மலையக மக்களுக்கான விடிவுக் காலம் எப்போது?

எதிர்காலக் கனவுகளை ஏக்கத்தோடு பகிர்ந்த கல்லூரி மாணவி

இயற்கை தனது அரும்பெரும் கொடையை எங்கும் இல்லாத அளவிற்கு வாரித் தந்திருக்கிறது என்றால், அது இலங்கையில் உள்ள என் மலையக மண்ணிற்கே. அதன் அழகை ஒற்றை வார்த்தையில் விவரித்துவிட முடியாது.

இயற்கைச் சூழ்ந்திருக்கும் இலங்கைக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், எம் மலையகத் தமிழருக்குத் தான் எண்ணிலடங்காத் துயர்கள்.

சராசரி மனிதனுடைய அடிப்படை தேவைகளுக்குக் கூடப் போதுமான அளவு பணம் சம்பளமாக கிடைப்பதில்லை. உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் – “ஏன் வாங்க வேண்டும்?” என்ற மனநிலையில் பல வீடுகளில் தினமும் ரசம் சோறு மட்டுமே சாத்தியப்படுகிறது. பல தினங்களில் அதுவும் இல்லை. இது தான் அங்குள்ள எம் மக்களின் வாழ்க்கை. 

இந்த நிலை மாற வேண்டும். செய்யும் தொழிலுக்கு ஏற்ற வருமானம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இந்தச் சிரமங்களை எல்லாம் யாரிடம் சொல்வது? இதற்கு எங்கு தீர்வு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

இப்படி இருக்கையில் ‘தாய்’ இணைய இதழ் (https://thaaii.com/) எனக்கு எழுதுவதற்கு ஒரு வாய்ப்பையும் என் மனக்கவலையைப் பகிர்ந்து கொள்வதற்கான சூழலையும் தந்திருக்கிறது.

கல்வி கற்பதில் கூட, தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் மலையகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

மலையக மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டால், தாங்கள் ஏதோ பெரிய பட்டப்படிப்பைப் படித்து முடித்துவிட்டதைப் போல மாறிவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து கொழும்பிற்கு ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாகி விடுகிறது அங்குள்ள மாணவர்களுக்கு.

என்ன படித்திருக்கிறாய் என்றால், பத்தாம் வகுப்பு என்ற வார்த்தையைத் தவிர அவர்களிடம் வேறெதுவும் இல்லை.

பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கட்டாயம் உணர்த்த வேண்டும். ஆனால், மலையகத்தில் உள்ள நிலைமையோ வேறாக இருக்கிறது. அங்குள்ள பெற்றோர்களுக்கே முதலில் கற்பிக்க வேண்டிய நிலைமை தான் அங்குள்ளது.

மாதம் பத்தாம் தேதி ஆகிவிட்டால், மாதம் முழுவதும் வியர்வை சிந்தி, மழை, வெயில் பார்க்காமல் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை, அரை மணி நேரத்தில் மதுக்கடையில் கொண்டு கொடுத்து விடுகின்றனர் அங்குள்ள ஆண்கள்.

மது போதைதான் அவர்களின் மிகுந்த சந்தோஷம் தருவதாகக் கருதுகிறார்கள். இதைப் பார்த்து வளரும் அவர்களின் பிள்ளைகளின் மனநிலையும் அவ்வாறே இருக்கிறது. இதற்கு ஒரு மாற்றம் வர வேண்டும்.

ஆண்கள் இப்படி இருக்க, பெண்கள் அதைவிட ஒரு படி மேலே சென்று, கடல் தாண்டி வெளிநாட்டிற்கு, அதுவும் சௌதி, குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல – தனது பிள்ளைகளை கணவனிடம் விட்டுச் செல்கின்றனர்.

பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய பெற்றோர்களே இப்படிப் பொறுப்பில்லாமல் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க, வழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கும் காலகட்டத்தில்  அவர்களைத் தனியாக விட்டுச் சென்றால், அந்தப் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு வரும்போது கொழும்பிற்கு வேலைக்குச் செல்வது தவறு இல்லை தானே.

நாட்டில் உள்ள பிரச்சனைகள், அடிப்படைப் பொருளாதாரம், அதனால் உருவாகும் கஷ்டங்கள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு பெண்களும், ஆண்களும், வெளிநாட்டிற்குச் செல்வது தவறல்ல. 

ஆனால், இந்தச் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளுக்குச் சரியான பழக்கவழக்க முறைமை என்பது அங்கு நிச்சயமாக இருப்பதில்லை. அதுவே என்னைப் போன்றவர்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது.

படிப்படியாகவாவது இந்தச் சூழ்நிலையும், அவர்களின் வாழ்வும் மாற வேண்டும். உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவனும் கட்டாயமாகக் கற்றிருக்க வேண்டும். கல்வியைப் பாதியில் இடைநிறுத்தும் மாணவர்களின் உண்மை நிலையை அறிந்து, அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசாங்கம் என்பது வெறும் ஆசையாகவும், கனவாகவும் மட்டுமே இருக்கிறது. மலையக மக்களின் வாழ்க்கை முறை, மாணவர்களின் கல்வி முறை என அனைத்திலும் மாற்றம் நிகழ வேண்டும். 

இந்த உலகில் எத்தனையோ வகையான வாய்ப்புகள், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைந்து கிடக்கின்றன.

அவற்றைச் சரியான முறையில் தேர்வு செய்து வாழ்வை கொண்டு செல்ல வேண்டும்.

வெளிநாட்டிற்குச் சென்று, இன்னொரு வீட்டில் அடிமை போல், மலையக மக்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக சுய தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை உள்ளது. அவற்றை இனம்கண்டு அதன் வழியில், அவர்களின் வாழ்வில் உயர உதவி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசையும் தவிப்பும்.

இதற்கான விடியல் எப்போது பிறக்கும்?

– தனுஷா, முதுகலை நாட்டியத் துறை மாணவி,
டாக்டர். எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Comments (0)
Add Comment