இதுவரை நாமறிந்த, தெரிந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் காட்டுவது அல்லது வெளியுலகுக்குத் தெரிய வராதவற்றை வெளிக்கொணர்வது ஆகியனவே வெப்சீரிஸ் படைப்புகளின் பலமாகக் கருதப்படுகிறது. மொழி, ஓடிடி தளங்கள், சம்பந்தப்பட்ட படைப்புக்குழு போன்ற வேறுபாடுகளைத் தாண்டி மேற்சொன்ன விஷயங்களே ஒரு வெப்சீரிஸை பார்ப்பதா, வேண்டாமா என்ற முடிவைப் பார்வையாளர்கள் மேற்கொள்ள வழி வகுக்கின்றன.
அந்த வகையில், ஜியோ சினிமாவில் வெளியாகியிருக்கிற ‘பில்’ வெப்சீரிஸ் ஆனது மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகளை, மோசடிகளைப் பேசுகிறது. ராஜ்குமார் குப்தா உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸ் எட்டு எபிசோடுகளை கொண்டது.
‘சச்சின்’ ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இதில் நாயகனாக நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ் பார்த்து வியந்த இந்தி சீரியல் நடிகர்களில் ஒருவரான பவன் மல்ஹோத்ரா இதில் வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும் நேகா ஷராப், அன்சுல் சௌகான், திக்ஷா ஜுனேஷா, பவன் மல்ஹோத்ரா, அக்ஷத் சௌகான், நிகில் குரானா, பஹருல் இஸ்லாம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
சரி, ‘பில்’ வெப்சீரிஸ் நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
தரமற்ற மருந்துகள் விற்பனைக்கு..!
இந்திய மருத்துவ ஆணையத்தில் பணியாற்றி வரும் பிரகாஷுக்கு காஸியாபாத்திலுள்ள அதன் கிளை அலுவலகத்தின் தலைமை அலுவலர் பொறுப்பு வழங்கப்படுகிறது. பணி மாற்றலாகிச் சென்ற சில நாட்களிலேயே, அங்குள்ள அதிகாரிகள் சிலர் சில மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது அவருக்குத் தெரிய வருகிறது.
குர்சிம்ரத் கவுர் (அன்ஷுல் சௌகான்) எனும் ஆய்வாளர், ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் காஸியாபாத் பகுதி உற்பத்தி பிரிவைச் சோதனையிடச் செல்கிறார். ஆனால், முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அவரது குழுவினரை அனுமதிக்க மறுக்கின்றனர் அங்குள்ளவர்கள். அதனை மீறி அக்குழு சோதனை நடத்தும்போது, ஒரு பணியாளர் கோப்பு ஒன்றை எடுத்து வெளியே சென்று சாக்கடையில் வீசுகிறார்.
அந்த சம்பவத்தினால், அந்த ஆய்வை ரத்து செய்கிறார் குர்சிம்ரத். இதனைக் கேள்விப்படும் பிரகாஷ் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பழைய கோப்புகள் அனைத்தையும் பார்க்க முனைகிறார்.
அதே நேரத்தில், அந்த கோப்பு நூர் கான் (அக்ஷத் சௌகான்) எனும் பத்திரிகையாளர் வசம் கிடைக்கிறது. ஆனால், அவர் வேலை பார்க்கும் பத்திரிகையின் அதிபர் அந்த தகவல்களைப் பிரசுரிக்க முடியாது என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
இந்த நிலையில், ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் சர்க்கரை நோய்க்கான மருந்துகளைச் சோதனை செய்யப் பயன்படுத்தப்பட்ட 5 நபர்கள் கண் பார்வையை இழந்ததாகச் செய்திகள் வெளியாகின்றன. தொலைக்காட்சியில் அந்த விவகாரம் விவாதத்தை உருவாக்குகிறது.
அதையடுத்து, தன் கையில் இருக்கும் கோப்பு பற்றி மருத்துவர்கள் விதவிதமான தகவல்களைச் சொன்னதாக ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார் நூர்கான். அவ்வளவுதான். ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவன சிஇஓவின் உதவியாளர் சில அடியாட்களுடன் வந்து, அவரை அடித்து அந்த கோப்பைப் பிடுங்கிச் செல்கிறார்.
நூர் கான் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்துவிட்டு, அவரைச் சந்திக்க பிரகாஷும் குர்சிம்ரத்தும் முயற்சிக்கின்றனர். அதேநேரத்தில், அவரைச் சந்திக்க ஆஷிஷ் கன்னா (குஞ்ச் ஆனந்த்) என்பவரும் முயற்சிக்கிறார். அவர், ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் தலைமை மைக்ரோபயாலஜிஸ்ட் ஆகப் பணியாற்றுபவர்.
இந்த நிலையில், ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் சர்க்கரை நோய் மருந்து சந்தையில் அறிமுகமாவதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. உரிய சோதனைகளுக்கு அந்த மருந்து உட்படுத்தப்படவில்லை என்று ஆஷிஷ் கன்னா தனது மேலதிகாரியான பாசுதேவ் நடராஜனிடம் (பஹருல் இஸ்லாம்) தெரியப்படுத்துகிறார். அவர் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை.
பிறகு, நேரடியாக ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் தலைவர் பிரம்மா கில் (பவன் மல்ஹோத்ரா) மற்றும் அவரது மகன் ஏகம்மை (நிகில் குரானா) சந்திக்கிறார் ஆஷிஷ். நிறுவனச் செயல்பாடுகளில் தூய்மை வேண்டும் என்று மெனக்கெடுவது அவருக்கே ‘ஆப்பாக’ மாறுகிறது. தனக்கான கம்ப்யூட்டரில் எந்த தகவலையும் பெற முடியாத நிலைக்கு அவர் ஆளாகிறார். அவர் தந்த தகவல்களைக் கிழித்தெறிகிறார் பிரம்மா.
அப்போது, ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் சர்க்கரை நோய் மருந்தைச் சோதனை செய்யப் பயன்படுத்தப்பட்ட சிலர் மரணமடைகின்றனர். நிறுவனத்திற்கு எதிரான செய்திகளை நீர்த்துப் போகச் செய்யப் பணம், அதிகாரம், அடக்குமுறை என அனைத்தையும் கையாள்கிறார் பிரம்மா. தனது நண்பரும் உறவினருமான பஞ்சாப் முதலமைச்சரின் உதவியை நாடுகிறார்.
இந்த நிலையில், தனது தந்தை ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் காலாவதியான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி, அவர்களது உடல் பாதிப்புகளுக்கு காரணமாவதை அறிகிறார் முதலமைச்சரின் மகள் கீரத்.
எத்தனை பாதிப்புகள் நேர்ந்தாலும், அவற்றைச் சரி செய்ய பிரகாஷ் மாதிரியான ஆட்கள் முன்னோக்கி நகர்ந்தாலும், ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் அதிகாரக் கரங்கள் ‘ஆக்டோபஸ்’ ஆக அனைத்து இடங்களையும் ஆக்கிரமிக்கின்றன.
அந்தச் சூழலில் தனது பணிக்கான வரம்புகளை மீறி ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் மருந்துகளைச் சோதனை செய்கிறார் பிரகாஷ். அவை தரமற்று இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.
ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் ஆலைகளில் சோதனை செய்ய அனுமதி மறுத்த மேலதிகாரிகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் பிரகாஷ். ஆனால், அவர் ஆய்வகத்தை அலுவல் ரீதியாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அவரது ஆய்வு முடிவுகளை உயர்நீதிமன்றம் ஏற்பதாக இல்லை. மாறாக, அவரையும் குர்சிம்ரத்தையும் பணியிடை நீக்கம் செய்கிறது.
எதிர்த்துப் போரிடுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் பிரகாஷ், குர்சிம்ரத், நூர் கான், ஆஷிஷ் போன்றவர்கள் ஒன்றிணைந்தார்களா, ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் அடக்குமுறையை மீறி அதன் தரமற்ற மருந்துகள் விற்பனையைத் தடுத்து நிறுத்தினார்களா என்று சொல்கிறது ‘பில்’ வெப்சீரிஸின் மீதி.
‘இங்கு தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படும்’ என்று பலகையில் எழுதியிருந்தால் என்னவாகும்? ஆனால், அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அனைத்து மருந்துகளையும் வாங்கி மக்கள் பயன்படுத்தினால் என்னவாகும்? அது எப்பேர்ப்பட்ட பிரச்சனை என்பதைச் சொல்கிறது இந்த வெப்சீரிஸ்.
விறுவிறுப்பு நிறைந்த காட்சியாக்கம்!
ரித்தேஷ் தேஷ்முக், அவரது மனைவியாக வரும் நேகா ஷராப், பவன் மல்ஹோத்ரா, நிகில் குரானா, அக்ஷத் சௌகான், அன்ஷுல் சௌகான், பஹருல் இஸ்லாம், திக்ஷா ஜுனேஜா, குஞ்ச் ஆனந்த், அவரது மனைவியாக நடித்தவர் உட்படச் சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களது நடிப்பு திறம்பட இருப்பதே, இதனை கண்ணிமைக்காமல் பார்க்க வழி வகுக்கிறது.
சுதீப் சென்குப்தாவின் ஒளிப்பதிவில் சில காட்சிகள் சீரியல் பார்த்த உணர்வைத் தருகின்றன. ஆனால், முழுப்படைப்பும் அவ்வாறு இல்லாதது ஆறுதல்.
ஒரு நேர்த்திமிக்க வெப்சீரிஸ் என்ற உணர்வைத் தோற்றுவிக்காவிட்டாலும், கதை திரையில் சீராக விரிய வழிவகுத்திருக்கிறது சுவராங்ஷு சர்காரின் படத்தொகுப்பு.
ஆய்வகங்கள், அலுவலகங்கள், வீடுகள் என்று ஒன்றுக்கொன்று வேறுபட்ட வாழ்விடங்களைக் காட்டப் போராடியிருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் தீப் சுபாஷ் குல்கர்னியின் குழு.
இன்னும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, டிஐ, ஒப்பனை என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு இந்த வெப்சீரிஸை செறிவானதாக மாற்ற முயற்சித்திருக்கிறது.
பிரக்ஞா மற்றும் பரோமா தாஸ்குப்தாவின் பின்னணி இசை காட்சிகளில் நிறைந்திருக்கும் பரபரப்பை அதிகப்படுத்துகிறது.
‘பில்’ வெப்சீரிஸை வடிவமைத்த ராஜ்குமார் குப்தா தலைமையில் பர்வேஸ் ஷெய்க், ஜெய்தீப் யாதவ், மாஹிம் ஜோஷி கூட்டணி இணைந்து இதன் கதை, திரைக்கதை, வசன உருவாக்கத்தில் பங்காற்றியிருக்கிறது.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ‘யதார்த்தம்’ இல்லாதது, மருந்து மாபியாவின் நடவடிக்கைகளை வழக்கமான வில்லத்தனமாகச் சித்தரித்திருப்பது போன்ற சில குறைகள் இதிலுண்டு.
ஆனால், அவற்றை மீறி மருந்து தயாரிப்புகளின் பின்னணியில் இருக்கும் மோசடிகளை அம்பலப்படுத்திய வகையில் தனித்துவமான இடத்தைப் பெறுகிறது ‘பில்’. இதனைப் பார்ப்பவர்களில் சிலராவது, தாம் வாங்கும் மருந்துகள் நிச்சயம் தரமானதுதானா என்று யோசிப்பார்கள். அதன் விளைவுகள், பக்க விளைவுகள் என்னவென்பதை உற்று நோக்குவார்கள். அந்த அளவில், இதன் தாக்கம் நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்தது.
ராஜ்குமார் குப்தா உருவாக்கியிருக்கும் ‘பில்’ வெப்சீரிஸை ‘தி பெஸ்ட்’ என்று சொல்லிவிட முடியாது. அதேநேரத்தில், இதன் உள்ளடக்கம் நாம் அறியாத பல தகவல்களைப் புரிய வைப்பதையும் மறுக்க முடியாது. ‘அதுதானே தேவை’ என்பவர்கள் தாராளமாக இதன் எட்டு எபிசோடுகளையும் ஒரே மூச்சாகப் பார்த்து முடிக்கலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்