கெட்அப் மாற்றாமல் விக்ரம் நடிப்பில் அசத்திய ‘கிங்’!

சில திரைப்படங்கள் உள்ளடக்கத்தை மிகச்சிறப்பாகக் கொண்டிருக்கும். ஆனால், படம் வெளியான காலகட்டத்தில் கவனிக்கப்படாமல் போயிருக்கும். அதற்குப் பிறகும் கூட, ரசிகர்களிடம் உரிய மரியாதையைப் பெறத் தவறியிருக்கும். அதற்கும் பல காரணங்கள் இருக்கும்.

அதையெல்லாம் மீறி, என்றாவது ஒருநாள் யாராவது ஒரு ரசிகர் அதனைக் கண்டு சிலாகித்த பிறகு மீண்டும் வெளிச்சம் பெறும். அப்படிப்பட்ட கவன ஈர்ப்பை மிகச்சில படங்கள் நிகழ்த்தியிருக்கின்றன.

சில, காலம் கடந்தும் அப்படியொரு கவனத்தைப் பெறக் காத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, விக்ரம், நாசர், ஜனகராஜ், சினேகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘கிங்’. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதியன்று இப்படம் வெளியானது.

இதனை இயக்கியவர் பிரபு சாலமன். ஆம், பிரபு என்ற பெயரில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ தந்தவர், இரண்டாவதாக இயக்கிய படம் இது. இப்படத்தில் அவரது பெயர் ஏ.எக்ஸ். சாலமன் என்று இடம்பெற்றிருக்கும்.

இந்தியன் தியேட்டர் புரொடக்‌ஷன் சார்பில், எஸ்.கே.கிருஷ்ணகாந்த் இதனைத் தயாரித்திருந்தார். தனுஷின் ‘திருடா திருடி’, எஸ்.டி.ஆரின் ‘மன்மதன்’ படங்களைத் தயாரித்தவர் இவரே.

வித்தியாசமான கதை!

ஹாங்காங்கில் தந்தை, மகன் இருவரும் வசித்து வருகின்றனர். தந்தை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகத் திகழ, மகன் ஒரு தந்திரக்கலை நிபுணராக (Megician) விளங்குகிறார்.

ஒருநாள் இருவரும் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது. அப்போது நடத்தப்படும் ரத்தப் பரிசோதனையில், இருவரில் ஒருவருக்கு மல்டிபிள் ஸ்லோரோசிஸ் நோய் இருப்பது தெரிய வருகிறது.

அது ஒருவரைத் தாக்கினால், அந்த நபரின் நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலுமாகக் குறைந்து மரணம் நிகழும்.

அந்த நோய் தந்தைக்கு இருப்பதாக, அவரது மகனிடம் கூறுகிறார் குடும்ப மருத்துவர். அதேநேரத்தில், அவருக்குத் தனிமையும் ஓய்வும் நிம்மதியும் தேவை என்கிறார்.

தந்தையும் தாயும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பது மகனுக்குத் தெரியும். தாய் இறந்துபோனாலும், தந்தை மட்டும் இந்தியாவில் தனது உறவினர்களைப் பார்க்கச் செல்லாமல் இருக்கிறார் என்ற காரணம் மட்டும் தெரியாது.

ஊரில் இருக்கும் உறவினர்களுக்குத் தங்கள் திருமணத்தில் இஷ்டமில்லை என்கிறார் தந்தை. குறிப்பாக, ‘உன் தாத்தா என்னுடன் பேச மாட்டார். அதனால் அங்கு செல்வதில்லை’ என்கிறார்.

அதனைக் கேட்டதும், ‘அப்பா உங்களை ஏற்றுக்கொள்ளும்விதமாக அவர்களை மாற்றுகிறேன்’ என்கிறார் மகன். நேராக ஹாங்காங்கில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

பேரனைப் பார்த்த முதல் நொடி தாத்தா முறைக்கிறார். உறவினர்களும் அப்படித்தான் இருக்கின்றனர். ஆனால், அங்கு அவர் தங்கிய சில நாட்களிலேயே, அவர்களது உண்மையான பாசம் தெரிய வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக, அவர்கள் மனதில் தன் தந்தைக்கு ஓரிடத்தைத் தரச் செய்கிறார் அந்த மகன்.

அங்கிருக்கும் அவரது முறைப்பெண், அவரைக் காதலிக்கிறார். இவரும் அப்படியே.

அதையடுத்து, ஹாங்காங்கில் இருக்கும் தந்தையும் அவ்வூருக்குத் திரும்புகிறார். சொந்தங்களுடன் ஐக்கியம் ஆகிறார்.

எல்லாமே சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், குடும்ப மருத்துவரின் ‘போன்’ வருகிறது. தந்தை என்று நினைத்து மகனிடம் அவர் பேசுகிறார். அப்போது, ‘உன் மகனுக்கு நோய் இருப்பது தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறோம்.

அவனை எப்படியாவது வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய். அவன் உயிரோடிருப்பது இன்னும் சில நாட்களே’ என்கிறார்.

அதுவரை தந்தை போல ‘மிமிக்ரி’ செய்து ஏமாற்றிய அந்த மகனுக்கு இதயமே வெடித்துவிடுவது போலிருக்கிறது. தனக்கு நோய் இருப்பதாகச் சொல்லி தந்தை நாடகமாடினாரா? அவரால் எப்படி இந்த வலியைத் தாங்க முடிந்தது?

அந்தக் கேள்விகளுடன் தந்தையின் முன் நிற்கிறார் மகன். அதன்பிறகு, ஊரில் இருக்கும் தாத்தா, அத்தை, முறைப்பெண், மச்சான் என்று பல சொந்தங்களை விட்டுவிட்டு, அவர்களிடம் உண்மையை மறைத்துவிட்டு, தந்தையும் மகனும் விமானம் ஏறினார்களா என்பதே ‘கிங்’ படத்தின் மீதிக்கதை.

உண்மையைச் சொன்னால், இது கொஞ்சம் வித்தியாசமான கதை. நாயகனுக்கோ, நாயகிக்கோ கொடிய நோய் இருப்பதாகக் காட்டுவது புதிதல்ல என்றபோதும், அதனை குடும்ப செண்டிமெண்ட் பின்னணியில் திரையில் சொல்லியிருந்த விதம் நிச்சயம் ‘ப்ரெஷ்’ஷாக இருந்தது.

காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என்று அனைத்து சுவைகளும் இருந்தன. அப்படியிருந்தும், ‘கிங்’ படம் பெரிய கவனிப்பைப் பெறவில்லை.

அந்த நேரத்தில், விக்ரமுக்குத் திரையுலகில் பெரியளவில் வரவேற்பு இருந்தது. ஆனால், அதுவே இப்படத்தின் தோல்விக்கும் காரணமானது.

மைனஸ் ஆன ப்ளஸ்!

சேது படத்தில் அனைவரது மனங்களையும் கவர்ந்த விக்ரம், பிறகு தில், காசி, ஜெமினி, சாமுராய் படங்களில் நடித்தார்.

நட்சத்திர அந்தஸ்தை அவர் எட்டியிருந்தார். அதன்பிறகு, அவரை ‘மிகச்சிறந்த நடிகராக’ மட்டும் பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை.

அதனால், விக்ரமை சோகமயமாகத் திரையில் அவர்கள் பார்க்கவில்லை. அதுவே, இப்படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம்.

ஆக, ஒரு ‘ப்ளஸ்’ எப்படி ‘மைனஸ்’ என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.

அதேநேரத்தில், விக்ரமின் நடிப்பை ரசிப்பவர்களைப் பொறுத்தவரை ’கிங்’ ஒரு மாஸ்டர்பீஸ்.

இப்படத்தில் அவருக்கென்று ‘கெட்அப்’ மாற்றம் ஏதும் கிடையாது. ஆனால் அவர் நடித்த பல படங்கள் நிறைவாகி வெளியாகி வந்தன.

அவற்றின் இடையே படப்பிடிப்பு நடந்த காரணத்தால், அதே தோற்றத்தோடு இதில் ஆங்காங்கே வந்து போயிருப்பார்.

அந்த காலகட்டத்தில், விக்ரம் நடித்த ‘கிங்’, ‘காதல் சடுகுடு’ இரண்டும் தயாரிப்பில் நீண்ட காலம் இருந்தன. அப்படங்களின் கதைகளைக் கேட்டதும், அவை தயாரிக்கத் தொடங்கியதும் ‘சேது’வின் வெற்றிக்குப் பிறகான காலத்தில் தான்.

ஆனால், அப்படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம், அவற்றின் வெற்றியையும் பாதித்தன. அதற்குள் அவர் ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக உருமாறியிருந்தார்.

‘கிங்’ படத்தின் மொத்தக் கதையும் ஜனகராஜ், நாசர், விக்ரம் என்ற மூன்று பேரைச் சுற்றியிருந்தது. அதற்கேற்ப அவர்கள் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.

நாயகியாக சினேகா தோன்றியிருந்தார். திரையில் பாந்தமாகத் தெரிந்தார்.

வடிவேலு, சாம்ஸ் கூட்டணியின் நகைச்சுவை அட்டகாசம்.

தினா இசையில் ’அச்சுவெல்லம் பச்சரிசி’, ‘காதலாகி காதலாகி காதல் செய்யும்’, ’சகியே போகாதே போகாதே’, ’குளுகுளு காற்றே’ பாடல்கள் அந்த காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன. அப்பாடல்கள் திரைக்கதையைத் தாங்கிப் பிடிப்பதாகவும் இருந்தன.

ஹாங்காங், இந்தியா என்று வெவ்வேறுபட்ட லொகேஷன்களை அழகுறத் திரையில் காட்டியிருந்தார் ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷ்.

நாயகனுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் உணர்வுத்திறன் கோளாறுகளை வெளிப்படுத்தும் வகையில் படத்தொகுப்பைக் கையாண்டிருந்தார் சுரேஷ் அர்ஸ்.

திரையில் கதை விரிந்த விதமும் மிக எளிதானதாகத் தெரிந்தது.

அனைத்தையும் தாண்டி, துறுதுறுப்பான நாயகன் தனது தந்தையின் உறவினர்களோடு எளிதாக உறவாடும் காட்சிகளிலும் கூட மென்சோகம் இழையோடும் வகையிலான திரைக்கதை ட்ரீட்மெண்டை கையாண்டிருந்தார் இயக்குனர் பிரபு சாலமன்.

அது, நாயகனின் தந்தைக்குத் தெரிந்த உண்மை பார்வையாளர்களுக்குத் தெரியும் என்பதைச் சொல்லும் வகையில் அமைந்திருந்தது.

அதுவே ‘கிங்’ படத்தை நேர்த்தியாக நாம் உணரக் காரணம்.

இன்றும் இப்படத்தைத் தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்ந்தால், காட்சிகளில் நிறைந்திருக்கும் பூரணத்தை, ஒழுங்கமைப்பைக் காண முடியும்.

கூடவே, பலரது கடின உழைப்பையும் சிரத்தையையும் உணர முடியும். அதனை உணர்ந்தபிறகு, இந்தப் படம் ஏன் ஓடாமல் போனது என்ற கேள்வி நிச்சயமாக எழும். அது மட்டுமே, காலம் கடந்தபிறகு ‘கிங்’ படத்துக்கு நாம் தரும் வெற்றி!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment