1984 – கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு.
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு என்ன பெயர் வைப்பது என ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பெண் புலவர்களின் பெயர்கள் உள்பட எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல, சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல, இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் – அன்னை தெரசா!
ஆம். அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம். (Mother Teresa Women’s University)
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்! அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க – அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.
இதையெல்லாம் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது:
“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து.”
நன்றி: தோழர் கணேசன் முகநூல் பதிவு