இலங்கை அதிபர் தேர்தல்: சிதறும் தமிழர் வாக்குகள்!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த தேசம் தவறான பொருளாதார நடவடிக்கையால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனால் வெடித்த வன்முறைக்கு பயந்து இலங்கையை ஆண்ட கோத்தபய ராஜபக்ஷே, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றார்.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பதவியேற்றார். இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தின்படி, இடைக்காலத்தில் அதிபராக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும் வரைதான் அதிபராக இருக்க முடியும்.

நவம்பர் 17-ம் தேதி ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

களத்தில் 38 பேர்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய நாளை (21.09.2024 – சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிட மொத்தம் 39 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவர் அண்மையில் மரணம் அடைந்தார். இப்போது 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இலங்கையில் இதுவரை நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் 38 வேட்பாளர்கள் களமிறங்கி இருப்பது இதுவே முதன்முறை. இந்தத் தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா களம் இறங்கியுள்ளார். இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.

முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷேவும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை.

தமிழ்க் கட்சிகளின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேத்திரன் என்ற தமிழர் களமிறங்கி உள்ளார்.

இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி தமிழர் கட்சிகள் சார்பில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கிறது.

ஆனால், அதே கட்சியின் மூத்த தலைவர்கள், பொது வேட்பாளராகப் போட்டியிடும் அரிய நேத்திரனை ஆதரிக்கின்றனர். அனுரா திசநாயகேவும் தமிழர்களின் வாக்குகளை கணிசமாக பெரும் வாய்ப்புள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷே சகோதரர்கள், இந்தத்  தேர்தலில் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அதேபோல் அந்த நாட்டின் பழமையான கட்சியான இலங்கை சுதந்திராக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் காணாமல் போய் விட்டன.

பலர் முட்டி மோதினாலும், போட்டி என்னவோ விக்ரமசிங்கேவுக்கும் திசநாயகேவுக்கும் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று மாலை, இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது தெரிந்துவிடும்.

  • மு.மாடக்கண்ணு
Comments (0)
Add Comment