கதிர்காம முருகனை தரிசித்து இருக்கிறீர்களா?

அண்மையில் தமிழக அரசின் அறநிலையத்துறை ஏற்பாட்டின் பேரில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடத்தப்பட்டது.

அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து முருகனை வழிபடும் பக்தர்களும் முருகன் குறித்த ஆய்வாளர்களும் வந்திருந்தார்கள்.

அந்த விழாவின்போது பதுளை வ. ஞானபண்டிதன் எழுதிய ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்நூலை பதிப்பித்து வெளியிட்டவர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன்.

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் முருகனுக்கான கோவில்கள் இருந்தாலும் கதிர் காமத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

அந்த சிறப்பு இயல்பை விவரிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது 168-பக்கங்களில் உருவாகி இருக்கும் ஞானபண்டிதரின் இந்த நூல்.

இதையொட்டி கதிர்காம கோவிலைப் பற்றிய என்னுடைய நினைவில் இருக்கும் பதிவு இது.

—————————

கதிர்காம முருகனின் புகழ் பரவுக உலகம் எங்கும்
முருகனின் அருள் வேண்டும் அவன் புகழ் பட…

என்ன ஒரு அற்புதமான தருணம். இந்தியாவில் மிகவும் பிரச்சித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவன் கோவிலிலிருந்து முருகன் புகழை எழுதுவதில் என் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள நல்லூர் முருகன் கோவில், மாவிட்டபுரம் முருகன் கோவில், இணுவில் கந்தசாமி கோவில் என்று மிகவும் பிரசித்துப் பெற்ற கோயில் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், கதிர்காம முருகன் கோவிலில் நான் கண்ட அனுபவம் என்பது முற்றிலும் வேறுபட்டது.

இனம், மதம், மொழி வேறுபாடின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வழிபாடும் திருவிழாவாக கதிர்காம முருகன் விழா கொண்டாடப்படுகிறது.

சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் சந்தோஷமாக, உற்சாகமான முறையில் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.

பல பிரதேசம், மாவட்டம், பல வெளிநாட்டு மக்கள் என்று பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்வதை என்னுடைய சிறுவயது காலத்தில் நேரடியாகப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

மேலும், கொழும்பில் உள்ள மிகவும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவருடனும் கனிவுடனும், அன்பாகவும், கஷ்டப்படும் மனிதருக்கும் தன்னால் முடிந்த அனைத்து விதமான உதவியை கனிவாக அனைவருக்கும் செய்து கொடுக்கும் சிறந்த முருக பக்தர் திரு. விக்ரமசிங்க ஐயா அவர்கள் மூலம் பல தடவை முருகன் புகழையும் அற்புதங்களையும் குறிப்பாக கதிர்காம முருகனின் புகழையும் அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

திரு. வ. ஞானபண்டிதர் அவர்கள் அண்மையில் வெளியிட்ட ‘கதிர்காமத் திருமுருகன்’ எனும் புத்தகத்தில் முருகனின் புகழ்ச் சிறப்பை மிக்க அருமையான அனுபவத்தோடு எழுதியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகிறது.

இத்தருணத்தில் இவற்றோடு என்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் எனும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறது என் உள்ளம்.

என்னுடைய சிறுவயதில், இரண்டு தடவை கதிர்காமம் சென்று தரிச்சிக்கும் வாய்ப்பை எனக்கு முருகன் அருளினான். இந்தத் திருவிழாவானது 25 லிருந்து 30 நாட்கள் நடைபெறும் என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

திருவிழா காலத்தின்போது பின்னேரப் பகுதியில் ஒவ்வொருநாளும் பல வகையான நடன வகைகள், யானை வருகைக்குப் பின்னால் வருபவர்கள் ஊர்வலமாக வருவதைப் பார்ப்பதற்கே ஏராளமான மக்கள் தனது குடும்பத்தோடு அங்கு வந்து ஆலயத்தைச் சுற்றியும், அருகாமையில் உள்ள வீடுகளில் தங்கியும் இருந்து திருவிழாவைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த நடன வகைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், சுவாரசியமாகவும் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சி தரும் வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு.

இந்தக் கோவிலில் உள்ள சிறப்பு, முருகப் பெருமானைப் பக்தியுடன் சிங்கள மக்கள் பூசை செய்வதுதான்.

அங்குள்ள முருகனை திரையில் மட்டுமே காண முடியும். கருவறையில் உள்ள முருகப் பெருமானை நேரடியாக யாராலும் பார்க்க முடியாது என்பதே சிறப்பு.

நான் பார்த்து ரசித்த ஒன்று அங்குள்ள கோவில் வளாகத்தை மிக நேர்த்தியாகவும் தூய்மையாகவும், அங்குள்ள மக்கள் பராமரித்து வருவது பாராட்டக் கூடிய ஒன்று.

சிலர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு உணவு, மூலிகை நீர், மருந்து வகைகள், பழங்கள், வேறு பல உணவுப் பொருட்களையும் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் இலவசமாக வழங்குவார்கள்.

சிலர் தனது பிள்ளைகளுக்கு அந்த இடத்தில் வந்து மொட்டை போடுவார்கள். பல மக்கள் வருகை தரும் நாளிலிருந்து விரதம் கடைபிடித்துக் கொண்டிருப்பார்கள், சில முருக பக்தர்கள்.

பல மாதங்களுக்கு முன்பாகவே பாதயாத்திரை மேற்கொள்வார்கள். திருவிழா காலத்தில் ஆலயத்தில் வந்து அடைவார்கள். இது ஆலயத்தின் தனிச் சிறப்பு.

மேலும் மிக விசேஷமான ஒன்று – திருவிழாவின் கடைசி நாள். இதை மகாவழி கங்கையில் யானை நீர் வெட்டு என்பார்கள். இதைக் காண்பதற்கும் மக்கள் அதிகமாக வருவார்கள்.

ஏழுமலை என்று சொல்லக் கூடிய மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆலயம் உள்ளது. அதில் வேல் மீது அவல் சாதம் சாத்தும் நிகழுவு தினம்தோறும் நடைபெறும்.

அந்த அவல் பிரசாதமாகக் கொடுக்கப்படும். அதன் சுவையை அளவிட்டுச் சொல்ல முடியாது. அவ்வளவு சுவையாக இருக்கும்.

இது இந்த மலைக்கு இருக்கக் கூடிய தனிச் சிறப்பு. இந்த மலைக்கு எதிர்த்திசையில் வள்ளி, தெய்வானை கோவிலும் அமைந்துள்ளது. இதைச் சுற்றிக் காடு தான் காணப்படும்.

ஆனாலும், மக்கள் அந்தக் கோவிலை தரிசனம் செய்யவும் விரும்புவர்கள். சிலர் வாகனத்திலும், சிலர் நடை பயணமாகவும் செல்வார்கள்.

அந்த இடத்திக்கு செல்பவருக்கு திருமணம் ஆகும் என்று அவர்களின் நம்பிக்கை. இதுபோல எத்தனையோ முருகனின் அற்புதங்களையும், சிறப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எத்தனையோ விதமான மக்கள் தங்களுடைய அனைத்துப் பிரச்சினைகளையும் மறந்து இந்தக் கோவிலுக்கு வருவதற்கென்றே தனிப்பட்ட முறையில் பக்தியுடனும், தூய்மையுடனும், ஒரு மனநிலையில் விரதமிருந்து தங்கள் குடும்பத்தோடு வந்து முழுமையாக அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு இனம்புரியாத மகிழ்ச்சியையும் மனதில் நிறைவையும் தருகிறது.

கதிர்காம முருகப் பெருமான் அங்கு வரகூடிய அனைத்து பக்தர்களுக்கும் அவனின் அருளை வழங்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுதல்.

முருகனிடத்தில் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எனக்குக் கிடைத்த இனிமையான அனுபவங்களில் கதிர்காம முருகன் கோவில் திருவிழா மிகவும் சிறப்பானது.

– தனுஷா, முதுகலை நாட்டியத் துறை மாணவி,
டாக்டர். எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
Comments (0)
Add Comment