அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி அண்மையில் நோய்வாய்ப்பட்டுக் கவலைக்கிடமாக புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் மறைந்திருக்கிறார். அவருக்கு வயது – 72.
சீதாராம் யெச்சூரியின் மறைவு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் கவலையடைய வைத்திருக்கிறது.
1970களில் டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக் கழகத்தில் நான் சில காலம் படித்தபோது யெச்சூரி அங்குள்ள ஸ்டீபன் கல்லூரியில் படித்தார். அப்போதும் ஜே.என்.யூ இடதுசாரி இயக்கங்கங்களுக்கு பேர்போன இடம்!
அதற்குச் சமமான காலத்தில் பிஜேபியைச் சார்ந்த அருண் ஜெட்லியும் டெல்லி பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். இதெல்லாம் கடந்த காலத்தின் நினைவுகள்.
தமிழ்நாட்டில் 1996 தேர்தல் நடந்த காலத்தில் மதிமுக, சிபிஎம் கூட்டணியில் இருந்தபோது பிரகாஷ் காரத் மற்றும் அன்றைய சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்த கரூரைச் சேர்ந்த பி.ராமச்சந்திரன் (PRC) போன்றோர்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். டெல்லி ஏ.கே.ஜி. பவனில் அடிக்கடி இவர்களைச் சந்தித்து இருக்கிறேன்!
பி.ராமச்சந்திரன் மிகச்சிறந்த ஒரு மார்க்சியச் சிந்தனையாளர். அவருடன் ஒரு நல்ல தொடர்பு எனக்கு இருந்தது. பிறகு எனக்கு ஏற்பட்ட அரசியல் தொய்வுகளில் இவர்களின் தொடர்புகள் யாவும் சற்று காலம் விட்டு போயிருந்தது.
யெச்சூரி அவர்கள் தமிழ் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த சகோதரி வாஸந்தி அவர்களின் உறவினர். ஆந்திராவைச் சேர்ந்தவர்.
இந்திரா காந்தி, 1976-ல் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியபோது மாணவராக இருந்த யெச்சூரி, அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர்.
சித்தாந்தப் பிடிப்போடு, இந்திய மக்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். இறுதிவரை அந்தக் கொள்கைகளில் உறுதியாக நின்றவர்.
இந்தியாவின் நீண்டகால அரசியல் சாட்சியாக இருந்த சீதாராம் யெச்சூரி மறைந்திருக்கிறார். அவரது சிந்தனைகள் நிலைத்திருக்கட்டும்.
– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்