற்றம், பொருளாதார மாற்றம் குறிப்பாக, உளவியல் மாற்றமும் நடைபெறுகிறது!” என்று தனது அனுபவத்தையும் கலந்து எழுதுகிறார்!

* இந்த நூலில் பத்து தலைப்புகளில் பெரிய பாகங்கள் உள்ளன. அவைகள் :

1) பண்டைய வணிகத் தொடர்புகள், பயணங்கள், ஆவணங்கள்.
2) பௌத்தப் பரவலாக்கம் – தமிழ் பௌத்தர்களின் பயணங்கள்.
3) பல்லவர், பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலப் பயணங்கள்.
4) பொ. ஆ. 14க்குப் பிறகான கிழக்காசிய நாடுகளுக்கான பயணங்கள்.
5) தமிழில் அச்சுப் பதிப்பாக்கம்.
6) அடிமை வியாபாரமும் தமிழர் புலப்பெயர்வும்.
7) ஒப்பந்தக் கூலிகள்.
8) யாழ்பாணத் தமிழர் புலம் பெயர்வு, இலங்கை போரும் அதன் தாக்கமும்.
9) 20ம் நூற்றாண்டில் தமிழர் புலப்பெயர்வு.
10) உலகளாவிய தமிழ் மக்கள் நிலையும் அதன் தொடர்பான ஆய்வுகளும்.

* தமிழர் புலப்பெயர்வு சம்பந்தமாக நூலில் நூற்றுக்கணக்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை அள்ளி உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்:

* 1661 – 1665 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டும் மதராஸ்க்கு அருகேயுள்ள பழவேற்காடு தரகர்களிடமிருந்து 131 டச்சுக் கப்பல்களில் மொத்தம் 38,441 இந்திய அடிமைகள் புலம் பெயர்ந்தார்கள். இவர்கள் மணிலாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்!

* மதராஸிலிருந்து மொரீசியஸ் தீவுக்கு கூலித் தொழிலாளிகளாக அனுப்பப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் மதராஸ்; செங்கல்பட்டு; தென்னாற்காடு; தஞ்சாவூர்; திருச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள்!

* 1659 – 1682 காலக்கட்டத்தில் தஞ்சாவூரில் பஞ்சம் நிலவியது. ஏறக்குறைய 5000 பேரை டச்சுக்காரர்கள் கப்பலில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புவுக்கும் அடிமைகளாகக் கொண்டு சென்றார்கள்.

பஞ்சத்தில் இருந்து தப்பிக்க பலர் தங்களையே அடிமையாக விற்றுக் கொண்டார்கள்!

* 1790ல் திருவல்லிக்கேணியில் அடிமைச் சந்தை நடைபெற்றது. ஒப்பந்தக் கூலிகள் – கரும்புத் தோட்ட வேலைகளுக்காக மொரீசியஸ், மேற்கிந்திய தீவுகளுக்கும்;

காப்பி, தேயிலைத் தோட்டங்களுக்காக இலங்கைக்கும்; ரப்பர், செம்பனைக்காக மலேயாவுக்கும் கொண்டு செல்லப் பட்டார்கள்!

க. சுபாஷினி

* 1876 – 1878 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதை ‘தாது பஞ்சம்’ என்பார்கள்.

இதனால் ஏறக்குறைய 6.1 முதல் 10.3 மில்லியன் மக்கள் மாண்டு போனார்கள். அதன் காரணமாக தமிழர் புலப்பெயர்வு மிகவும் அதிகமாக நடந்தது!

* புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் அனுபவித்த கொடுமை கண்ணில் நீரை வரவழைக்கும்!

அவர்களில் பலர் கப்பல் பயணத்தின் போது கொள்ளை நோயாலும் கடல் நோயாலும் (Sea Sickness) பாதிக்கப்பட்டு மாண்டு போனார்கள்.

அப்படி இறந்த போனவர்களின் உடல்கள் கப்பலிலிருந்து கடலில் வீசியெறியப்பட்டதாம் !

* சயாம் – பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் கொண்டு செல்லப் பட்டார்கள்.

வேலை பார்த்த 1,80,000 தொழிலாளர்களில் 90,000 பேர் அங்கு மரணமடைந்தார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள் என்ற தகவல் மனதை அழுத்துகிறது !

* தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்ற நாடுகள் – மலேயா; மணிலா; மொரீசியஸ்; சிங்கப்பூர்; தாய்லாந்து; பர்மா; இந்தோனேசியா; பிஜீ; தென் ஆப்பிரிக்கா; இலங்கை; மேற்கிந்திய தீவுகள்… இப்படிப் பல !

* தமிழர் புலம் பெயர் மக்களின் – வரலாறு – வாழ்க்கை; துயரங்கள் – அனுபவங்கள்; கண்ணீர்கள் – கண்காணிகள்; பெற்ற செல்வங்கள் – பெற்ற பதவிகள்; சந்தித்து வென்றவை – சாதித்து காட்டியவை.

இவ்வாறு எல்லா விவரங்களையும் ஒரே நூலில் மிகவும் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார்!

ஒவ்வொரு தகவலுக்கும் ஆதாரத்தை அங்கங்கே தந்து நூலின் சிறப்பை மேலும் கூட்டியுள்ளார்!

*. இதுபோன்று தமிழர்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நமக்கு மிகக் குறைந்த நூல்களே கிடைக்கின்றன.

தனது 15 ஆண்டுகளாக கடின உழைப்பில் இந்த நூலை நமக்கு தந்த முனைவர் க. சுபாஷினியின் சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகின்றேன்.

****

தமிழர் புலப்பெயர்வு!
க. சுபாஷினி 
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு
முதல் பதிப்பு – 2024
பக்கங்கள் 370 
விலை ரூ 450/-

– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர். 

Comments (0)
Add Comment