போதைப் பொருள் விற்பனை: சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது!

சென்னையில் ரவுடிகள் ஒழிப்பைத் தொடர்ந்து, போதைப் பொருள் ஒழிப்புப் பணியை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த 6 முதல் 8-ம் தேதி வரையிலான 3 நாட்கள் ‘போதைத் தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்களை காவல் துறையினர் கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 58 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர்.

இதனிடையே, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment