வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாட்டில்,இப்போது ஜோ பைடன் அதிபராக உள்ளார். ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அவரே, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக இருந்தது.
ஆனால், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
இதையடுத்து, ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் களம் இறங்கியுள்ளார். இரு வேட்பாளர்களும் பல்வேறு தளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
காரசார விவாதம் இந்த நிலையில், கமலா ஹாரிசும், டிரம்பும் நேரடியாக சந்தித்து விவாதம் நடத்தும் முதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடந்த இந்த விவாத நிகழ்ச்சிக்கு ‘ஏபிசி’ செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விவாத நிகழ்ச்சி, பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
விவாத மேடைக்கு வந்த கமலா ஹாரிஸ், டிரம்புடன் கைக்குலுக்கி, தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
கடந்த 8 ஆண்டுகளில் அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேரில் சந்தித்து கைக்குலுக்கிக் கொண்டது இதுவே முதல் முறை.
நிகழ்ச்சியின் ஆரம்பமே, சினிமாவின் உச்சக்கட்ட காட்சி போல் பரபரப்பாக இருந்தது. ஜோ பைடன் நிர்வாகத்தின் தோல்விகளை ஒவ்வொன்றாக அடுக்கி, டிரம்ப், புகார்ப் பட்டியல் வாசித்தார். அதற்கு கமலா ஹாரிஸ், சுடச்சுட பதிலளித்தார்.
நடுத்தர வர்க்கத்தினர் ஓட்டுக்களைக் குறி வைக்கும் விதமாக கமலா ஹாரிசின் பேச்சு அமைந்திருந்தது.
‘’டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கோடீஸ்வரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிகளை ரத்து செய்துவிடுவார் – ஆனால், நடுத்தர குடும்பங்களுக்கு வரிகளை அதிகமாக்கி விடுவார்.
ஆனால், நான் அதிபர் பொறுப்புக்கு வந்தால், நடுத்தர குடும்பங்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அமல்படுத்துவேன் – நடுத்தர மக்களுக்குக் குறைந்த விலையில் வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவேன்’’ என்று வாக்காளர்களைக் கவரும் வகையில் கமலா ஹாரிஸ் பேசினார்.
பின்னர் விவாதம், இஸ்ரேல் – பாலஸ்தீன போர், உக்ரைன் – ரஷ்ய யுத்தம் என ‘உலகம்‘ சுற்றியது.
‘‘டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனின் கீவ் நகரில் அமர்ந்து கொண்டிருப்பார் – போலந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளை அபகரிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார் – அவர் உங்களை மதிய உணவாக சாப்பிட்டிருப்பார்’’ என்று கிண்டலடித்தார், கமலா ஹாரிஸ்.
இவ்வாறு இருவருக்கும் இடையே தொடர்ந்து அனல்பறக்க விவாதம் நடைபெற்றது.
ஹாரிஸ் செல்வாக்கு அதிகரிப்பு:
இந்த விவாத நிகழ்ச்சியை அடுத்து அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த விவாத நிகழ்வுக்கு முன்னதாக கமலா ஹாரிசுக்கு, வெற்றி வாய்ப்பு உள்ளதாக 39 சதவீதம் பேர் சொல்லி இருந்தார்கள்.
விவாதத்துக்கு பிறகு, அவருக்கு ஆதரவாக 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் விவாதத்துக்கு முன் டிரம்புக்கு 43% ஆதரவு இருந்தது. விவாதத்துக்கு பிறகு, அவருக்கான ஆதரவு 40 % ஆக குறைந்துள்ளது.
அடுத்தடுத்த விவாத நிகழ்ச்சிகளில் யாருக்கு மவுசு அதிகரிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
– மு.மாடக்கண்ணு