அழகான தோற்றப் பொலிவு என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக இருக்கிறது. முகத்தை அழகுபடுத்திக் கொள்ள எத்தனையோ வழிகள் இந்த நாகரிக உலகத்தில் தாராளமாக இருக்கின்றன. ஆனால், அது ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
பொதுவாக கேரளாப் பெண்கள் என்றால் ஒரு ஈர்ப்பு எல்லோருக்கும் உண்டு. அதற்கு காரணம் அவர்களது அழகான முகம்.
அந்த அழகு முகத்திற்கு அவர்கள் இயற்கை முறையில் தான் தீர்வு காண்கின்றனர். மிகக் குறைந்த விலையில் இயற்கையாகக் கிடைக்கும் சிவப்பு சந்தனம் தான் அதன் சீக்ரெட்.
சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக இருக்கின்றன.
சிவப்பு சந்தனத்தைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உண்டாகும் பலப் பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். இவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விரிவாகப் பார்க்கலாம்.
பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் முதலில் உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும்.
சருமச் செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த சிறப்பான வேலையை சிவப்பு சந்தனம் செய்கிறது.
முகம் ஆரோக்கியமாக இருக்க…!
முகத்தைக் கழுவிய பிறகு 2 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். முகம், கை, கால்களுக்குத் தடவி 10 நிமிடம் கழித்து சுத்தம் செய்துவர சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பருக்கள் மறைந்து முகப் பொலிவு அதிகரிக்கும்:
சந்தனம் – 2 டேபிள் ஸ்பூன்,
தயிர் அல்லது பால் – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, பருக்கள், வடுக்கள் மறைந்து முகத்தை அழகாக ஜொலிக்க வைக்கும்.
கருந்திட்டுக்கள் மறைய என்ன செய்ய வேண்டும்?
தேங்காய் பால் – 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 2 டீஸ்பூன்
சந்தனம் – 4 டீஸ்பூன்
எல்லாவற்றையும் சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள், கருந்திட்டு விரைவில் மறையும்.
முகத்தில் இருக்கும் சோர்வு நீங்கி ஈவன் டோனாக ஜொலிக்கும்.
இறந்த செல்களை நீக்கும் சந்தனம்:
இயல்பாகவே சிவப்பு சந்தனம் கொஞ்சம் சொரசொரவென்று இருக்கும். இது இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
இதற்கு சிவப்பு சந்தனம் – 1 டேபிள் ஸ்பூன்
மசித்த பப்பாளி – 2 டேபிள் ஸ்பூன்
இரண்டையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாள் போட்டு வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.
ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் இதனால் பலவிதமான சரும பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடி, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து எண்ணெய் பசை சுரப்பது குறையும்.
வெயிலின் கருமை நீக்கும் சந்தனம்:
சூரிய ஒளியால் முகம், கை, கால் என வெயில் படும் இடமெல்லாம் சருமம் கருமையாக மாறிவிடும்.
சீரற்ற நிறத்தில் சருமம் இருக்கும் அதை நீக்க சிவப்பு சந்தனம் உதவும்.
சிவப்பு சந்தனம் – 2 டேபிள் ஸ்பூன், தயிர் – தேவையான அளவு, இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி அரை மணி நேரம் கடந்த பிறகு கழுவுங்கள். இதனால் வெயிலினால் சருமத்திற்ற்ஏற்படும் கருமை நீங்கும்.
எனவே இயற்கையாக கிடைக்ககூடிய சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி முகத்தை என்றும் இளமையுடன் வைத்திருக்கலாம்.
– யாழினி சோமு