தமிழர் தலைவர் வ.உ.சி!

1872, செப்டம்பர்-5 :  வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்.

 

வாராது போல் வந்த
மாமணி! தமிழர்
தேடாமலேக் கிடைத்த
தேன் கனி! பெரும்
வரமாக நாம் பெற்ற பேறு!
தலைவர்
வ உ சி‌ க்கு எவரேதான் ஈடு?

சொல்லால் மக்களை
ஈர்த்தார், சுதந்திரத்
தாகத்தை நெஞ்சினில்
வார்த்தார்; செக்கில்
இட்டாலும் சுகமெனவே
ஏற்றார், சிறைப்
பட்டாலும் அந்நியரைப்
போற்றார்…

தமிழென்னும் அமுதம்
திரட்டி, அதைத்
தாய்ப்பாலாகத் தினம்
புகட்டித் திருக்
குறளுக்கு நல்உரை
தந்தார், தமிழர்
நீடு துயில் நீக்கவே
வந்தார்

அலை கடலில் கப்பலை
ஓட்டி,
ஆங்கிலேயருக்கு அச்சத்தை ஊட்டிப்,
புயல் போல வீசிய காற்று!
அவர்
புகழ்பாடி நாளுமே போற்று!

பாரதி ஆழ்ந்தெடுத்த முத்து
எங்கள்
“தென்னாட்டுத் திலகரெனும்” சொத்து.

காந்திக்கு இணையான தலைவன்! மனச்
சாந்திக்கு வழிசொன்ன
அறிஞன்…

சுதேசியமே அவரின்
வேதம்,
தேசச் சுதந்திரமே உயிர் நாதம், அவர்
உரைமணக்கும் சிவஞான
போதம், என்றும்
பேணார்தம் வாழ்வில்
சாதிபேதம்.

இளம் பூரணரை உயிர்ப்பித்துத் தந்தார்.
தொல்காப்பியத்திற்கு
உரைதனைக் கண்டார்.
“வலிமைக்கு மார்க்கம்” கொடுத்தார்
இவை அத்தனையும் தன்
வறுமையில் படைத்தார்.

“பெரியார்”க்கும் வாழ்வின்
வழி காட்டித்,
தேச அரசியலில் சேர
வலுவூட்டி,
“அரசியல் பெருஞ்சொல்லால்”
மக்கள் தமைக் கூட்டித்,
தனை எதிர்த்தோரைப் பதம் பார்த்த ஈட்டி.

வறியோர்க்கு இரங்கும்
ஈர நெஞ்சம், தொழில்
புரிவோர்க்குத் துணையாகி
விஞ்சும்,
வழக்கில் எதிர்ப்போர்க்குத் தோல்வியே மிஞ்சும்,தமிழ்
அமிழ்தாக அவர் உரையில்
கொஞ்சும்…

தமிழா! நீ என்றவரை
உணர்வாயோ? அந்த
தங்கத்தின் மதிப்பை நீ
அறிவாயோ? இன்னும்
நூற்றைம்பது ஆண்டு
கடந்த பின்பே, அந்த
வைரத்தின் சிறப்புணர்வாயோ?

பாரதியின் கனவை
பொய்ப் பிப்பாயோ?
“தமிழர் தலைவரென்ற”
சொல்லை மறப்பாயோ?
சாரதியாய் சுதேசியத்
தேர் ஓட்டித், தமிழகம்
விழிக்க வைத்த நம்
தலைவனைத் துறப்பாயோ?

கடலாண்ட பெருமையைச்
சொல்வோம்…
தன் உடல்நோகச்,
செக்கிழுத்ததைச் சொல்வோம்…
தமிழாண்ட நேர்த்தியைச்
சொல்வோம்…
“தமிழர் தலைவர்
வஉசி-யென”த்
தரணிக்குச் சொல்வோம்!

வா! உலகம் இதை
அறிய வைப்போம்.
“வ உ சி கடல்சார்
பல்கலைக் கழகம்”
அமைப்போம்.

காலம் கடக்கவில்லை
இன்னும்!
கடிந்து வா போவோம்
நாம் பெரும் பயணம்!
ஞாலம் அறியும்
வ உ சித் திறனை
அந்தநாள் வரை
அதனை ஓயாதுத் தொடர்வோம்…

ஒருநாள் உலகம்
விழிக்கும் – அவர்
உன்னதம் நெஞ்சில்
நிறைக்கும் – தமிழர்
தலைவர் அவர் தானென்று நினைக்கும்..
அதைக்கண்டு
எம் கண்கள் நீரால் பனிக்கும்.

– உஸ்மான் அலி

Comments (0)
Add Comment