லப்பர் பந்து – தியேட்டர்களில் திருவிழாவை நிகழ்த்துகிற படம்!

ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்படுத்த வேண்டும், உத்வேகப்படுத்த வேண்டும், வாழ்வின் இன்ப துன்பங்களை மறந்து சில மணி நேரங்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்த வேண்டும்.

அனைத்தையும் தாண்டி, சக மனிதர்கள் மீதான இணக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்.

அதனை ஒரு கமர்ஷியல் படத்தினால் எப்படி நிகழ்த்த முடியும் என்று கேள்விகளுக்கு எம்ஜிஆர் தொட்டு தமிழ் திரையுலகில் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பட வரிசையில் சேர்ந்திருக்கிறது புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தந்துள்ள ‘லப்பர் பந்து’.

இதில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, காளி வெங்கட், பாலசரவணன், ஜென்சன் திவாகர், கீதா கைலாசம், கர்ணன் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, ‘லப்பர் பந்து’ அப்படியென்ன மாயாஜாலத்தை திரையில் நிகழ்த்தியிருக்கிறது?

ஒரு ‘ஈகோ’ மோதல்!

கடலூர் வட்டாரத்திலுள்ள வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கெத்து என்கிற பூமாலை (அட்டகத்தி தினேஷ்), அன்பு (ஹரீஷ் கல்யாண்). கிரிக்கெட் என்றால் இருவருக்கும் உயிர்.

சிறு வயதில் பூமாலையில் கிரிக்கெட் ஆட்டம் பார்த்து, தானும் அதே போல ஆட வேண்டுமென்று விரும்பியவர் அன்பு.

ஆனால், சில ஆண்டுகள் கழித்து மைதானமொன்றில் சந்திக்கும்போது ‘ஈகோ’வினால் இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகிறது.

’தன்னுடைய ஆட்டத்தை எவன் குறை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்கிற எண்ணம் இருவரையும ஆட்டிப் படைக்கிறது.

ஒருவரையொருவர் வெற்றி கொள்ள வேண்டுமென்கறு இருக்கிற வேட்கையை ஏற்படுத்துகிறது.

அது, மைதானத்தில் இருவரும் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு உச்சம் பெறுகிறது.

இரண்டு காதல்கள்!

வேறு சாதியைச் சேர்ந்த யசோதையை (சுவாசிகா) காதலித்து திருமணம் செய்து தன் வீட்டுக்கு அழைத்து வந்தவர் பூமாலை. இருபதாண்டுகள் தாண்டிய பிறகும், ’வளரும் தேக்குமரமாக’ இருந்து வருகிறது அவர்களது காதல்.

அப்படிப்பட்ட மனைவியிடம், வேலைக்குச் சென்றுவருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் பூமாலை.

இத்தனைக்கும் அவர் சுவரில் ‘பெயிண்டிங்’ வரைவதில் வல்லவர். ஆனால், அதனைப் பயன்படுத்திச் சம்பாதிக்காமல் கிரிக்கெட்டே கதி என்று கிடக்கிறார்.

இன்னொரு பக்கம் நர்ஸ் ஆக வேலை பார்க்கும் துர்காவை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) காதலிக்கிறார் அன்பு. அவரும் பதிலுக்குக் காதல் கொள்கிறார்.

தனது பெற்றோரிடம் துர்காவை அறிமுகப்படுத்துகிறார் அன்பு.

பதிலுக்கு, அவர்களும் பெண் கேட்டு துர்கா வீட்டிற்குச் செல்கின்றனர். அந்த துர்கா, பூமாலையின் ஒரே மகள்.

பெண் கேட்டு வரும் அன்புவின் பெற்றோரிடம், ‘நீங்க என்ன ஆளுங்க’ என்று கேட்கிறார் பூமாலையின் தாயார் (கீதா கைலாசம்). உடனே, ‘நானோ, அவரோ அதெல்லாம் பார்க்க மாட்டோம்’ என்கிறார் யசோதை.

‘எல்லாமே சுபம்’ என்றான நிலையில், அதனைச் சிதைத்தாற் போல வந்து சேர்கிறது அன்பு – பூமாலை மோதல்.

பூமாலையின் வீட்டிற்குத் துர்காவைப் பார்க்க வரும்போது தான் அன்புவுக்கு உண்மை தெரிய வருகிறது.

தான் பாசம் கொட்டி வளர்க்கும் மகளுக்காக, தனது ஈகோவை பூமாலை விட்டுத் தந்தாரா? காதலிக்காகத் தனது ஈகோவை அன்பு குழி தோண்டிப் புதைத்தாரா?

இந்த கேள்விகளுக்கு அப்பாத்திரங்களின் ’ஈகோ’வானது ‘இல்லை’ என்று பதிலளிக்கிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள் எத்தகையவை, அது தீர்ந்ததா, இல்லையா என்று சொல்கிறது ‘லப்பர் பந்து’வின் மீதி.

கொண்டாட்ட மனநிலை!

‘லப்பர் பந்து’வின் முழுக்கதையையும் சொன்னபிறகும் கூட, நம்மால் இப்படத்தைக் காண முடியும். அது எப்படி?

நமக்குப் பிடித்துப்போன படத்தை மீண்டும் மீண்டும் சலிக்காமல் பார்ப்போமே, அதே காரணம் தான் இதன் பின்னும் இருக்கிறது. அந்த அளவுகு ‘பிட் அண்ட் ஹிட்’டாக இருக்கிறது இப்படத்தின் திரைக்கதை.

இரு பாத்திரங்களுக்கு இடையேயான முரண், அதனால் இறுகும் பிரச்சனை, அது ஏற்படுத்தும் பாதிப்பு, இறுதியாக அனைத்தும் தீர்ந்து ‘சுபம்’ என்று வழக்கமான ஒரு ‘கமர்ஷியல் படமாகவே’ இப்படமும் இருக்கிறது.

ஆனால், படம் பார்க்கும்போதும், பார்த்து முடிந்தபிறகும் உண்டாகிற கொண்டாட்ட மனநிலை இருக்கிறதே! அதுவே ‘லப்பர் பந்து’வின் யுஎஸ்பி. புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவை நாம் உற்று நோக்குவதற்கான காரணமும் அதுவே.

சிறப்பான உருவாக்கம்!

நாற்பதுகளைத் தொட்டவர்களாக அட்டகத்தி தினேஷ் – ஜென்சன் திவாகர், இன்னொரு புறம் இருபதுகளைத் தாண்டியவர்களாக ஹரீஷ் கல்யாண், பால சரவணன். இக்கூட்டணிகளின் இருப்பு பல காட்சிகளில் ரசிகர்களைத் தெறிக்க வைக்கிறது.

இது போதாதென்று ‘அதீத காதலை’ எந்தவித நிபந்தனைகளுமின்றி வெளிப்படுத்தும் பாத்திரங்களில் நாயகிகள் சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளனர்.

இவர்களைத் தாண்டி உறவின், நட்பின் மேன்மையைச் சொல்ல கீதா கைலாசம், கர்ணன் ஜானகி, தேவதர்ஷினி, காளி வெங்கட், அவரது மகளாக நடித்தவர் என்று பலர் இதில் வருகின்றனர்.

தொலைக்காட்சி பிரபலங்களான டிஎஸ்கே, ’ஆதித்யா’ கதிர் தங்கள் பங்குக்கு அதகளம் செய்கின்றனர்.

கிரிக்கெட் விளையாடுபவர்களாக, அப்போட்டிகளை நடத்துபவர்களாக, அதனை வேடிக்கை பார்ப்பவர்களாகச் சில நூறு பேர் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஆனால், இக்கூட்டத்தைத் திரையில் பிரமாண்டமாகக் காட்டாமல், இயல்பாக நாமே கதை நிகழும் களத்திற்குச் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு.

வீரமணி கணேசனின் கலை வடிவமைப்பில் கதாபாத்திரங்களின் வசிப்பிடங்கள், மைதானங்கள் காட்டப்பட்ட விதம் ‘யதார்த்தம்’ என்றே எண்ண வைக்கிறது.

விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்பதால் ‘எபெக்ட்’களை வாரியிறைக்காமல், சம்பந்தப்பட்ட கதையின், கதாபாத்திரங்களின், காட்சிகளின் தன்மையை ரசிகர்கள் மனதில் உணர்த்தும் வகையில் நேர்த்தியாக அமைந்திருக்கிறது மதன் ஜியின் படத்தொகுப்பு.

ஷான் ரோல்டனின் பின்னணி இசையமைப்பு இப்படத்தின் பெரும்பலம்.

ஆனால், காட்சிகளோடு அது நம்மை ஒன்றச் செய்துவிடுவதால் ‘சில்லாஞ்சிறுக்கியே’ பாடலில் மட்டுமே அவரைக் குறித்த நினைவு வந்து போகிறது.

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, ‘லப்பர் பந்து’வில் வட மாவட்டங்களில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வியலைக் காட்டியிருக்கிறார். அங்குள்ள சாதி வேறுபாடுகள், பாலின சமத்துவமின்மை உட்படப் பல பிரச்சனைகளை இதில் ‘பூடகமாக’ சொல்லியிருக்கிறார்.

பாலசரவணன், காளி வெங்கட்டோடு உரையாடும் காட்சியொன்றில் ’சென்சார் போர்டு இதனை அனுமதிக்குமா’ என்ற சிந்தனையே எழாத அளவுக்கு மிக நாசூக்காக, அதேநேரத்தில் மிக எளிமையாக ஒரு சமூகப் பிரச்சனையைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு கமர்ஷியல் படத்தில் அவ்வாறு சொல்வதற்கும், அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதற்குமான புரிதலை உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இந்தப் படத்தில் சில பாத்திரங்கள் ஆங்காங்கே வந்து போயிருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சி முழுமையாக அமையவில்லை. அதில் நடித்தவர்களின் கால்ஷீட் குறைபாடுகள் அல்லது வேறு சில பிரச்சனைகளால் கூட அது நிகழ்ந்திருக்கலாம்.

ஆனால், அந்த குறையே தியேட்டரில் அமர்ந்திருக்கையில் தென்படாத அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார்.

மிக முக்கியமாக, நாயகன் அட்டகத்தி தினேஷை விஜயகாந்த் ரசிகராகக் காட்டியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அவர் நடந்துவரும் காட்சியில், பின்னணியில் ‘நீ பொட்டுவச்ச தங்கக்குடம்’ பாடல் ஒலிக்கும்போது விஜயகாந்த் ரசிகர்கள் கண்ணீர் விடுவார்கள்.

தொண்ணூறுகளில் விஜயகாந்தை கொண்டாடியவர்கள் அப்படிப்பட்ட ‘உணர்ச்சிப் பிரவாகத்தை’ நிச்சயம் எதிர்கொள்வார்கள். அந்த வகையில் விஜயகாந்துக்கான ஒரு மரியாதையாகவும் அமைந்துள்ளது இப்படம்.

வெகுநாட்களுக்குப் பிறகு, ’மிகச் சிறப்பான உருவாக்கத்தைக் கொண்ட ஒரு கமர்ஷியல் படம்’ என்ற திருப்தியைத் தருகிறது ‘லப்பர் பந்து’.

எல்லா படமும் அப்படியொரு இலக்கைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது என்றபோதும், சமீபகாலப் படங்களில் தென்படும் வன்முறை, ஆபாசம் உள்ளிட்ட சில விஷயங்கள் அதனைக் கேள்விக்குள்ளாக்கின.

‘இல்லை, இன்றைய சூழலிலும் அப்படியொரு படம் தர முடியும்’ என்று நிரூபித்திருக்கிறது ‘லப்பர் பந்து’.

அனைத்துக்கு மேலாக, இந்தப் படம் பார்க்கிறபோது, பார்த்து முடித்த பிறகு, நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கொண்டாட்ட மனநிலை இருக்கிறதே!

அதுதான் ‘லப்பர் பந்து’வின் வெற்றி என்பேன். அது, வெகுசாதாரணத்தில் வாய்க்காதது.

’இப்படிப் புகழும் அளவுக்கு இந்தப் படத்தில் அப்படியென்ன தான் இருக்கிறது’ என்பவர்கள் தியேட்டரில் ‘லப்பர் பந்து’வை ரசியுங்கள்!

அதன்பிறகு, அதனைத் தந்த தமிழரசன் பச்சமுத்து குழுவினரைக் கொண்டாடுவதா, வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்வீர்கள்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
லப்பர் பந்து விமர்சனம்
Comments (0)
Add Comment