பொன்வண்ணனை தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட படம், அமீரின் ‘பருத்திவீரன்’. அதற்கு முன்னர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தி, சரவணனுக்கு இணையான பெயரை அப்படம் அவருக்குப் பெற்றுத் தந்தது.
அதன்பிறகு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அள்ளிக்கொள்ளாமல், இன்று வரை நிதானமாகத் தேர்ந்தெடுத்து தனக்கான பாத்திரங்களில் தோன்றி வருகிறார். அதன் வழியே ரசிகர்கள் நினைவில் கொள்ளத்தக்க ஒரு இடத்தையும் வகிக்கிறார்.
இன்று அவருக்கு 60-வது பிறந்தநாள். இந்த கொண்டாட்டத்தின்போது, அவர் நடித்தவற்றில் சில படங்களைத் திரும்பிப் பார்க்கலாமா?!
புதிய முகம்!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொன்வண்ணனின் இயற்பெயர் சண்முகம்.
எண்பதுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்த இவர், அடிப்படையில் ஒரு ஓவியர். அதனால், கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
கலை சார்ந்து இயங்கி வந்த அந்த காலகட்டத்தில், இயக்குனர் பாரதிராஜா மீது பெரும் அபிமானம் கொண்டிருந்தார். அதுவே, அவரிடம் உதவி இயக்குனராகச் சேரச் செய்தது.
தொண்ணூறுகளில் பாரதிராஜா இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார் பொன்வண்ணன். அப்போது புது நெல்லு புது நாத்து, கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் நடித்தார்.
அதற்கிடையே, 1992-ல் விக்னேஷ், வினோதினி ஜோடியைக் கொண்டு ‘அன்னை வயல்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் பெரிதாகக் கவனிப்பைப் பெறவில்லை.
அதனால், தொடர்ந்து சில படங்களில் வில்லன், குணசித்திர பாத்திரங்களில் இடம்பெற்றார். அப்படித்தான் காந்தி பிறந்த மண், மாமன் மகள், ரெட்டை ஜடை வயசு, பெரியதம்பி, அண்ணன், பூமகள் ஊர்வலம், வீரநடை போன்ற படங்களில் நடித்தார்.
இந்த காலகட்டத்தில் சுவலட்சுமியைக் கொண்டு ‘ஜமீலா’ என்றொரு படத்தையும் இயக்கினார் பொன்வண்ணன். 2002 ஷாங்காய் திரைப்பட விழாவில் அது கவனிப்பைப் பெற்றது.
ஆனாலும், தியேட்டர்களில் வெளியிடப்படும்போது ‘நதிக்கரையினிலே’ என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனாலேயே கவனிக்கப்படாமல் போனது.
மூன்றாவது முறையாக, ‘கோமதிநாயகம்’ என்ற படத்தை இயக்கினார் பொன்வண்ணன். கிராமத்து பின்னணியில் அமைந்த கமர்ஷியல் படமாகக் காட்சியளித்தபோதும், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதில், அவரே நாயகனாக நடித்தார்.
அது, அவர் நடித்த ‘அண்ணாமலை’ சீரியல் பாத்திரத்தை நினைவூட்டும்விதமாக உருவாக்கப்பட்டிருந்தது.
அதுநாள்வரை பொன்வண்ணன் நடித்த படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் அனைத்துமே பெரும்பாலும் ஒரேமாதிரியான சித்தரிப்பைக் கொண்டிருந்தன.
அதனாலோ என்னவோ, ராமின் ‘பருத்திவீரன்’ படத்தில் ‘கழுவன்’ பாத்திரத்தில் வேறொரு தோற்ற்த்தில் நடித்தார்.
ஆனால், அது அவருக்குத் தந்த உயரம் அபரிமிதமானதாக இருந்தது. ஒரு ‘புதியமுகமாக’ அவரைக் காட்டியது.
2008இல் வெளியான மிஷ்கினின் ‘அஞ்சாதே’ படத்தில் கீர்த்தி எனும் சிறப்புப்படை போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
அந்த இரு வேறு படங்களில் அமைந்த அவரது இருப்பு, தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பாத்திரங்கள் கிடைக்க வழி வகுத்தது.
பிறகு அயன், பேராண்மை, சிங்கம்புலி, வாகை சூட வா, தலைவா, சதுரங்க வேட்டை என்று பல படங்களில் இடம்பிடித்தார் பொன்வண்ணன்.
கெட்டப் மாற்றம்!
‘பருத்தி வீரன்’ படத்தில் கிடா மீசையோடு நடித்தார் பொன்வண்ணன். அந்த படத்தில் அவரது உடல்மொழியில் மிடுக்கு அதிகமிருக்கும்.
அதே கையோடு ‘அஞ்சாதே’வைப் பார்த்தால், ‘சத்யா அங்க போய்க்கிட்டிருக்கான்னா நாம இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்’ என்று அமைதியும் கலவரமும் கலந்த குரலில் பேசுவார். ’பேராண்மை’யில் ஆணவமிக்க ஒரு அதிகாரி என்று நம்பும்படியாக நடித்திருப்பார்.
அதே பொன்வண்ணனை ‘சிங்கம்புலி’யில் ஜீவாவின் தந்தையாகப் பார்க்கும்போது, ‘அவரா இவர்’ என்று ஆச்சர்யம் அடைய வைத்திருப்பார். ஏ.எல்.விஜய்யின் ‘தலைவா’ படத்திலும் அப்படித்தான் ஆச்சர்யப்படுத்தியிருப்பார்.
இந்த கெட்டப் மாற்றம் சிறிய அளவில் இருந்தாலும், அது அவரது உடல்மொழியோடு கலந்து வேறோரு நபராகத் திரையில் வெளிப்படுத்தும்.
வட்டாரப் பேச்சு வழக்குக்கும், களம் சார்ந்த கலாசாரப் பழக்க வழக்கங்களுக்கும் தனது நடிப்பில் அவர் தரும் முக்கியத்துவம் அபாரமாக இருக்கும்.
போலவே, பெரிய படங்களில் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் சின்ன பட்ஜெட் படங்களிலும் தலைகாட்டுவார். இப்படிப் பல விஷயங்கள் அவரது படங்களில் காண முடியும்.
சரண்யா நடித்த ‘ராம்’, ‘எம் மகன்’, ‘களவாணி’ போன்ற படங்கள் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தன. அந்த இயக்குனர்களின் அடுத்த படங்களில் பொன்வண்ணன் நடித்தார், புகழ் பெற்றார்.
அந்த படங்கள் வெளியானபோது, தனக்கான பாத்திரங்களை இவர் தேடித் தேடிக் கண்டடைகிறாரோ என்று கூடத் தோன்றியது. அந்தக் கேள்வி இன்றும் மீதமிருக்கிறது.
இதோ, இப்போது பட வாய்ப்புகளைக் குறைத்துக்கொண்டு உப்பு புளி காரம், சிறகடிக்க ஆசை தொடர்களில் நடித்து வருகிறார் பொன்வண்ணன்.
பொதுவெளியிலோ, நண்பர்கள் உடனான பேச்சுகளை வீடியோபதிவு செய்கையிலோ, அவரிடம் திரைப்பட இயக்கம், நடிப்பு தாண்டிப் பல கிளைகள் விரிவதைக் காண முடிகிறது.
எதிர்காலத்தில், தன்னை வேறுபட்ட ஆளுமையாக முன்னிறுத்தும் வகையில் வேறு தளங்களில் அவர் செயல்படக்கூடும் என்றும் தோன்றுகிறது.
இனிவரும் நாட்களில் ஒரு நடிகராக, இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். கூடவே, அவருக்குள்ளிருக்கும் இயக்குனருக்குத் தீனி போடும்விதமான படைப்புகளையும் படைக்க வேண்டும்..!
– மாபா