மீண்டும் திரையில் தோன்றுவீர்களா இஷா..!

இஷா கோபிகரை நினைவிருக்கிறதா?. எண்பதுகள், தொண்ணூறுகளில் பிறந்தவர்களிடம் இப்படிக் கேட்டால் ரொம்பவே கோபப்படுவார்கள். காரணம், திரையில் அவர் ஆற்றிய ‘பெர்பார்மன்ஸ்’ அப்படி.

‘தரையில் இருந்து மூன்றடி உயரத்திற்கு மஞ்சு பரவி நிற்க, வெண்ணிற ஆடையில் ஒரு தேவ மங்கையைக் கண்டால் எப்படியிருக்கும்’ என்ற கனவுக்கு உருவம் தரக்கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

‘என் சுவாசக் காற்றே’ படத்தில் வரும் ‘தீண்டாய்.. மெய் தீண்டாய்..’ பாடலைக் கேட்டால், நிச்சயம் மேற்சொன்ன வார்த்தைகள் மனதில் மீண்டுமொரு முறை எதிரொலிக்கும்.

அதற்கும் முன்னே, பிரசாந்துடன் அவர் இணைந்து நடித்த ‘காதல் கவிதை’ இப்போதும் சிலருக்கு ‘பெஸ்ட் ரொமான்ஸ்’ படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சரி, அதனால் என்ன’ என்று கேட்பது புரிகிறது. அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட இஷா கோபிகருக்கு இன்று 48 வயது நிறைவடைந்துள்ளது. ஆனால், திரையில் அவர் விட்டுச் சென்ற பிம்பங்களை நினைவில் கொண்டவருக்கு, அவரது வயது என்பது வெறும் எண் மட்டுமே.

கவிதை அழகு..!

கல்லூரிக் காலத்தில் அழகிப் போட்டிகளில் பங்கேற்பது, பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்றிருந்தார் இஷா கோபிகர்.

அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் இடம்பிடித்தார். அதன் வழியே, ராம்கோபால் வர்மாவின் பார்வை பட்டு, வொஃய்ப் ஆஃப் வி.வரபிரசாத் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிறகு, நாகார்ஜுனா ஜோடியாக ‘சந்திரலேகா’ எனும் படத்தில் நடித்தார்.

தமிழில் இஷா கோபிகர் நடித்த முதல் படம், அகத்தியன் இயக்கிய ‘காதல் கவிதை’. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிற கதையைக் கொண்ட படமது.

உண்மையைச் சொன்னால், தான் இயக்கிய ‘காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற ஹீரா, தேவயானி பாத்திரங்களை சற்றே உருமாற்றி இதில் இஷா கோபிகர், கஸ்தூரிக்குத் தந்திருந்தார் அகத்தியன்.

’டயானா’ பாடல் மட்டுமல்லாமல், பிரசாந்த் உடன் இஷா இடம்பெற்ற காட்சிகள் அக்காலகட்டத்தில் வரவேற்பைப் பெற்றன. ஆனாலும், அப்படம் பெரிய வெற்றியைப் பெறாத காரணத்தால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இஷா பெறவில்லை.

1999இல் வெளியான ‘என் சுவாசக் காற்றே’, ‘நெஞ்சினிலே’, ‘ஜோடி’ ஆகிய மூன்று தமிழ் படங்களில் இடம்பிடித்தார் இஷா.

‘சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ’ பாடல் காட்சி, அரவிந்த் சாமியைப் பார்த்து இஷா வியப்பதாகக் காட்டியது. ஆனால், ரசிகர்களோ அதில் வந்த இஷாவைப் பார்த்து திக்கித் திணறிப் போனார்கள்.

‘என் சுவாசக் காற்றே’, ‘திறக்காத காட்டுக்குள்ளே’, ‘காதல் நயாகரா’ என்று அதில் வந்த ஐந்து பாடல்கள் இஷாவை ஆராதனை செய்பவை என்றால் அது மிகையல்ல.

எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘நெஞ்சினிலே’ படத்தில் ‘மனசே மனசே குழப்பமென்ன’, ‘அன்பே அன்பே’ பாடல்களில் விஜய் – இஷா கோபிகரின் ‘கெமிஸ்ட்ரி’ அற்புதமாக இருக்கும். அந்தப் படத்தின் தோல்வியையும் மீறி, அதன் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் நினைவில் இருக்கின்றன்.

‘ஜோடி’யில் பிரசாந்தை மணக்க முன்வருகிற பெண்ணாக நடித்திருப்பார் இஷா.

சிறிது இடைவெளிக்குப் பிறகு, ‘நரசிம்மா’வில் விஜயகாந்தோடு ‘காதல் ஆராரோ’ பாடலில் டூயட் பாடியிருந்தார். இது தவிர இரண்டு கன்னடப் படங்களில் நடித்தார்.

அனைத்திலும் கவிதைத்தனமான அழகுள்ளவராகவே காட்டப்பட்டிருந்தார் இஷா. அதனாலேயே, மிகச்சில படங்களில் நடித்திருந்தாலும் தென்னிந்திய ரசிகர்களால் அவர் நினைவுகூரப்படுகிறார்.

2001க்குப் பிறகு முற்றிலுமாக இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இஷா கோபிகர். ராம்கோபால் வர்மாவின் சில படங்களில் ‘பேட் கேர்ள்’ ஆகத் தோன்றினார்.

அதன்பிறகு நட்சத்திர ஜொலிப்பு மறைந்து, துணை பாத்திரங்களில் நடித்தார் இஷா. சமீபத்தில் அப்படித்தான் ‘அயலான்’ படத்தில் ரோபோ போன்று தோன்றினார்.

என்றென்றும் இஷா..!

மராத்தி, கன்னடம், இந்தி, தமிழ் படங்களில் தலைகாட்டினாலும், மீண்டும் முன்பு நடித்தது போலச் சுற்றிச் சுழன்று இஷா இன்னும் செயல்படவில்லை.

அதற்கு, அரசியலில் அவர் களமிறங்கியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதனையும் மீறி, அவரை மீண்டும் தொடர்ச்சியாகத் திரையில் காண மாட்டோமா என்று அவரது ரசிகர்கள் ஏங்குவது இயல்பான் ஒன்று.

அதற்குக் காரணம், வெறுமனே அழகுப்பதுமையாக மட்டும் அவர் திரையில் உலா வரவில்லை என்பதே.

திரையில் மௌனமாகத் தோன்றினாலும், சம்பந்தப்பட்டவரின் உருவம் ரசிகர்களோடு ஒரு உரையாடலை நிகழ்த்தும் வகையில் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இஷா கோபிகர். அதனாலேயே இன்றும் அவரது பாடல்கள் டிவியில் ஒளிபரப்பானால் கணிசமானோர் திரும்பிப் பார்க்கின்றனர்.

இஷா அறிமுகமான காலத்தில் தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்த அபிராமி தற்போது அக்கா, அண்ணி, அம்மா பாத்திரங்களில் இடம்பெற்று வருகிறார். அதேபோன்று இஷாவும் நடிக்கலாம்.

‘அப்படி நான் தோற்றமளிக்கவில்லையே’ என்று இஷா சொல்வாரானால், தமக்குத் தகுந்த பாத்திரங்களைத் தேர்வு செய்யலாம். மீண்டும் விளம்பரங்களில் இடம்பிடிக்கலாம்.

இத்தனை தூரம் இஷா பற்றிப் பேசக் காரணம் இருக்கிறது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘சுரபி’யில் இடம்பெற்ற ரேணுகா சஹானே போலவே, இஷா கோபிகரின் சிரிப்பும் நம்மை எளிதாகக் கவரக் கூடியது.

சட்டென்று மனதை ஊடுருவி நம்மோடு உறவாடக் கூடியது. அப்படியொரு நட்சத்திரம் மீண்டும் அதே போன்றதொரு மாயாஜாலத்தை நிகழ்த்த வேண்டுமென்று விருப்பப்படுவது இயல்புதானே..

வாருங்கள் இஷா.. ‘மீண்டும் திரையில் தோன்றுவீர்களா’ என்று அங்கலாய்க்கிற ரசிகர்களுக்காக, உங்களது இயல்புத்தன்மைமிக்க நடிப்பை, அழகை வெளிப்படுத்தி திரையில் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்க தருணங்களை உருவாக்குங்கள்.. ரசிகர்களை மகிழ்வியுங்கள்..!

– மாபா

Comments (0)
Add Comment