சுதந்திரத்தின் நிறம் என்ன?

அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களைச் சுற்றிலும் அவர்களது உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் இளமையாக இருந்தனர்.

நீதிமன்ற வளாகத்தின் எஞ்சிய பகுதிகளில் இவர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அந்தந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

பிரச்சனையின் காரணகர்த்தாவான உலக வங்கிப் பிரதிநிதிகள், ‘எத்தனை கோர்ட் படிகள் நாங்கள் ஏறி இறங்கி இருப்போம்’ என்ற மிதப்பில், மவுனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வழக்கு கிட்டத்தட்ட இருபது நாட்கள் நடைபெற்றது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு முப்பது மணிவரை நடந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான கோட்-சூட்களை அணிந்து அவர்கள் வந்தார்கள்.

வழக்காடு மன்றத்தின் இன்னொரு பக்கத்தில் நான்கே நான்கு பேர் அமர்ந்திருந்தனர். ஒரு வழக்கறிஞர், இரண்டு உதவியாளர்கள்… நான்காவது நபர் வழக்குத் தொடுத்தவர். எண்பத்தைந்து வயது இளைஞர்!

சிறிதும் வளையாத அவரது நிமிர்ந்த முதுகினால் பார்ப்பதற்கு உயரமாகத் தெரிந்தார். சிரிக்கும்போது ஏற்படும் கன்னச் சுருக்கங்களைத் தவிர அவர் முகத்தில் ஒரு சுருக்கத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன் வலுவான கால்களை மிக நிதானமாக எடுத்துவைத்து நடந்து செல்கிறார்.

கண்களின் மேலே சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்ததன் அடையாளமாக பச்சைத்துணி போடப்பட்டிருந்தது. அதற்கு மேலாக பெரிய கண்ணாடி அணிந்திருக்கிறார். யாராவது பேசினால் அந்த திசையில் காதை நகர்த்தி கையைக் குவித்துக் கேட்கிறார்.

அந்த நீதிமன்ற அறையில் சவுகரியமான ஆடையை அணிந்திருப்பது அவர் ஒருவர் மட்டுமே. ஒரு வெள்ளை நிற வேட்டி… கதர் சட்டை. கழுத்தில்லாத அந்தச் சட்டை தோளில் இருந்து மிகவும் தொளதொளவென தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த சட்டையும் வேட்டியும் அவராலேயே நெய்யப்பட்டவை. கடந்த ஐம்பது வருடங்களாக, அவர் தன் கையால் நெய்த கதராடைகளை மட்டுமே அணிந்து வந்திருக்கிறார். ஒரு ரப்பர் செருப்பு அணிந்திருக்கிறார். அவர் பெயர் ஜெகந்நாதன்!

இந்த முதியவர் ஆணித்தரமான ஒன்றை முன்வைத்து வழக்குத் தொடுத்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை ஒரேயடியாக மூடச்சொல்லி பத்து ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் வழக்குத் தொடுத்துள்ளார்.

புவி முழுவதும் தன் கரங்களைப் பரப்பியுள்ள உலக வங்கியையும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத் துறையையும் தனி ஒரு நபராக எதிர்த்து நிற்கிறார்.

அவர் யாருக்காகப் போராடுகிறாரோ அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம்கூட அவருக்கு எதிரணியாகவே களத்தில் நின்று கொண்டிருக்கிறது.

ஃபிலிப்பைன்ஸ் முதல் ஈக்வடார் வரை பன்னாட்டு முதலாளித்துவம் பாழ்படுத்திய கடலோர வாழ்க்கைகளுக்கு பதில் சொல்லும்படிக் கேட்கிறார்.

வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்து வறுமையில் வாடும் லட்சக்கணக்கான விவசாய மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லும்படிக் கேட்கிறார்.

ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா முதலான நாடுகளின் சூப்பர் மார்கெட்களில் கூறுகட்டி விற்கப்படும் மூன்றாம் உலக நாட்டு மக்களின் துயரத்துக்கான நியாயம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்.

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார்.

அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

அவர் தன் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைத் திறக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதன் மூலம் சரித்திரத்தின் இன்னொரு பக்கத்தையும் அவர் எழுப்பும் எளிய கேள்விகளுக்கு அவரிடமே அற்புதமான பதில்கள் இருக்கின்றன.

யாராலும் செவிமடுக்கப்படாமல் போகும் அந்த பதில்களை அவர் தன் மெலிந்த, உறுதியான குரலில் எடுத்து வைக்கிறார். அவர் தன் தரப்பு வாதங்களை மெல்லமெல்ல முன்வைக்கும்போது கோட்-சூட்கள் இருக்கைகளில் நெளியத் தொடங்குகிறார்கள்.

ஃபைல்களால் விசிறிக் கொள்கிறார்கள். தங்கள் டைகளை தளர்த்திவிட்டுக் கொள்கிறார்கள். ‘எண்ணிக்கை அல்ல, தர்மமே வெல்லும்’ என்பது மெல்ல அவர்களுக்கு விளங்க ஆரம்பிக்கிறது.

– லாரா கோப்பா (‘சுதந்திரத்தின் நிறம்’ நூலிலிருந்து…)

காந்தி, வினோபா இவர்களின் ஒற்றை வார்த்தையை வாழ்வுச் சொல்லாக ஏந்தி, அதே ஆத்மபலத்துடன் இறுதிவரை தளராத நம்பிக்கையோடும் கருணையோடும் மக்களுக்காக சேவையாற்றுகிற இந்த இணையர்களின் தன்சரிதையான இந்நூல் அவரவர் கோணத்தில் சொல்வதாக உள்ளது.

இமயமலைப் பிரதேசங்களில் ‘சிப்கோ’ இயக்கம் மூலமாக மரங்களைக் காத்த காந்தியர் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் சிறுகுறிப்போடு இப்புத்தகம் முழுமையடைகிறது.

 ******

சுதந்திரத்தின் நிறம்

(கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு)

புத்தக விலை: ரூ.500/-

தன்னறம் நூல்வெளி

தொடர்புக்கு – 9843870059

Comments (0)
Add Comment