பழம்பெரும் நடிகை பண்டரிபாய் சிவாஜியைப் பற்றி ஒரு முறை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி இது:
“அண்ணன் சிவாஜியை, எஸ்.வி.சகஸ்ரநாமத்தோட சேவா ஸ்டேஜில் நாடக நடிகராக இருக்கும்போதே எனக்குத் தெரியும்.
அப்பவே அண்ணன் ரொம்ப சின்சியர். ராத்திரியில் நடைபெறும் நாடகத்துக்கு மத்தியானத்தில் இருந்தே அண்ணன் நாடகக் கதாபாத்திரமாகி விடுவார்.
தூரத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு, அவர் ஏதோ சிந்தனையில் இருக்கிற மாதிரி மட்டுமே தெரியும். பக்கத்தில் போய் பார்த்தால் தான் அண்ணன் நாடகத்துக்குத் தயாராயிட்டுருக்குறதே தெரியும்.
மனசுக்குள்ளே அந்த கேரக்டரைக் கொண்டு வந்து இருப்பார். அதனால் பக்கத்துல யார் வந்தாங்க, போனாங்க என்பது கூட அவருக்குத் தெரியாது. அண்ணனோட முதல் கதாநாயகி நான் என்கிற பெருமை எப்பவும் எனக்கு உண்டு.
பராசக்தி படத்துல நடிக்கிற போது அவர் ரொம்ப ஒல்லியாக இருந்தார். அப்ப நடிச்சிக்கிட்டு இருந்த பிரபல கதாநாயகர்கள் எல்லோரும் நீண்ட தலைமுடி வைத்திருப்பார்கள். இவர் கிராப் வெட்டியிருந்தார். இவ்வளவு பெரிய ஹீரோக்களுக்கு மத்தியில் இவர் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று நினைத்தேன்.
முதல் நாள் காட்சி எடுத்தாங்க. நடித்தார். முதல் டேக்கிலேயே காட்சி ஓகே. ஆனது. அப்பவே எனக்கு அவர் பெரிய அளவில் வருவார்னு நம்பிக்கை வந்துடுச்சு.
ஒரு கதாநாயகனுக்கு ஜோடியா நடித்து, பின்னர் அவருக்கு அண்ணியா, அக்காவா, அம்மாவா நடித்தது தமிழ்சினிமாவில் அநேகமாக நானாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன். அண்ணன்கிட்டே உள்ள ஸ்பெஷல் இதுதான்.
நான் மட்டுமே நல்லா நடிச்சா போதும்னு நினைக்க மாட்டார். கூட நடிக்கிறவங்களும் நல்லா பண்ணினா தான் அந்தக்காட்சி உயிரோட்டமா இருக்கும்னு நினைப்பார்.
அதுக்காக, ரிகர்சல் நடக்கும்போதே, அந்தக் காட்சி பற்றி சில ஆலோசனைகளைச் சொல்வார். அண்ணன் என்னைப் பண்டரின்னு தான் கூப்பிடுவார். சில சமயம் தங்கச்சிம்மா என்பார்.
என்னைவிட என் தங்கை மைனாவதி பேர்ல அவருக்குப் பிரியம் அதிகம். ஒரு வாரம் அவளைப் பார்க்கலைன்னா சின்ன தங்கச்சியம்மாவை எங்கே காணோம் என்பார். அவ்வளவு பிரியமாக அனைவருடனும் பழகுவார்” என்று கூறியுள்ளார்.
பண்டரிபாயும், சிவாஜிகணேசனும் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை பராசக்தி, அந்த நாள், மனோகரா, கௌரவம், தெய்வமகன், டாக்டர் சிவா, மோட்டார் சுந்தரம்பிள்ளை, பாவை விளக்கு ஆகியவற்றைச் சொல்லலாம்.
மனோகரா படத்தில் சிவாஜிக்கு இணையாக நீண்ட வசனங்களைப் பேசி அசத்துவார் பண்டரிபாய். அதை யாராலும் மறக்க முடியாது.
தான் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மை அறிந்து அதுவாகவே மாறும் திறமைமிக்க நடிகை பண்டரிபாய். அதனால் தான் சிவாஜியின் நடிப்பை இந்த அளவு உணர்ந்து சொல்லி இருக்கிறார்.
– நன்றி: சினி ரிப்போர்ட்டர்ஸ் இதழ்