எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!

இயக்குனர் தாமிராவின் நெகிச்சியான நினைவுகள்

செப்டம்பர் – 18 : தேசிய முதல் காதல் தினம்

காதல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் என்பது இயங்காது. அன்பு என்ற பிணைப்பில் தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.

மனிதக் காதலில் ஆதாம், ஏவாள் தொடங்கி காவியக் காதல் கதைகள் இங்கு ஏராளம். ஆனால் நமக்குள் முதன்முதலில் தோன்றிய காதல் என்பது நிச்சயம் அது எல்லோருக்கும் காவியம் தான்.

பருவத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் தூண்டுதலில் நமக்குள் ஏற்படும் உணர்வுகள் காதலாக வெளிப்படுகிறது.

பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் எதுவாக இருந்தாலும் முதலில் தோன்றிய அன்பின் வெளிப்பாடு பசுமரத்து ஆணியாய் இதயத்தில் பதிந்துவிடும்.

இரண்டு இதயங்கள் இணைவது மட்டும் காதல் என்றால் அது அனேகமாக முதல் காதலில் தான் சாத்தியம். ஆயுட்காலம் வரை அழிக்கமுடியாத காவியமாய் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதயத்தில் எங்கோ ஒரு மூளையில் ஒட்டிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் முதல் காதல்.

இந்த, முதலில் தோன்றிய உணர்வை, முதல் காதலை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 18 -ம் தேதி ‘தேசிய முதல் காதல் தினம்’ நினைவு படுத்தப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காதல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மறைந்த பிரபல திரைப்பட இயக்குனர் தாமிரா கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் தாமிராவிடம் உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என்றார்.

“நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். எனக்கு அதுதான் முதல் காதல். அவளுக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறேன்.

அவர் எந்த பஸ்ஸில் வருகிறார் என்பதை அறிந்து கொண்டு அதைத் துரத்த ஆரம்பித்தேன். தினமும் அவள் போகும் பஸ்ஸை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்வேன்.

ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பஸ்சுக்கு முன்பாக நான் பேய் நிற்பேன். அவள் போய் இறங்கும் இடம் எனக்கு தெரிந்தாலும் அவள் என்னைப் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கத்துடன் காத்திருப்பேன்.

அவள் இறங்கும் இடம் வந்ததும் பஸ்ஸை விட்டு இறங்கியதும் அவள் கண்கள் என்னைத் தேடி திரும்பி பார்க்கும் அந்த பார்வை என் மனதுக்குள் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக துள்ளிக் குதிக்கும் அந்த பார்வைக்காக நாட்கணக்கில் நான் காத்திருதிருக்கிறேன்.

அவளும் நானும் காதலித்தோம். ஆனால் இருவீட்டாரும் கூடிப் பேசியதில் அவள் வீட்டில் பெண் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவள் வேறு மதம். நான் வேறு மதம்.

காலப்போக்கில் நான் திருமணம் செய்து கொண்டேன். அவள் என் காதலை மட்டும் சுமந்து கொண்டு திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்தாள்.

எனது மனைவி என் காதலியை எனக்கு திருமண செய்து வைப்பதாகக் கூறினார். என் காதலிக்கு அதில் உடன்பாடு இல்லை, எனக்கும் அதில் விருப்பம் இல்லை.

இரண்டு அன்பான பெண்களுக்கு நடுவில் நான் இருக்க விரும்பாமல் மறுத்துவிட்டேன்” என தனது முதல் காதல் அனுபவத்தை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் தாமிரா.

அவர் போல் எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கும். சேர்ந்த காதல் சில என்றால் சேராத காதல் எத்தனையோ இருக்கிறது.

எல்லா காதல்களும் காவியம் ஆவது இல்லையென்றாலும் எல்லோரும் மனதிலும் முதல் காதலுக்காக இதயத்தில் எங்கோ ஒரு மூளையில் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்போம்.

யாரோ ஒருவர் அவர் சாயலில் பார்க்கும்போது தூசித் தட்டி நினைவுகள் அசைபோடத் தொடங்கி விடும். காதலர்கள் மாறிப்போனாலும் காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

தேசிய முதல் காதலர் தினமான இன்று பழைய காதலை நினைத்து வருத்தப்படாமல், துணையாய் இருப்பவரை முதல் காதலை மறக்கும் அளவுக்கு காதல் செய்வோம்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment