தி கோட் – இது விஜய் படமா, வெங்கட்பிரபு படமா?

தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்தபிறகு வெளிவரும் படம் என்பதால், பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ‘தி கோட்’ பட ரிலீஸ்.

கூடவே, வெங்கட்பிரபு – விஜய் காம்பினேஷனில் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, அஜ்மல் அமீர் உள்ளிட்டவர்களுடன் மோகன் வில்லனாக நடித்திருக்கிறார் என்பதே இப்படத்தின் ‘ஹைலைட்’டாக கருதப்பட்டது.

வெங்கட்பிரபுவின் முந்தைய படங்கள் அனைத்துமே வழக்கமான ‘கமர்ஷியல் பட’ வகைமையில் இருந்து சற்றே வேறுபட்டு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. அப்படங்களின் நகைச்சுவையும் நமக்குப் பிடித்தமானதாக இருந்தன.

அந்த வகையில், ‘தி கோட் விஜய் படமாக இருக்குமா அல்லது வெங்கட்பிரபு படமாக இருக்குமா’ என்ற கேள்வியும் நமக்குள் எழுந்தது. படத்தின் பாடல்களோ, ட்ரெய்லரோ வெளியானபோது அதற்கு நம்மால் விடையறிய முடியவில்லை.

சரி, ‘தி கோட்’ படம் பார்த்து முடித்தபிறகு, அக்கேள்விக்கு என்ன பதில் கிடைக்கிறது?

துண்டுச்சீட்டில் எழுதக்கூடிய கதை!

ரா உளவு அமைப்பின் ‘சாட்ஸ்’ எனப்படும் ‘பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு படை’யில் பணியாற்றுகிறார் எம்.எஸ்.காந்தி (விஜய்). கல்யாண் (பிரபுதேவா), சுனில் (பிரசாந்த்), அஜய் (அஜ்மல் அமீர்) ஆகியோருடன் ஒரு குழுவாகச் சேர்ந்து சாகசங்களில் ஈடுபடுவது அவரது வழக்கம். நசீர் (ஜெயராம்) அக்குழுவுக்குத் தலைவர்.

2008இல் கென்யாவில் ஓடும் ரயிலில் தீவிரவாதி ஓமர் கும்பல் யுரேனியம் கடத்துவதாகத் தகவல் கிடைக்கிறது. அவர்களைப் பிடிக்க இந்த நால்வர் படை செல்கிறது.

ரயிலில் சாட்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜிவ் மேனனும் (மோகன்) இருக்கிறார். அவர், தேசத்துரோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

விஞ்ஞானி போர்வையில் ரயிலுக்குள் நுழையும் காந்தி, ஓமரின் ஆட்களைக் கொன்று யுரேனியத்தைக் கைப்பற்றுகிறார். ஆனால், ராஜிவ் மேனனை அவரால் பிடிக்க முடிவதில்லை. அதற்குள் ரயிலில் வைக்கப்பட்ட குண்டு வெடிக்கிறது.

அதன்பிறகு வெவ்வேறு சாகசங்களில் ஈடுபட்டாலும், அதனைத் தனது மனைவி அனுவுக்குத் (சினேகா) தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் காந்தி. ஆனால், அவர் அவ்வாறு மறைப்பது அனுவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

‘வேறு பெண்ணுடன் தொடர்பிருக்கிறதோ’ என்று நினைக்கிறார். அந்த நேரத்தில், அவர் இரண்டாவது முறையாகக் கர்ப்பமுற்றிருக்கிறார்.

மனைவியைச் சமாதானப்படுத்த, பாங்காக்கில் நடைபெறும் ஆபரேஷனுக்கு செல்லும்போது அனுவையும் ஐந்து வயது மகன் ஜீவனையும் அழைத்துச் செல்கிறார் காந்தி. அங்கு, காந்தி குழுவின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிகிறது.

ஆனால், குடும்பத்தோடு அவர் விமான நிலையம் செல்கையில் ஒரு கும்பல் வழிமறிக்கிறது. அவரைத் தாக்குகிறது. அப்போது, அனுவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் காந்தி. அப்போது, ஜீவன் அவருடன் இருக்கிறார்.

ஆனால், அறுவைச் சிகிச்சைக்கான விண்ணப்பத்தில் அவர் கையெழுத்திட்டு வருவதற்குள் ஜீவன் காணாமல் போகிறார்.

மகனைப் பல இடங்களில் தேடுகிறார் காந்தி. அப்போது, சிசிடிவி பதிவுகளில் இருந்து ஒரு பெண் அவரை ஒரு வேனில் ஏற்றிச் செல்வது தெரிய வருகிறது. உடனே, அந்த பெண்ணையும் வாகனத்தையும் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறது தாய்லாந்து போலீஸ்.

அந்த நேரத்தில், அந்த வேன் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் தகவல் கிடைக்கிறது. அதிலிருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு குழந்தையின் சடலமும் கிடைக்கிறது. அதனை அறிந்ததும் கதறி அழுகிறார் காந்தி.

அந்த சம்பவம், காந்தி – அனு இடையே விரிசலை உருவாக்குகிறது. இரண்டாவதாகப் பிறந்த மகள் ஜீவிதா உடன் அனு தனியே வாழ்கிறார். காந்தி தனியே வசிக்கிறார்.

சாட்ஸ் குழுவின் களச் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி, ‘தானுண்டு தனது வேலையுண்டு’ என்று இருந்து வருகிறார் காந்தி.

இந்த நிலையில், ரஷ்யாவிலுள்ள இந்தியத் தூதரகமொன்றில் சில அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அங்குள்ள பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க, காந்தி அங்கு அனுப்பப்படுகிறார்.

தூதரகத்திற்குக் காந்தி சென்ற வேளையில், அங்கு ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபடுகிறது. அதில் தன்னைப் போலவே இருக்கும் ஒரு இளைஞனைப் பார்க்கிறார் காந்தி.

அந்த இளைஞனைப் பின்தொடர்ந்து செல்லும் காந்தி, அது தனது மகன் ஜீவன் (விஜய்) தான் என்று அறிகிறார். மகிழ்ச்சியோடு அவரைத் தன்னுடன் சென்னைக்கு அழைத்து வருகிறார்.

ஜீவன் வந்தபிறகு, காந்தியின் வாழ்வு அடியோடு மாறுகிறது. மனைவி, மகன், மகளோடு அவர் வாழத் தொடங்குகிறார்.

திடீரென்று ஒருநாள் நசீர் காந்திக்கு ‘போன்’ செய்கிறார். உடனடியாகத் தன்னைச் சந்திக்க வருமாறு கூறுகிறார். அதற்குள், ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் நசீரைக் கொல்லத் துரத்துகிறார்.

யார் அந்த ஹெல்மெட் நபர்? காந்தியிடம் நசீர் சொல்ல வந்தது என்ன? ஜீவன் ரஷ்யாவுக்கு எப்படிச் சென்றார்? இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விரிகிறது ‘தி கோட்’டின் மீதிப்பாதி.

அதோடு, இந்தக் கதையில் ராஜிவ் மேனனுக்கு என்ன பங்கு என்றும் சொல்கிறது.

அந்த வகையில், ‘நாட்டுப்பற்று + குடும்ப சென்டிமெண்ட் + ஆக்‌ஷன்’ கலந்து தொண்ணூறுகளில் வெளியான சில இந்தி, தெலுங்கு, தமிழ் படங்கள் பார்த்த நினைவுகளைத் தட்டியெழுப்புகிறது ‘தி கோட்’.

ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய இக்கதையில், ’டீ ஏஜிங்’ நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதே இப்படத்தின் யுஎஸ்பியாக இருக்கிறது.

இளமை ‘விஜய்’!

இப்படத்தில் தந்தை, மகனாக வருகிறார் விஜய். இதற்கு முன்னர் மெர்சல், பிகில் படங்களில் அவ்வாறு நடித்தபோதும், அதிலிருந்து பெருமளவில் வேறுபடுகிறது ‘தி கோட்’.

அதுவும், இருபதுகளில் இருந்த ‘நாளைய தீர்ப்பு’, ‘ரசிகன்’, ‘விஷ்ணு’ காலகட்டத்து விஜய்யின் இளமைத் தோற்றத்தை ‘டீஏஜிங்’ நுட்பத்தில் காண்பித்திருப்பதே இப்படத்தை ரசிகர்கள் வியக்கக் காரணமாக இருக்கிறது.

விரக்தி, வெறுமை, ஆத்திரம், இயலாமையை வெளிப்படுத்துகிற காட்சிகளில் மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் இன்னொரு வெரைட்டி காட்டியிருப்பது அருமை.

குறிப்பாக, ‘பார்த்திபன் கனவு’ படத்தில் விவேக் ‘லாட்டூ சாப்பிடுறியா கண்ணு லாட்டூ’ என்று தேவதர்ஷிணியைக் கேட்பாரே, அதே தொனியில் சினேகாவைப் பார்த்து ‘சாஸ்திரிபவன் உள்ளே போறப்பவா, வெளியில வர்றப்பவா’ என்று விஜய் கேட்கும்போது ‘வெடிச்சிரிப்பு’ வருகிறது.

அதேநேரத்தில், இளமை விஜய்யின் இரண்டாம் பாதி ‘அட்ராசிட்டி’ கொஞ்சம் எரிச்சலை வரவழைக்கிறது என்பதையும் ‘அழுத்திச்’ சொல்ல வேண்டியிருக்கிறது.

சினேகாவுக்கு இதில் அம்மா வேடம். அதையும் ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறார்.

இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பிரசாந்த், பிரபுதேவாவின் இருப்பு. இருவருமே விஜய் திரையுலகில் நுழைந்தபோது நாயகர்கள் ஆனவர்கள் என்பதால், அதற்கேற்ற முக்கியத்துவம் காட்சிகளில் இருக்கிறது.

அதே பாத்திரங்களில் வேறு யாராவது நடித்திருந்தால் இந்த முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது சந்தேகமே!

மோகன் இந்த படத்தில் வில்லனாக வருகிறார். அவருக்கான காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், இப்படம் மூலமாக வேறு சில படங்களில் அவர் தலைகாட்டும் வாய்ப்பு உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி.

இவர்கள் தவிர்த்து அஜ்மல் அமீர், ஜெயராம், லைலா, வைபவ், சுப்பு பஞ்சு, விடிவி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், கனிகா, திலீபன், அஜய்ராஜ், யுகேந்திரன் என்று பலர் வருகின்றனர்.

அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ், கோமல் சர்மா, அஞ்சனா கீர்த்தி எல்லாம் சில ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.

பிரேம்ஜி இதில் விஜய்யின் மச்சானாக வருகிறார். அவர் வரும் இரண்டொரு காட்சிகள் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. அதேபோல, யோகிபாபுவும் தன் பங்குக்கு முகம் காட்டியிருக்கிறார்.

மீனாட்சி சௌத்ரியை இப்படத்தின் நாயகி என்று சொல்வது அபத்தம். அவர் ஒரு பாடலிலும் சில காட்சிகளிலும் ‘எக்ஸ்ட்ரா’வாக தலைகாட்டியிருக்கிறார்.

‘சரி, இத்தனை பேர் வருகிற அளவுக்குத் திரைக்கதையில் இடமிருக்கிறதா’ என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொன்னால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

அதற்கேற்றவாறு திரைக்கதையை ஆங்காங்கே ‘பட்டி டிங்கரிங்’ செய்திருக்கிறது எழிலரசன் குணசேகரன், கே.சந்துரு, வெங்கட்பிரபு குழு.

மொத்தப்படமும் தளபதியும் இளைய தளபதியும் இணையும் அந்த சண்டைக்காட்சியைச் சார்ந்தே இருக்கிறது. அந்த தருணம் தவிர்த்து, இப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் நம்முள் லாஜிக் சார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன.

‘மாநாடு’ படத்திலும் இதே போன்ற கதாபாத்திர விவரணைகளை வெங்கட்பிரபு கையாண்டிருப்பார்.

ஆனால், அதிலிருந்த காட்சிகள் நம்முள் எந்தக் கேள்விகளையும் எழுப்பாததற்கு, அக்கதையில் பிளாஷ்பேக்குகள் ஏதும் இல்லை என்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், ‘தி கோட்’ திரைக்கதையை ‘தி பெர்பெக்ட்’ என்று சொல்ல முடியாது.

அதேநேரத்தில், ரசிகர்களை விசிலடிக்கிற வைக்கிற ‘மொமண்ட்கள்’ இதில் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

த்ரிஷா, சிவகார்த்திகேயன் ‘கௌரவ தோற்றத்தில்’ வருகிற இடங்கள் அப்படிப்பட்டவை தான்.

சுமார் மூன்று இடங்களில் ‘தல ரெஃபரன்ஸ்’ இடம்பெற்றிருக்கின்றன. அவை ஒரு விஜய் படத்தில் இடம்பெற்றிருப்பதுதான் சிறப்பான விஷயம்.

போலவே, விஜய்யின் முந்தைய படங்களை நினைவூட்டும் ஷாட்கள், காட்சிகள், வசனங்கள் இதில் ஆங்காங்கே வருவது, அவரது நீண்டகால ரசிகர்களை நிச்சயம் ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கும்.

எப்படி இளமையான விஜய் இந்த படத்தின் சிறப்பம்சமோ, அதே போன்று விஜய், பிரசாந்தை வயது வந்த குழந்தைகளின் தந்தைகளாகக் காட்டியிருப்பதும் இப்படத்தைச் சிலாகிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, இரண்டு விஜய் வருகிற காட்சிகளில் விஎஃப்எக்ஸ் சிறப்பாக அமைவதைத் திட்டமிட்டு தன்னுழைப்பைத் தந்திருக்கிறார்.

அதேநேரத்தில், திரையில் ஒரு ‘ஸ்பை த்ரில்லர்’ பார்க்கும் உணர்வை உண்டாக்குவதற்கான ‘கிராண்ட் கான்வாஸ்’ தென்படாதது வருத்தமளிக்கும் விஷயம்.

வெங்கட் ராஜன் இதன் படத்தொகுப்பாளர். சண்டைக்காட்சிகளில் அவரது பணி சிறப்பாக அமைந்துள்ளது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், இப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற சூழலைத் திரையில் காட்ட உதவியிருக்கிறார். ஆனாலும், ’இதெல்லாம் செட் தான்’ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இவை தவிர்த்து ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, நடனம், சண்டை வடிவமைப்பு உட்படப் பல பணிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக, விஜய் படங்களில் பாடலும் அதற்கான காட்சியமைப்பும் சிறப்பாக இருக்கும். திரும்பத் திரும்பப் பார்க்கையில் சலிக்காதவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

‘தி கோட்’ அந்த அனுபவத்தைத் தருமா என்பது சந்தேகமே. அதனால், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதையும் தாண்டி ‘விசில் போடு’, ‘மட்ட மட்ட’ பாடல்கள் துள்ளலை விதைக்கின்றன. பின்னணி இசையும் ஆங்காங்கே துடிப்பை ஏற்றுகின்றன.

விஜயகாந்தை ‘ஏஐ’ நுட்பத்தில் உயிர்ப்பித்திருக்கும் காட்சியில், ’கேப்டன் பிரபாகரனை’ நினைவூட்டும் பின்னணி இசை தந்திருப்பது அருமை. ஆனால், அது போன்று நினைவில் வைத்துக்கொள்கிற இடங்கள் இதில் குறைவு படத்திற்கு ப்ளஸ்ஸா, மைனஸா? நமக்குத் தெரியவில்லை.

‘விஜயகாந்தா அது’ என்று நாம் தெளிவடைவதற்குள், அக்காட்சி முடிந்துவிடுகிறது. அந்த அளவுக்கே, அதில் விஎஃப்எக்ஸ் அமைந்திருக்கிறது.

போலவே, தொடக்கம் மற்றும் இறுதி சண்டைக்காட்சிகளில் விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் விஜய் ரசிகர்களையே எரிச்சல்படுத்தக்கூடியது. இளமை விஜய்யை தொடக்கத்தில் காணும்போது ‘ஜெர்க்’ ஆனாலும், அரும்பு மீசையும் தாடியுமாக அந்த தோற்றம் நம்மை வசீகரிக்கும் விதத்தில் கிராபிக்ஸ் பணிகள் அமைந்திருக்கின்றன.

வெங்கட்பிரபு இப்படத்தில் கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார். ஆனால், அது இரண்டு விஜய்யை திரையில் காட்டிய விதத்தில் மட்டுமே தெரிய வருகிறது.

அதைத் தாண்டி, இப்படத்தைச் சுவாரஸ்யப்படுத்த, பிரமாண்டமாக மாற்ற, கிளாசிக் அந்தஸ்தை எட்ட வைக்க, இதில் கூடுதல் உழைப்பு இடப்படவில்லை.

இரண்டாம், மூன்றாம் வாரங்களில் இப்படத்தைக் குடும்பத்தோடு காண வரும் ரசிகனுக்கு அது நிச்சயம் ஏமாற்றம் தரும்.

பழைய ‘பட’ வாசனை!

தாய்நாடு, வெற்றி விழா, நாளைய செய்தி, இணைந்த கைகள், உழவன் மகன், கலைஞன், ஐ லவ் இந்தியா என்று தொண்ணூறுகளில் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார் நடித்த மிகச்சில படங்கள் திரையில் பிரமாண்டம் காட்டியிருக்கின்றன.

என்னதான் பரந்த நிலப்பரப்பில் கதை பயணித்தாலும், அவற்றின் மைய இழையாக ‘நாயகன் குடும்பம்’ இருப்பதே அவற்றின் ஆணிவேராக அமைந்திருக்கும்.

கிட்டத்தட்ட அதே பார்முலாவில் ‘தி கோட்’ படத்தைத் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு. ‘புத்தம்புதிய கிளாஸில் மிகப்பழமையான ஒயின் ஊற்றிக் குடிப்பதும் இன்பம் பயக்கும்’ என்பவர்கள் இதனை நிச்சயமாகக் காணலாம்.

ஏற்கனவே சொன்னது போல விஜய்யின் பிலிமோகிராபியை நினைவூட்டும் காட்சிகள், டீஏஜிங் நுட்பம் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

அதனைத் தவிர்த்துப் பார்த்தால், இப்படம் விஜய் படமாகவோ, வெங்கட்பிரபு பாணி படமாகவோ தென்படாது என்பதே உண்மை. அதனை ப்ளஸ் ஆக எடுத்துக்கொள்வதும், மைனஸ் ஆக எடுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

தி கோட் விமர்சனம்
Comments (0)
Add Comment