’அஜயண்ட ரெண்டாம் மோஷணம்’ என்ற வார்த்தைகளின் சுருக்கம் ‘ஏஆர்எம்’. அஜயன், மணியன், குஞ்சிக்கேலு என்ற மூன்று பாத்திரங்களில் ‘இளம் நட்சத்திரம்’ டொவினோ தாமஸ் நடித்திருக்கும் படமிது.
ஓணம் வெளியீடுகளில் ஒன்றாக இடம்பிடித்திருக்கும் இப்படம், மக்களின் கொண்டாட்ட மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ‘ஆக்ஷன் அட்வெஞ்சர்’ படமாக அமைந்திருப்பதாகச் சொன்னது ட்ரெய்லர்.
அது மட்டுமல்லாமல், தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்கிற கீர்த்தி ஷெட்டி இதில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இதிலுண்டு.
மரகத நாணயம், கனா, நெஞ்சுக்கு நீதி, சித்தா படங்களின் இசையமைப்பாளர் திபு நினண் தாமஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
மேற்சொன்ன ஒன்றிணைப்பே, இப்படத்தைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிட வேண்டுமென்ற படக்குழுவின் விருப்பத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
சரி, ஒரு கமர்ஷியல் படமாக ‘ஏஆர்எம்’ எந்தளவுக்கு நமக்கு திருப்தியைத் தருகிறது?
மூன்று சாகசக்காரர்கள்!
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கேரளாவின் ஒரு பகுதியில் விண்கல் விழுகிறது. அந்த இடத்தில் பெரும்பள்ளம் ஏற்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், அந்தப் பகுதியை ஆட்சி செய்துவரும் எடக்கல் மன்னர் அந்த விண்கல் விழுந்த இடத்தைப் பார்வையிடுகிறார்.
அந்த விண்கல்லை எடுத்து வந்து, அதிலிருக்கும் வினோத உலோகத்தைப் பிரித்தெடுத்து, அரண்மனையில் இருக்கும் கொல்லர்களைக் கொண்டு தேவியின் சிற்பத்துடன் கூடிய விளக்கொன்றை உருவாக்கச் செய்கிறார். அதனை அரண்மனையில் வைக்கிறார்.
அதன்பிறகு, அந்த எடக்கல் மன்னர் வம்சம் புகழெய்துகிறது. விண்கல் எடுக்கப்பட்ட இடம் ‘சோதிக்காவு’ என்றழைக்கப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில், அந்த வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் எடக்கல் மன்னராக ஆட்சி செய்து வருகிறார்.
ஒருநாள், அவரது உறவினர் ஒருவர் ஒரு வணிகரால் சிறைபிடிக்கப்படுகிறார். நாடாளக் கொஞ்சம் இடம் தந்தால், அவரை விட்டுவிடுவதாக நிபந்தனை விதித்து ‘தூது’ அனுப்புகிறார் அந்த வணிகர். அவரை அந்நாட்டிலுள்ள தளபதிகளால் சமாளிக்க முடியாத நிலைமை.
‘உறவினரை மீட்குமாறு உதவி கேட்டு ஆங்கிலேயரிடம் போவதா’ என்று மன்னர் தயங்குகிறார். அப்போது, சோதிக்காவு கிராமத்திலிருக்கும் களரி வீரன் குஞ்சிக்கேலுவிடம் உதவி கேட்கலாம் என்கிறார் ஒரு அமைச்சர். அதற்கு அரசர் ஒப்புதல் தெரிவிக்கிறார்.
அதையடுத்து, வணிகரின் இருப்பிடத்திற்குச் சென்று, அவரோடு சண்டையிட்டு, மன்னரின் உறவினரை மீட்டு வருகிறார் குஞ்சிக்கேலு.
அவரது வீரத்தைக் கண்டு மகிழும் எடக்கல் மன்னர், ‘என்ன வேண்டுமோ கேள்’ என்கிறார். பதிலுக்கு, ‘விண்கல்லில் இருந்து செய்யப்பட்ட விளக்கு வேண்டும்’ என்கிறார் குஞ்சிக்கேலு.
சில நொடிகள் தயங்கி நிற்கும் மன்னர், ‘அப்படியே ஆகட்டும்’ என்கிறார்.
பெரும் வரவேற்போடு தனது கிராமத்திற்கு அந்தச் சிலையை எடுத்து வருகிறார் குஞ்சிக்கேலு. ஊரின் நடுவே இருக்கும் கோயிலுக்குள் வைக்கப்படுகிறது.
ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அந்த விளக்கைக் காண வேண்டுமென்ற குஞ்சிக்கேலுவின் ஆசையை நிராகரிக்கின்றனர் அந்த ஊரிலுள்ள ஆதிக்க சாதியினர்.
அந்த நேரத்தில், அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் குஞ்சிக்கேலுவினால் எதுவும் செய்ய முடிவதில்லை. அந்த நேரத்தில், மன்னரின் உறவினர் அனுப்பிய ரகசிய ஓலையைப் படித்ததும், மனதளவில் அவர் உடைந்து போகிறார். அதன்பிறகு, அவர் நாகர்கோயில் சென்றதாகத் தகவல்.
சில ஆண்டுகள் கழித்து, குஞ்சிக்கேலுவின் வம்சாவளியினரான மணியன் சோதிக்காவு பகுதியில் பெரிய திருடனாக விளங்குகிறார். அந்தப் பெயரைக் கேட்டாலே அரள்கிற அளவுக்கு, அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.
கோயிலில் இருந்த விளக்கை மணியன் திருடியதாகவும், அதனைப் பார்த்த கிராம மக்கள் அவரை விரட்டிச் சென்று அதனைக் கைப்பற்றியதாகவும், பின்னர் அருவிப்பகுதியில் இருந்து கீழே விழுந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சில தகவல்கள் சோதிக்காவு கிராமத்தில் உலாவுகின்றன.
தலைமுறைகள் தாண்டியும் குஞ்சிக்கேலு, மணியன் குறித்த தகவல்கள் கதைகளாக அப்பகுதியில் பேசப்படுகின்றன. அந்த வகையில் சிறுமி லட்சுமிக்கு அக்கதைகளைச் சொல்கிறார் அவரது பாட்டி (மாலா பார்வதி).
அக்கதைகளைக் கேட்ட காரணத்தால், மணியன் மகள் வயிற்றுப் பேரனான அஜயன் மீது லட்சுமிக்கு ‘நட்பு’ பிறக்கிறது. பதின்மப் பருவத்தில் அது காதலாகிறது.
ஊர் பெரிய மனிதரான பரமு நம்பியாரின் மகள் லட்சுமி (கீர்த்தி ஷெட்டி). ஹாம் ரேடியோ மூலமாக, தினமும் அவரோடு உரையாடி வருகிறார் அஜயன் (டொவினோ தாமஸ்). காதல் மலர்ந்தபிறகு, இருவரும் ரகசியமாகச் சந்தித்து வருகின்றனர்.
எலக்ட்ரானிக்ஸ், பிளம்பிங் வேலைகளை அந்த கிராமத்தில் செய்து வருகிறார் அஜயன்.
அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காரணம் காட்டி வீட்டுக்குள் அனுமதிக்க யோசிக்கிறார் பரமு.
அவரது ஆதிக்க மனப்பான்மையைப் பொருட்டாகக் கருதாமல் அஜயன் மீது காதலைக் கொட்டுகிறார் லட்சுமி.
ஒருநாள் பரமுவின் வீட்டுக்கு எடக்கல் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சுதேவ்வும், அவரது நண்பர்கள் சிலரும் வருகின்றனர். சோதிக்காவு பற்றி ஒரு ஆவணப்படம் உருவாக்கப் போவதாகச் சொல்கின்றனர்.
சில தினங்களில் திருவிழா நடைபெறும் நிலையில், அதன் பத்தாம் நாளன்று கோயில் நடை திறக்கப்படும்போது மன்னர் பரம்பரை அளித்த விளக்கினைப் படம்பிடிக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார் சுதேவ். அதனால், அவர்களைத் தனது வீட்டில் பரமு தங்க வைக்கிறார்.
ஒருநாள், பரமுவின் வீட்டுக்குள் ஒரு திருடன் நுழைகிறான். அதனை ஒரு வேலையாள் பார்த்துவிடுகிறார். அவர் ‘திருடன்’ என்று அலறுகிறார்.
அதேநேரத்தில், லட்சுமியை ரகசியமாகச் சந்தித்துப் பேச அங்கு வந்திருக்கிறார் அஜயன். அந்த சத்தம் கேட்டதும், அஜயனும் ஓடுகிறார்.
திருடனை விரட்டிச் செல்லும் சுதேவ், அந்த நபரைப் பிடிக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (பசில் ஜோசப்) தான் அந்த திருடன். மணியனைப் போல ஒரு திருடன் ஆக வேண்டுமென்பதே அவரது கனவு.
அதனால், மணியனைப் போன்று மணிச்சத்தத்தை எழுப்பியவாறே சில வீடுகளில் திருடவும் செய்திருக்கிறார். ஆனால், அக்கிராமத்தினரோ ‘அஜயன் தான் திருடன்’ என்று நினைக்கின்றனர்.
சுரேஷின் நெருங்கிய நண்பன் அஜயன். அது மட்டுமல்லாமல், மணியனின் பேரன் என்பதை நன்கு தெரிந்திருக்கிறார் சுதேவ்.
அவர் என்ன மனதில் நினைக்கிறார் என்பதை அறியாமல், அவர் சொல்வதற்குத் தலையாட்டுகிறார் சுரேஷ்.
‘கோயிலில் இருக்கும் விளக்கை சுதேவ்வும் அவரது நண்பர்களும் திருடிச் செல்வதாக, அஜயனிடம் சொல்கிறார். அதனைக் கேட்டதும், அவர் அதிர்கிறார்.
இருவரும் கோயிலுக்குச் செல்கின்றனர். சுவரேறிச் செல்லும் அஜயன், கோயில் கூரையைத் திறந்து பார்க்கிறார். அதனுள் விளக்கு இல்லை.
அந்த நேரத்தில், அங்கு வருகிறார் சுதேவ். கோயில் மீது அஜயன் ஏறியதைத் தனது நண்பர்கள் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்.
‘அதனை வெளியே காட்டினால், சுரேஷ் செய்த திருட்டுகளுக்கு அஜயன் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்’ என்று அவர் அஜயனை மிரட்டுகிறார்.
அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமானால், உண்மையான விளக்கை அஜயன் கண்டுபிடித்து தர வேண்டும் என்கிறார்.
அப்போதுதான், கோயிலில் இத்தனை ஆண்டுகளாக இருந்தது ஒரிஜினல் விளக்கு அல்ல என்ற உண்மை அஜயனுக்கும் சுரேஷுக்கும் தெரிய வருகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்த விளக்கைத் திருடியவர் மணியன் தான். அந்த விளக்கை அவர் எங்கு வைத்திருக்கிறார்? ஏன் அவ்வாறு செய்தார்?
அஜயனுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாது. தனது தாய்க்கும் (ரோகிணி) பதில் தெரியாது என்று அவருக்குத் தெரியும்.
அதே நேரத்தில், பாட்டி மாணிக்கத்துக்கு (சுரபி லட்சுமி) அந்த உண்மை தெரியும் என்று அவர் நம்புகிறார்.
உயிரோடிருந்த காலத்தில் பாட்டி என்ன சொன்னார், செய்தார் என்று நினைவுபடுத்தி, அந்த இடங்களுக்குச் சென்று விளக்கைத் தேடுகிறார் அஜயன். ஆனாலும், சின்ன தடயம் கூட அவருக்குக் கிடைப்பதாக இல்லை. ஊரில் கோயில் திருவிழா ஆரம்பமாகிறது.
பத்தாம் நாள் திருவிழாவுக்கு முன்பாக நடக்கும் களரிப் போட்டியில் அஜயன் பங்கேற்க வேண்டிய கட்டாயமும் திடீரென்று உருவாகிறது.
அதன் மூலமாகவாவது, ‘திருடன் குடும்பம்’ என்ற அவப்பெயரில் இருந்து தனது சந்ததி விடுவிக்கப்படும் என்று நம்புகிறார் அஜயனின் தாய்.
அதற்கிடையே, லட்சுமி – அஜயன் காதல் விவகாரம் பரமுவுக்குத் தெரிய வருகிறது. ஆத்திரமடையும் அவர், களரிப்போட்டியில் மோதவிருக்கும் பயில்வானுக்குப் பணம் தந்து அஜயனைக் கொல்ல ஏற்பாடு செய்கிறார்.
அதன்பிறகு என்னவானது? அந்த விளக்கை தாத்தா மணியன் எங்கு மறைத்து வைத்தார் என்பதை அஜயன் கண்டறிந்தாரா? சுதேவ்வின் பிடியில் இருந்து தப்பித்தாரா என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது ‘ஏஆர்எம்’மின் மீதி.
இந்தக் கதையில் குஞ்சிக்கேலு, மணியன், அஜயன் மூவருமே சாகசக்காரர்களாகத் திகழ்கின்றனர். அதனை சோதிக்காவு அங்கீகரித்ததா என்று சொல்கிறது இதன் முடிவு.
கமர்ஷியல் பட ‘திருப்தி’!
டொவினோ தாமஸ் இப்படத்தின் நாயகன். ‘2018’ படத்திற்குப் பிறகு பெருவாரியான ரசிகர்களைக் கவரும் வாய்ப்பு. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு தேவதை போல, சில காட்சிகளில் மட்டும் தோற்றம் தருகிறார் கீர்த்தி ஷெட்டி. மற்றபடி, பெரிதாக நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு தரப்படவில்லை.
ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டொரு காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.
இருவருக்கும் தரப்பட வேண்டியதைச் சேர்த்து எடுத்துகொண்டாற் போல, ‘பெர்பார்மன்ஸில்’ அசத்தியிருக்கிறார் சுரபி லட்சுமி.
சுதேவ் ஆக வரும் ஹரீஷ் உத்தமன் தான் இப்படத்தில் வில்லன். ஆனால், அவருக்கான காட்சிகள் குறைவென்பது ஒரு குறையே.
வெறுமனே ஒரு காமெடியனாக மட்டுமே இப்படத்தில் தோன்றியிருக்கிறார் பசில் ஜோசப். நாயகனாக ஜெயிக்கும் காலகட்டத்தில், இப்படிப்பட்ட முடிவை மேற்கொள்ளப் பெரும் துணிவு வேண்டும்.
கன்னட நடிகர் பிரமோஷ் ஷெட்டி, பிளாஷ்பேக்கில் மணியன் பாத்திரத்தோடு வம்பிழுக்கும் போலீஸ் அதிகாரியாக வந்து போயிருக்கிறார்.
இன்னும் ஜகதீஷ், மதுபால், சஞ்சு சிவராம், சந்தோஷ் கீழாட்டூர், சுதீஷ் என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
டொவினோ தாமஸின் தாயாக வரும் ரோகிணிக்குத் திரைக்கதையில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான், தயாரிப்பு வடிவமைப்பாளர் கோகுல் தாஸ், படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மதுவின் உழைப்பில், இப்படம் ஒரு வண்ணமயமான திரையனுபவத்தை நமக்குத் தருகிறது.
கேரள வட்டார இசையின் சாயலை நாம் உணருமாறு பாடல்களைத் தந்திருக்கிறார் திபு நிணன் தாமஸ். மேற்கத்திய வாசம் வீசும் பின்னணி இசையோ, காட்சிகளில் நிறைந்திருக்கும் பரபரப்பை அதிகப்படுத்த உதவியிருக்கிறது.
சண்டைக்காட்சிகளில் ரத்த வாடை இல்லை. படத்தின் சில இடங்களில் உள்ள விஎஃப்எக்ஸ் பயன்பாடு, இதன் பட்ஜெட் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
2டியில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், 3டியிலும் வெளியாகியுள்ளது. அதற்கேற்ற தரத்தில் விஎஃப்எக்ஸ் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சுஜித் நம்பியார் இப்படத்தின் எழுத்தாக்கத்தினைக் கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் தீபு பிரதீப் அவருக்கு உதவியிருக்கிறார்.
பெரும்பாலான காட்சிகள், கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை ரசிகர்கள் உணரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த நோக்கத்தில் பெரும்பகுதி வெற்றி பெற்றிருக்கிறது.
அதேநேரத்தில், ஒரு ‘பெர்பெக்டான’ திரைக்கதையை எதிர்பார்ப்பவர்களை இப்படம் அதிருப்தியடையச் செய்யும்.
குறிப்பாக, திரைக்கதையில் நாயகி உட்படச் சில பாத்திரங்களின் இருப்பு நாடக மேடையில் கலைஞர்கள் வந்து போவது போன்றிருக்கிறது.
நாயகனே மூன்று பாத்திரங்களில் தோன்றியிருப்பதால், அதற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனுக்கு இக்கதையில் போதிய இடம் தரப்படவில்லை.
டொவினோ தாமஸின் தாயாக வரும் ரோகிணி, அந்த ஊராரால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை விளக்குகிற காட்சிகள் இல்லை.
அதனைக் காட்டியிருந்தால், கிளைமேக்ஸ் காட்சியில் ஏற்படும் சிலிர்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கும்.இது போன்ற சில குறைகளைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
இதையெல்லாம் தாண்டி விசிலடித்து, கைதட்டி ஆர்ப்பரிக்கிற ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களும் இதிலுண்டு. மணியன் அந்த விளக்கைக் கொள்ளையடிக்கிற காட்சிகள் அத்தகையவை.
திருவிழாக் காலத்தில் கொண்டாட்டங்களை விதைக்கிற கமர்ஷியல் படமாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கடந்த காலங்களில் அனுபவித்த வேதனைகளையும் வலிகளையும் சொல்லிச் செல்கிறது ‘ஏஆர்எம்’.
ஒரு கமர்ஷியல் படம் வாயிலாக அதனைச் சொல்கிறபோது கிடைக்கிற வரவேற்பு தனி ரகம். அந்த வகையில், இப்படம் தனித்துவமிக்கதாக மாறியிருக்கிறது.
அனைத்தையும் தாண்டி, இப்படம் முழுக்க சோதிக்காவு என்ற கிராமமே பெரும்பாலும் காண்பிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், ஒரு ‘ஆக்ஷன் அட்வெஞ்சர்’ படத்தைத் தந்திருப்பது அருமை. அதனை ‘பான் இந்தியா படமாக’ மாற்றத் துடித்திருப்பது பாராட்டுக்குரியது.
‘பான் இந்தியா படம் என்றால் என்ன’ என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்த காரணத்திற்காக, ஏஆர்எம் படக்குழுவினருக்கு நமது வாழ்த்துகள்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்