சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!

* சிந்துவெளி அகழாய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டு நிறைவு நாள் (20.09.2024) கருத்தரங்களும் சிறப்புச் சொற்பொழிவுகளும், சமூக வலைதளங்களில் கட்டுரைகளும், புகைப்படங்களும், போஸ்டர்களுமாக காணக்கிடைக்கும் இவ்வேளையில், சிந்து வெளி பற்றிய சுவையான தகவல்களைத் தரும் நூல் ஒன்றை இப்போது அறிமுகம் செய்கிறேன்!

* தனி ஒரு மனிதராக ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் மிகக் கடுமையான உழைப்பையும், நேரத்தையும், பயணத்தையும் மேற்கொண்டு அதன் பயனாக, சிந்துவெளி – கீழடி – சங்க இலக்கியம் இம்மூன்றையும் ஒரே கோட்டில் கொண்டுவந்து நிறுத்திய மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன். IAS (ஓய்வு) அவர்களுடன் – தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் க. சுபாஷிணி நடத்திய நேர்காணலின் தொகுப்பே இந்த சிறிய நூல்!

* சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனிடம் முக்கியமான பத்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விரிவான பதில்களாக எளிய முறையில் விளக்கம் தரும் நூலாக அமைந்தது பாராட்டிற்குரியது.

ஆர். பாலகிருஷ்ணன்

இந்தக் கேள்வி – பதில் மூலமாக மொத்த ஆய்வின் நோக்கமும் தாக்கமும் நமக்கு விளங்கி விடுகின்றது!

இப்படி ஒரு முயற்சியை சிறப்பாக செய்த தமிழ் மரபு அறக்கட்டளையை பாராட்டாமல் கடந்து செல்ல முடியாது!

* நேர்காணலின் முதல் கேள்வியாக – சிந்து வெளி நூற்றாண்டு ஏன் கொண்டாடப்பட வேண்டும்? என்ற மிகப் பொருத்தமான கேள்வியை தமிழரின் சார்பில் கேட்டுத் தெரியும் முயற்சியாக உள்ளது. இதற்கான பதில் மிக நீண்டதாகவும் விரிவாகவும் தரப்பட்டிருந்தும் அதன் சாரத்தை தந்துள்ளேன்:

* ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் பதில் – “முதலாவதாக, சிந்து வெளி கண்டுபிடிக்கப் படவில்லை என்றால், இன்னமும் நாம் வேத காலங்களிலிருந்து தான் இந்தியப் பண்பாடு தொடங்கியதாக நம்பியிருப்போம்! உலகம் அதை நம்பியிருக்கும்!” என்று நச்சென்று விளக்குகின்றார்!

நமது இனத்தின் உண்மையான அடையாளமும் அடித்தளமும் சிந்து வெளியிலிருந்து தோன்றியது என்பது எவ்வளவு பெரிய பெருமை ? அதை காப்பாற்ற வேண்டும் அல்லவா ?

* இரண்டாவது முக்கிய காரணமாக அவர் கூறியது – “Un dated Pre – History என்ற தேதியிடப்படாத வரலாற்றுக்கு முற்பட்ட காலங்கள், இந்தியாவில் ஒரே எட்டில் இன்றைய தேதியிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு என்றும், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3000 ஆண்டுகளுக்கு முன்பு என்றும் மாற்றி அமைத்தது சிந்து வெளியின் ஒரு பெரிய சாதனை! அதனால் தான் சிந்து வெளி கொண்டாடப் படவேண்டும்!”

* ‘நாம் அறியாத ஒன்றை புரிந்து கொள்வதன் மூலம் (சிந்து வெளி ஆய்வு முடிவுகள்) நாம் அறிந்த வற்றின் (திராவிட நாகரிகம்) முக்கியத்தை புரிந்து கொள்ள முடியும்’ என்ற பேருண்மையின் காரணத்திற்காகவும் சிந்துவெளி ஆய்வு முடிவுகள் தமிழர்களின் கொண்டாட்டமாக மாறி விட்டது!

* இந்திய வரலாற்றில் ஜான் மார்ஷலின் பங்களிப்பு பற்றிய கேள்வி பதிலில் நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன :

1902ல் ஜான் மார்ஷல் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் டைரக்டர் ஜெனரல் பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சிந்து வெளிப் பகுதிகளில் அகழாய்வு நடைபெற்றது !

* 1920ல் ஹரப்பாவில் முதல் முறையாக அகழாய்வை செய்தவர் ராம் பகதூர் தயாராம் சாஹினி.

* 1922ல் மொகஞ்சதாரோவில் அகழாய்வை மேற்கொண்டவர் ஆர்.டி. பானர்ஜி என்றும் அறிகிறோம்!

* 1924ம் ஆண்டு ஜுன் மாதத்தில் சிம்லாவில் ஜான் மார்ஷல் ஒரு கருத்தரங்கம் நடத்தினார். அங்கு சிந்து வெளி அகழாய்வில் கண்டெடுத்தப் பொருட்களை காட்சிப்படுத்தினார்.

* ஹரப்பா – மொகஞ்சதாரோ இடையே 700 கி.மீ. தொலைவு இருந்தாலும் அந்த இரண்டு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் பல ஒற்றுமைகளை கண்டறிந்தார். அதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டார் !

* ஜான் மார்ஷல் அந்த ஆய்வின் முடிவுகளை லண்டனுக்கு கொண்டு சென்று அறிவிக்கின்றார். அவைகள் 20.09.1924 அன்று லண்டன் இதழில் இவ்வாறு வெளியிடப்பட்டது!

க. சுபாஷினி

First Light on a Long Forgotten Civilization – New discoveries of an unknown Pre historic Past in India – By John Marshall. Director General of Archeology in India.

* இது போன்ற பல சுவாரஸ்யமான கேள்வி பதில்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

மேலும், சிந்து வெளிப் பண்பாட்டின் முக்கியமான அடையாளங்கள்; சிந்து வெளியில் திராவிடப் பரிமாணம்; கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகம் (K.V.T. Complex) இடப்பெயர் ஆய்வுகள். இன்னும் பல.

* தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் க. சுபாஷினி அவர்களின் சீரிய முயற்சியால் சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான விளக்கங்களைப் பெற்று ஒரு தொகுப்பு நூலாக, தமிழர்களின் அறிவுப் பசிக்கு நல்லதொரு ஊட்டச்சத்தாக வழங்கியதற்காக இருவரையும் பாராட்டுகிறேன் !

இந்த நூலை ஒவ்வொருவரும் குறிப்பாக மாணவர்கள் படித்துத் தெளிவு பெற வேண்டும்!

திராவிடர்களின் கடந்த கால வரலாற்றிலிருந்து நிகழ்கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர் காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்து விட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்!

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

*************

சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!
சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் நேர்காணல்
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு
முதல் பதிப்பு – 2024
பக்கங்கள் 98
விலை: ரூ. 120/-

#sanga_ilakkiyam_enum_sindhuveli_thiravukol_book #சங்க_இலக்கியம்_எனும்_சிந்து_வெளி_திறவுகோல் #ஆர்_பாலகிருஷ்ணன் #r_balakrishnan

Comments (0)
Add Comment