முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில், சலசலப்பை அல்ல, பெரும் பிரளயத்தையே உருவாக்கி இருந்தார்.
கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் மடிந்த கள்ளக்குறிச்சியில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்தார், அவர்.
சாதாரணமான அறிவிப்புதான். ஆனால் இந்த மாநாட்டில், அதிமுகவும் கலந்து கொள்ளுமாறு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தங்கள் தலைவர் வெளிநாட்டில் இருந்ததால், திமுகவினர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
அதிமுகவை, மாநாட்டுக்கு திருமா அழைத்தது குறித்து திமுகவின் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், கூட்டணியின் அஸ்திவாரத்தை அசைக்கும் விதமாக, திமுகவை நோக்கி, அடுத்த அஸ்திரத்தை வீசி எறிந்தார், திருமா.
என்ன அஸ்திரம் ?
‘அமைச்சரவையிலும், அதிகாரத்திலும் எங்களுக்கு பங்கு வேண்டும்‘ என்பதே அவர் வீசிய அஸ்திரம். ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து திரும்பிய நேரத்தில் இது தொடர்பான வீடியோவை விசிக வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின் தொடர்ச்சியாக பேட்டி அளித்த திருமாவளவன் ‘’எங்கள் கட்சி தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்த நாள் முதலே, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதை கொள்கை முழக்கமாகவே வைத்திருக்கிறோம்” என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
நிலமை கைமீறிப்போனதால், திருமாவளவனுக்கு, பதிலளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது திமுக.
அந்தக் கட்சியின் செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘’தேர்தலின் போது ஆட்சியில் – அதிகாரத்தில் பங்கு தருவதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை – திருமாவளவன் பொது வெளியில் பேசுவதற்கு நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?” என மழுப்பலாகக் கூறினார்.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலினும் கூட, அதே மழுப்பலுடன் தான் பதில் அளித்தார்.
விமான நிலையத்தில் பேட்டி அளித்த ஸ்டாலினிடம், ’’மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை, திருமாவளவன் அழைத்துள்ளாரே?” என கேட்டபோது நேரடியாக அவர் பதில் சொல்லவில்லை.
‘இந்தக் கேள்விக்கு திருமாவளவன் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார் – அந்த விளக்கத்துக்கு மேல் நான் பெரிய விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – அது, அரசியல் நோக்கத்தோடு நடக்கும் மாநாடு அல்ல என அவரே (திருமா) சொல்லி விட்டார்’ என்பது ஸ்டாலின் அளித்த விளக்கம்.
ஸ்டாலினுடன் சமரசம்
இந்த பரபரப்பான சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை, திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். 45 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. அப்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனை திருமாவளவனே செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
‘’மதுவிலக்கில் அண்ணா உறுதியாக இருந்தார் – மத்திய அரசுக்கு அப்போது அழுத்தம் கொடுத்தார் – அத்துடன் கலைஞரும் மதுவிலக்கில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் – அவர்களைப் போல மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற மனுவை கோரிக்கையாக கொடுத்துள்ளோம்’’ என திருமாவளவன் தெரிவித்தார்.
‘மது ஒழிப்பில் மத்திய அரசுக்கு பொறுப்பிருக்கிறது என்று அண்ணா சொன்னதைத்தான் இன்று விசிக சொல்கிறது – இந்த கருத்தில் திமுக உடன்படுவதால் மாநாட்டில் பங்கேற்க 2 பிரதிநிதிகளை அவர்கள் அனுப்பி வைக்க உள்ளனர்’ என குறிப்பிட்டார் அவர்.
‘’இந்த மாநாட்டை அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். விசிக – திமுக கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை” என முத்தாய்ப்பாகச் சொல்லி, கூட்டணியில் பிரச்சினை இல்லை என்பதை தெளிவு படுத்தினார் திருமாவளவன்.
‘’இது, நாடகம்’’:
முதலமைச்சர் ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பை ‘நாடகம்’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
மத்திய அமைச்சர் எல்.முருகன், ’’திருமாவளவனின், மது ஒழிப்பு மாநாட்டு அறிவிப்பையும், அதன் தொடர்ச்சியான சம்பவங்களையும் நாடகமாகவே நான் பார்க்கிறேன் – ஸ்டாலின் அமெரிக்க பயணத்தால் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை‘’ என குறிப்பிட்டார்.
‘’அதனை திசை திருப்பவே, திருமாவளவனிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றுங்கள் என ஸ்டாலின் கூறியது போல், மது ஒழிப்பு மாநாடு குறித்த பேச்சுகள் உள்ளன” என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
இதனிடையே, 500 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
”எத்தனை மதுக்கடைகளை மூடினாலும் மது விற்பனை குறைய வாய்ப்பு இல்லை – எனவே மதுக்கடைகளை மூடும் திட்டத்தை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை’’ என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– மு.மாடக்கண்ணு
#முதலமைச்சர் #மு_க_ஸ்டாலின் #திமுக #திருமாவளவன் #விடுதலை_சிறுத்தைகள்_கட்சி #தொல்_திருமாவளவன் #மது_ஒழிப்பு_மாநாடு #கள்ளக்குறிச்சி #கள்ளச்சாராயம் #அதிமுக #விசிக #அண்ணா #c_m_Stalin #alliance #dmk #thirumavalavan #vck #kallakurichi #admk #vck_alcohol_abolition_conference