உள்ளத் தூய்மை வாழ்வை அழகாக்கும்!

நூல் அறிமுகம்:

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமாகிய திரு.வெ.இறையன்பு அவர்கள் எழுதிய புத்தகம் தான் ‘சுத்தம்’ என்ற இந்த சிறிய புத்தகம்.

தனது பணிகளினால் மட்டும் அல்ல தன்னுடைய எழுத்துகளினாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர் வெ.இறையன்பு.

எளிய நடையில் தனது வாழ்க்கை மற்றும் பணிக்கால அனுபவங்களை அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு திறம்பட வெளிப்படுத்துவது இவரின் தனித்தன்மை.

அந்த வகையில் சுத்தம் என்ற இந்த புத்தகத்தின் வழியாக சுத்தத்தின் அவசியத்தையும், மேன்மையையும் விளக்குவதோடு, நமது வாழ்விடம், பணிபுரியும் இடம் முதலியவற்றோடு மட்டுமின்றி நமது உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள நமக்கு இந்த புத்தகம் மூலம் ஆசிரியர் வழிகாட்டுகிறார்.

சுறுசுறுப்பாக இருப்பவர்கள் தங்கள் பண்பை முதலில் வெளிப்படுத்துவது தங்கள் சுத்தமான தோற்றத்தின் மூலம் தான் என்று கூறி, “சுத்தம் மற்றும் சுகாதாரம் சுறுசுறுப்பு வெளிப்படும் பரிமாணம்” என்கிறார்.

ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை அறிய வரவேற்புரையை மட்டுமே வைத்து அந்த வீடு அழகாக ஜொலிக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது.

சமையலறையும், கழிவறையும் எப்படி இருக்கிறது என்பதுதான் அவர்கள் வீட்டை பராமரிப்பதற்கு அளவுகோல். அசுத்தமும் அழுக்கும் நிறைந்து பொருட்கள் இறைந்து கிடக்கும் வீடு மன நிம்மதியைத் தர இயலாது என்கிறார்.

பஞ்சபூதங்களின் சுத்தத்தைப் பேணும்போதுதான் நம் பிரபஞ்சம் அழகாக ஆகிறது. நாம் சுத்தமாக இருப்பது என்பது தனிப்பட்ட விஷயமாக பெரும்பாலும் இருந்தாலும், மனிதன் சமூக விலங்காக இருப்பதால் நம் அசுத்தமும் அழுக்கும் மற்றவர்களையும் பாதிக்கவே செய்கிறது என்கிறார்.

அது மட்டுமின்றி அதிகப்படியான சுத்தத்தைக் கடைபிடிப்பதும், அது பட்டுவிட்டது, இது பட்டுவிட்டது என்று கைகளை அடிக்கடி கழுவிக் கொண்டிருப்பதும்கூட ஒரு வித வியாதி என்று கூறுகிறார்.

இவ்வளவும் கூறி முடித்த பின்பு, இறுதியாக உடல் சுத்தமாக இருந்தால் போதாது நமது மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். உடலும் உள்ளமும் சுத்தமாக இருப்பவர்கள் தங்கள் சுற்றுச்சூழலை நறுமணம் ஆக்கி உலகை பொருள் புரிந்ததாக்குகிறார்கள் என்று புத்தகத்தை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

முதலில் தன் சுத்தம் மன சுத்தம் இவற்றை ஒவ்வொருவரும் முறையாக கடைப்பிடித்தாலே நமது சுற்றுப்புறத்தில் சுகாதாரம் தானாக உயரும் என்பதை இந்த புத்தகம் வாசிக்கும் பொழுது உணர முடிந்தது.

சுத்தம் என்பது ஒரு பண்பாடு. உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுபோலவே உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கை உன்னத அனுபவமாக இருக்கும் என்று சுத்தத்தின் அவசியத்தை விவரிக்கிறது இந்நூல்.
வெளித்தோற்றத்தில் சுத்தமாக இருப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், தங்களின் வசிப்பிடங்களையும், பணிபுரியும் இடங்களையும் மேலதிகமான சுத்தமாகப் பேண வேண்டுமென்பதற்கு வழிகாட்டுகிறது இந்நூல்.

– மோ.ஆடம்ஸ்

*****

நூல் : சுத்தம்
ஆசிரியர்: வெ.இறையன்பு இ.ஆ.ப
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்:26
விலை: 50/-

Comments (0)
Add Comment