ஒரே நாடு – ஒரே தேர்தல்: இப்போதைக்கு வாய்ப்பில்லை!

தேர்தல், ஜனநாயகத்தின் ஆணி வேர். இந்தியாவில், மாநிலங்களை ஆளும் சட்டசபைகளுக்கும் நாட்டை ஆட்சி செய்யும் மக்களவைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரைக்கும் மக்களவைக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால், இந்த நடைமுறை கை விடப்பட்டது.

பிரதான காரணம் என்ன தெரியுமா? மத்திய அரசின் வெறுப்புணர்வு அரசியல் தான்.

மாநிலங்களில் ஆட்சி செய்யும் எதிர்க்கட்சி அரசுகளை, மத்திய அரசு, ‘அன்னிய நாடுகளா’கவே பார்க்கின்றன.

இந்தியாவை நெடுங்காலம் ஆண்ட காங்கிரஸ் மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சேர்த்தே சொல்கிறோம்.

உப்பு, சப்பில்லாத காரணங்களைச் சொல்லி, மாநில அரசுகளை, அதன் ஆயுட்காலம் முடியும் முன்பே மத்திய அரசு கலைத்தது. 1980-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி, ஒரே வினாடியில் 10 மாநில அரசுகளை கலைத்தது ஆகச்சிறந்த உதாரணம்.

அதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த பல்வேறு மாநில அரசுகள் ஐந்தாண்டு காலம் பூர்த்தியாகும் முன்பாகவே கலைக்கப்பட்டுள்ளன. 6 மாதங்களில் அந்த மாநிலங்கள் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள நேர்ந்தன.

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்‘ எனும் நடைமுறை, தடம் புரண்டதற்கு மத்திய அரசின் இந்த ‘கலைப்பு‘ நடவடிக்கை முதல் காரணமாக அமைந்தது.

நிபுணர் குழுவை அமைத்த மத்திய அரசு

இந்த நிலையில்தான், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, “நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ நடைமுறையை மீண்டும் அமல் செய்வோம்” என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்தது, அதற்கான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டது.

மக்களவை – சட்டசபைகள் – உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு.

இந்தக் குழு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் ஓர் அறிக்கை தயாரித்து, அதனை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்தது.   

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் – அதன்பிறகு 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்பதே இந்த குழுவின் முக்கிய பரிந்துரை.

இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து ஆலோசனை நடந்தபோது, 80 சதவீத மக்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டார்.

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்‘ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல – இது மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் முயற்சி – இத்திட்டம் வெற்றி பெறாது” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப் பதிவில், ‘’ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது – இது, இந்தியாவின் கூட்டாட்சி இயலை சிதைத்துவிடும் – ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு கிடைப்பது, சந்தேகம்?

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்‘ திட்டத்தை அமல்படுத்த, அரசியலமைப்புச் சட்டத்தில் குறைந்தது 6 திருத்தங்கள் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

அதன்பிறகு, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் இந்தத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குத் தனிப் பெரும்பான்மை உள்ளது. ஆனாலும், மூன்றில் 2 பங்கு ஆதரவு கிடைப்பது சந்தேகமே.

மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 545. இதில், மூன்றில் 2 பங்கு என்றால், 364 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால், மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 292 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

அதேபோல, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் மூன்றில் 2 பங்கு என்றால், 164 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு 112 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது.

எனவே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்..

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவில் சட்ட ஆணையம், தனது அறிக்கையை அளிக்க உள்ளது.

மக்களவை, சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 2029-ம் ஆண்டு முதல் ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த சட்ட ஆணையம் பரிந்துரைக்கும் வாய்ப்புள்ளதாக சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட மகளிர்  இட ஒதுக்கீடு சட்டத்தையே இந்த நிமிடம் வரை அமல்படுத்த இயலவில்லை என்பதை இங்கே நினைவு கூற வேண்டும்.

– மு.மாடக்கண்ணு

Comments (0)
Add Comment