அரியானாவில் ஐந்துமுனைப் போட்டி!

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு என தகவல்

தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள மாநிலம் அரியானா. தொடர்ச்சியாக இரண்டு முறை பாஜக வெற்றிக்கொடி கட்டிய பிரதேசம். இந்தியாவின் துணைப் பிரதமராகவும், அரியானாவின் முதலமைச்சராகவும் இருந்த தேவிலாலின் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்தது இந்த  பூமி.

 இப்போது, அவரது கட்சி பல துண்டுகளாக உடைந்து கிடக்கிறது. 

அரியானாவில் மொத்தம் 90 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

40 இடங்களில் வென்ற பாஜக, 10 தொகுதிகளில் ஜெயித்த ஜனநாயக ஜனதாக் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுத்து, கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜகவின் நாயப் சிங் சைனி, முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

‘ஹாட்ரிக்’ கனவில் மிதக்கும் பாஜக:

இந்த நிலையில், அரியானாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தனித்து களமிறங்கும், ஆளும் கட்சியான பாஜக 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாம் முறையாகவும் ஜெயித்து ‘ஹாட்ரிக்’ அடிக்க வேண்டும் என்பது, அந்த கட்சியின் கனவு. 

‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆம் ஆத்மி கேட்ட இடங்களை காங்கிரஸ் கொடுக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி தனித்து களமிறங்கத் தீர்மானித்தது. 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, அந்த  கட்சி. 

கடந்த  2019 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 46 இடங்களில் வேட்பாளர்களை இறக்கியது. ஒருவரும் வெல்லவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ். அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ள காங்கிரஸ், எஞ்சிய 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  

தேவிலால் பேரன் துஷ்யந்த், ஜனநாயக ஜனதா எனும் பெயரில் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அவரது கட்சி, ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தேவிலாலின் இன்னொரு பேரன் அபய் சிங் தலைமையிலான இந்திய தேசிய லோக்தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இப்படியாக பலமுனை போட்டி நிலவினாலும், அரியானாவில் ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே தான் நிஜமான யுத்தம்.

வெற்றி யாருக்கு?

கடந்த சட்டசபை தேர்தலில் 31 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி, சில மாதங்களுக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

அங்கு மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளில்  ஐந்தை காங்கிரஸ் கைப்பற்றியது. எஞ்சிய 5 இடங்களில் பாஜக வென்றது. 

காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதமும் கணிசமாக உயர்ந்தது. சட்டசபைத் தேர்தலில் 26% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் 44% வாக்குகளை வாங்கியது.

மாறாக சட்டசபைத் தேர்தலில் 58% வாக்குகளை பெற்ற பாஜகவால், மக்களவைத் தேர்தலில் 46% ஓட்டுகளையே பெற முடிந்தது.

தேவிலாலின் இரு பேரன்களின் கட்சிகளும் சேர்ந்து வெறும் 3% சதவீத வாக்குகளையே பெற்றன.

10 ஆண்டுகளாக ஆட்சியின் இருந்ததால், ஆளும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை, ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் அறுவடை செய்யும் என அரசியல்  நோக்கர்கள் கணித்துள்ளனர்.

தேர்தலில் ‘சீட்‘ கிடைக்காத பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும், காங்கிரசில் இணைந்து வருவது, காவிக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மனு தாக்கல் முடிவடைந்து விட்டதால், அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அன்று மதியம் அரியணையில் அமரப்போவது யார்? எனத் தெரிந்துவிடும்.

– மு.மாடக்கண்ணு.

Comments (0)
Add Comment