செய்தி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னால், கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் ஜிஎஸ்டி பிரச்சனை குறித்து ஜனரஞ்சகமான மொழியில் பேசியதற்கு, மறுநாள் மத்தியமைச்சரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் பத்திரிகையாளரைச் சந்தித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து அண்ணாமலை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வருவதையடுத்து, தொழிலதிபர்களைக் கூட்டி அவர்களுடைய குறைகளைக் கேட்பதற்காகத்தான் அந்தக் கூட்டமே நடத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் தன்னியல்பாக, தான் நடத்திவரும் ஓட்டலில் ஜிஎஸ்டியால் படும் நடைமுறை சிரமங்களை, அவருக்கே உரித்தான மொழியில் சொல்லியிருக்கிறார் அந்த ஹோட்டல் அதிபர்.
ஆனால், அந்தப் பேச்சு பெரும் வைரலாகிப் பலரால் வரவேற்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அதில் குறிப்பிடப்பட்ட எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அந்தச் சம்பவத்தை விளக்கி, பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மறுநாள் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரான ஸ்ரீநிவாசன்.
அதேசமயம், நிர்மலா சீதாராமனை மன்னிப்புக் கேட்கச் சொல்லி பலர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் அதை வலியுறுத்தி இருக்கும் நிலையில், வெளிநாட்டில் படிப்புக்காகப் போயிருக்கும் அண்ணாமலை அங்கிருந்தபடியே மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
ஆக, மன்னிப்புக் கேட்பதுகூட அடுத்தடுத்துத் தொடர் நிகழ்வுகளாக ஊடகங்களுக்குத் தீனி போடுகிற விதத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
கோயமுத்தூரில் ஜிலேபி சாப்பிட்டால், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு செரிமானம் ஆகும் போலிருக்கிறதே!