கிஷ்கிந்தா காண்டம் – பரத் நடித்த ‘காளிதாஸ்’ நினைவிருக்கிறதா?!

திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, ‘என்னடா படம் இது’ என்று இன்னொரு பக்கம் படம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் பார்வையாளர்கள் சிலர். கத்தல், கூச்சல் என்றிருக்கும் அவர்களது இயல்பு, சில காட்சிகளுக்குப் பிறகு மெல்ல அடங்கும்.

அது எப்போது என்று அவர்களுக்கே தெரியாது. ஒருகட்டத்தில், திரையில் அமைதி நிலவும்போது ஒட்டுமொத்த தியேட்டரும் நகம் கடித்துக் கொண்டிருக்கும்.

இறுதியாக, படம் முடிந்து வெளியேறுகையில் பேயறைந்தது போன்று அந்த நபர்களின் முகங்கள் இருக்கும். ‘என்னடா படம் இது’ என்ற வியப்பு அவற்றில் விரவிக் கிடக்கும்.

அப்படிப்பட்ட படமொன்றைத் தருவது தான் திரைப்படைப்பாளிகள் பலரது உள்ளக் கிடக்கை. அது வாய்ப்பது ஒரு அற்புதம்.

ஆசிஃப் அலி, விஜயராகவன், அபர்ணா பாலமுரளி, அசோகன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில், டிஞ்சித் அய்யதன் இயக்கியிருக்கும் ‘கிஷ்கிந்தா காண்டம்’ அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது.

பாபுல் ரமேஷ் இதற்கு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, எழுத்தாக்கத்தையும் கையாண்டிருக்கிறார்.

முஜீப் மஜீத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

ஓணம் வெளியீடாக வந்திருக்கும் இப்படத்தில், அப்படி என்னதான் இருக்கிறது?

வெவ்வேறு திசைகளில் பயணம்!

அஜயசந்திரன் (ஆசிஃப் அலி), அபர்ணா (அபர்ணா பாலமுரளி) இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்வதில் இருந்து ‘கிஷ்கிந்தா காண்டம்’ திரைக்கதை தொடங்குகிறது.

அஜயசந்திரன் ஏற்கனவே திருமணமானவர். புற்றுநோய் பாதிப்பினால், முதல் மனைவி பிரவீணா இறந்து போயிருக்கிறார். அதற்குச் சில மாதங்கள் முன்னதாக, அவர்களது ஒரே மகன் சாச்சி காணாமல் போயிருக்கிறார்.

வனத்துறையில் பணியாற்றி வரும் அஜயசந்திரனைத் தன்னுடன் இருக்குமாறு அழைக்கிறார் பிரான்ஸில் இருக்கும் அவரது சகோதரர்.

ஆனால், ‘தந்தையைத் தனியே விட்டுவிட்டு தன்னால் வர முடியாது’ என்கிறார் அஜய். அதற்கு, ‘அவரைச் சமாளிக்கிற பக்குவம் உனக்கிருக்கிறதா’ என்கிறார் சகோதரர்.

அவர் அப்படிச் சொல்லும் அளவுக்கு, வினோதமான இயல்புகள் கொண்டவராக இருக்கிறார் தந்தை அப்பு பிள்ளை (விஜயராகவன்). எந்நேரமும் கடிந்து விழுவது, தனது அறைக்குள் எவரையும் அனுமதிக்காதது, சொன்னதையே திரும்பப் பேசுவது என்றிருக்கிறார்.

முதியவர்களின் இயல்பு அதுதான் என்றபோதும், நெடுங்காலமாகவே அப்பு பிள்ளை இப்படித்தான் இருந்து வருகிறார்.

திருமணம் முடிந்து அஜயசந்திரன் வீட்டுக்கு வரும்போது, அப்பகுதியே பரபரப்பாக இருக்கிறது. வெளியே சில மனிதத்தலைகள் தெரிகின்றன. வீட்டினுள் தன்னை விசாரிக்க வந்த போலீசாரிடம் காரசாரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் அப்பு பிள்ளை.

தேர்தல் நேரம் அது. அதனால் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் அதனைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அதற்கான கடைசி தினமான அன்று, அப்பு பிள்ளை மட்டுமே தனது துப்பாக்கியை ஒப்படைக்கவில்லை.

காரணம், துப்பாக்கியைக் காணாமல் அவர் வீடு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார். அதனால், அவர் அஜய்யின் திருமணத்திலும் கலந்துகொள்ளவில்லை.

விஷயம் அறிந்ததும், போலீசார் டென்ஷன் ஆகின்றனர். அவர்கள் வசிக்கும் வனப்பகுதியில் ‘நக்சலைட்கள் நடமாட்டம்’ இருப்பதாகத் தகவல் உலவுகிறது. உள்ளூரில் இருக்கும் சிலர் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வாலிப வயதில் அப்படியொரு செயலில் ஈடுபட்டவர் அப்பு பிள்ளை. அதனால் ஒரு வழக்கில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதிலிருந்து தப்பிக்க, குடும்பத்தினர் வற்புறுத்தலால் அவர் ராணுவத்தில் பணியாற்றச் சென்றிருக்கிறார்.

துப்பாக்கியைத் தேடும் களேபரத்தில், இந்த விஷயங்கள் அபர்ணாவுக்குத் தெரிய வருகின்றன.

சில நாட்கள் இடைவெளியில், சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார் அப்பு பிள்ளை. காட்டில் இருக்கும் சுமனந்தனை (ஜகதீஷ்) ரகசியமாகச் சந்தித்து, சில தகவல்களைக் கேட்கிறார்.

வெளியில் சென்று சில தகவல்களைச் சேகரிக்கிறார். வீட்டில் உட்கார்ந்து பழைய செய்தித்தாள்கள், பிரிண்ட் அவுட்களில் இருப்பவற்றை ஆராய்கிறார்.

ஒருநாள் அவையனைத்தையும் வீட்டின் அருகேயிருக்கும் நிலப்பகுதியில் எரித்துவிடுகிறார். அவரது செயல்பாடுகள் வினோதமாக இருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், எதிரே இருப்பவரிடம் என்ன பேசுவது என்பதைக் கையில் இருக்கும் குறிப்பை வைத்துக்கொண்டே முடிவு செய்கிறார் அப்பு பிள்ளை. அதனைப் பார்க்கும் அபர்ணாவுக்கு, அவர் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறார் என்று தோன்றுகிறது.

அப்போதுதான், அப்பு பிள்ளை மறதி நோயால் அவதிப்படுவதாகச் சொல்கிறார் அஜயசந்திரன். அதேநேரத்தில், அவர்கள் வசிக்கும் வீடு அருகேயுள்ள நிலப்பகுதியில் மண் தோண்டும் பணியில் ஈடுபடும் சிலர் ஒரு குரங்கின் எலும்புக்கூட்டைக் கண்டெடுக்கின்றனர்.

அதனை ஆராயும்போது, அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தடம் இருக்கிறது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த துப்பாக்கியானது அப்பு பிள்ளையினுடையதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர் போலீசார்.

அதே நேரத்தில், சிறுவன் சாச்சி காணாமல் போனதில் அப்பு பிள்ளையின் பங்கு இருக்கிறதா? அவனைக் குறித்த உண்மையொன்றை மறந்துவிட்டு அவர் தடுமாறுகிறாரா என்று சந்தேகிக்கிறார் அபர்ணா. அதனை அஜயசந்திரனிடமும் சொல்கிறார்.

அதன்பிறகு என்னவானது? உண்மையில் அப்பு பிள்ளை எப்படிப்பட்டவர்? பேரன் காணாமல்போனதற்கும் அவருக்கும் தொடர்பிருக்கிறதா என்பதைச் சொல்கிறது ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தின் மீதி.

மேற்சொன்ன கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அமையும் கிளைமேக்ஸ் நம்மைத் துணுக்குற வைக்கிறது. அது மட்டுமல்லாமல், கடந்து வந்த திரைக்கதையில் எதையெல்லாம் கவனிக்காமல் விட்டோம் என்கிற சிந்தனையைத் தூண்டுகிறது. அந்த வகையில், திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கிற நுட்பத்தை ஒளித்து வைத்திருக்கிறது எளிமையாகத் தோற்றமளிக்கும் இந்தக் கதை.

இந்தப் படத்தில் அப்பு பிள்ளையின் குணாதிசயங்களும் இயல்புகளும் தான் சிறப்பம்சங்கள். அது மட்டுமல்லாமல், மறதி நோயால் அவர் அவதிப்படுவது தெரியவரும்போது திரைக்கதை இன்னும் சூடு பிடிக்கிறது.

அதன்பிறகே, இக்கதையில் வரும் பாத்திரங்கள் வெவ்வேறு திசைகளில் பயணிப்பதை உணர முடிகிறது. ஆனால், அனைத்தும் ஒரு புள்ளியில் முடிவடையும்போது நம்மால் ஆச்சர்யத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

அசத்தும் ஒளிப்பதிவு!

‘சவசவன்னு நகருதே’ என்று சொல்லும் அளவுக்குத் தொடக்கத்தில் திரைக்கதை கடுப்பேற்றினாலும், காட்சிகளில் இருக்கும் சீர்மை அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிக்கிறது.

ஒருகட்டத்தில், மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக ஒரு எண்ணம் மனதுக்குள் எழுகிறது. அதனை உருவாக்கியிருப்பதே எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் பாபுல் ரமேஷின் திறமை. அதற்காகவே, அவரைப் பாராட்டலாம்.

போலவே, இந்தக் கதையை மனதுக்குள் ஓட்டிப்பார்க்கும்போது வெவ்வேறு வகைமைகளைக் கொண்டதாகத் தென்படும். டிராமா படமாக மேலோட்டமாகத் தெரிந்தாலும், ஒரு ‘சைக்காலஜிகல் மிஸ்டரிக் த்ரில்லர்’ ஆக இப்படம் விளங்குகிறது.

தறி கெட்டு ஓடக்கூடிய முரட்டுக்குதிரை மீதேறி லாவகமாகப் பயணிப்பது போன்ற அனுபவத்தைத் திரையில் தந்திருக்கிறார் இயக்குனர் டிஞ்சித் அய்யதன். நிச்சயமாக, அவரது காட்சியாக்கம் இதில் சிறப்பாக இருக்கிறது.

எல்லா காட்சிகளும் கிளைமேக்ஸில் சொல்லப்படும் விஷயத்தை நோக்கியே நகர்வதாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அது சாதாரண விஷயமில்லை.

கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் பாபுல் ரமேஷ் தான், இப்படத்தின் ஒளிப்பதிவாளர். காடு, மலை சூழ்ந்த கதைக்களத்தைக் கண்களுக்குக் குளுமையாகக் காட்டியிருக்கிறது அவரது பணி. சில இடங்களில் ‘லாங் ஷாட்’கள் தனியே பிரேம் போட்டு மாட்டலாம் எனுமளவுக்கு இருக்கிறது.

சில பாத்திரங்களின் மனதுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களும், அவற்றுக்கு இடையேயான ஆடுபுலி ஆட்டமும் தான் இப்படத்தின் அடிநாதம். அதனைத் திரையில் பார்க்கையில் வெறுமையை உணராமலிருக்க உதவுகிறது பாபுல் ரமேஷின் காட்சியாக்கத் திறன்.

சூரஜ்ஜின் படத்தொகுப்பில், திரையில் கதை சீராக விரிந்திருக்கிறது. இப்படியொரு திரைப்படத்தில், திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஒரேமாதிரியாகத் தென்படுவது அத்தியாவசியம். அதனைச் செய்திருக்கிறது அவரது பணி.

போலவே, முஜீப் மஜீத்தின் பின்னணி இசை காட்சிகளோடு பிணைந்து நிற்கிறது. நிச்சயமாக, தனியே கேட்கையில் அது தரும் அனுபவம் ‘தனித்துவமானதாக’ இருக்கும்.

கலை இயக்குனர் சஜீஷ் தாமரசேரியின் பங்களிப்பு, திரையில் செறிவானதொரு உள்ளடக்கத்தைக் காண்கிறோம் எனும் எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

வனத்துறை அலுவலகம், காவல்நிலைய செட்டப் குறைவான காட்சிகளே இடம்பெற்றபோதும், அவை உண்மைக்கு நெருக்கமாகத் திரையில் தென்படுகின்றன.

நாயகன் ஆசிஃப் அலிக்கு இப்படத்தில் வித்தியாசமானதொரு வேடம். ‘என்ன சும்மா வந்து போகிறாரே’ என்ற நமது எண்ணத்தைச் சுக்குநூறாக்குகிறது கிளைமேக்ஸ் பகுதி.

அபர்ணா பாலமுரளிக்குக் காட்சிகள் குறைவென்றபோதும், நகர்ப்புறத்தில் வளர்ந்த ஒரு பெண் வனம் சூழ்ந்த ஒரு பகுதிக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததைத் திரையில் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார்.

அப்பு பிள்ளையாக நடித்திருக்கும் விஜயராகவன், தினசரி வாழ்வில் நாம் சந்திக்கிற சில முதியவர்களை நினைவூட்டுகிறார். அவரது பாத்திரமே இப்படத்தின் யுஎஸ்பி. அவரது சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதும் அளவுக்கு, இதில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.

நிழல்கள் ரவி திரையில் வரும் காட்சிகள் அடுத்தடுத்து அமைந்து நம்மை ஆச்சர்யத்தில் தள்ளுகின்றன.

மூத்த நடிகர் ஜெகதீஷ், இதில் சுமனந்தனாக வந்திருக்கிறார். ஒரு துணை பாத்திரமாக மட்டுமே தோன்றியிருக்கிறார்.

இளம் நடிகர் நிஷான் இதில் இன்ஸ்பெக்டராக வந்து போயிருக்கிறார்.

இன்னும் அசோகன், கோட்டயம் ரமேஷ் உட்படச் சிலர் இதில் நடித்துள்ளனர்.

‘காளிதாஸ்’ நினைவு!

சில ‘கிளாசிக்’ படங்களை நாம் திரும்பத் திரும்பப் பார்க்க, திரையில் தெரியும் நேர்த்தி கொஞ்சமும் மங்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். இதிலும் அது நிறைந்திருக்கிறது.

தொடக்கத்தில் சொன்னது போல, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத காட்சிகளைக் காட்டி, அவற்றை ஒரு சரத்தில் கோர்த்து கதை சொல்லியிருப்பது வித்தியாசமான அனுபவத்தைப் பரிசளிக்கிறது.

இதற்குப் பின்வரும் தகவல்கள் கண்டிப்பாக ‘ஸ்பாய்லர்’ ரகமே. அதனால், ‘அது வேண்டாம்’ என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.

‘கிஷ்கிந்தா காண்டம்’ ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர் ஆகவே எதிர்காலத்தில் நினைவுகூரப்படும். அதுவே, 2019-ல் வெளியான ‘காளிதாஸ்’ படத்தை நினைத்துப் பார்க்க வைக்கிறது.

அந்தப் படத்திலும் பரத், ஆன் ஷீத்தல் பாத்திரங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை நோக்கி சுரேஷ் மேனன் பாத்திரம் பயணிக்கும். படத்தின் முடிவு, அக்கதையை மீண்டும் அசை போட வைப்பதாக இருக்கும். அதுவே, இப்படத்திலும் நிகழ்கிறது.

பாபுல் ரமேஷின் எழுத்தாக்கமும், தனது திரைப்பார்வையால் அதற்கு இயக்குனர் டிஞ்சித் அய்யதன் உருவம் தந்திருக்கும் விதமும் பாராட்டுக்குரியவை. அதனை அறிய விரும்புபவர்கள், மிக மெதுவாக நகர்கிற இப்படத்தைத் திரையில் கண்டு ரசிக்கலாம்.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
கிஷ்கிந்தா காண்டம் விமர்சனம்
Comments (0)
Add Comment