அருமை நிழல்:
1940-ம் ஆண்டு பிறந்த சுகுமாரி, அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ‘ஓர் இரவு’ என்ற படத்தில், சிறுமியாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கினார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என அன்றைய தேதியில் எல்லாருடைய படங்களிலும் வலம் வந்தார். நல்ல அம்மாவாகவும் நடிப்பார். பணத்திமிர் கொண்ட மாமியாராகவும் நடித்தார்.
சுகுமாரி – பீம்சிங்கை மணந்தவர். தமிழில் பாசமலரில் அறிமுகமாகி பட்டிக்காடா பட்டணமா போன்ற முக்கியப்படங்களில் நடித்தவர். நடிகை பத்மினியின் உறவினர். பத்மஸ்ரீ விருத, தேசிய விருதுகளைப் பெற்றவர்.
நம் அத்தையைப் போல, சித்தியைப் போல், அம்மாவைப் போல, பாட்டியைப் போல் அப்படியொரு மனதுக்கு நெருக்கமானவராகப் பார்த்தார்கள் ரசிகர்கள்.
நடிகர்களின் குரலைப் போல் நடிகைகளின் குரல்களை நாம் பெரிதாக கவனிப்பதில்லை. கண்கள் மூடி சுகுமாரி நடிக்கும் காட்சியில், அவர் பேசுகிற வசனத்தைக் கேட்டால், அந்தக் குரல் ஆணவத்துக்கும் ஒத்துவரும். அன்பையும் உருக உருகச் சொல்லும். அப்படியொரு வசீகரக் குரல்… தனித்துவமான குரல்.
தமிழில் நடிக்கும் போது, இயக்குநர் ஏ.பீம்சிங்குடன் ஏற்பட்ட அன்பு பலப்பட்டது. ஏற்கெனவே பீம்சிங்கிற்குத் திருமணம் நடந்திருந்த நிலையில், சுகுமாரியை மணம் புரிந்துகொண்டார் பீம்சிங். அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த சுகுமாரியிடம் ‘உங்கிட்ட நல்ல திறமை இருக்கு. பிரமாதமான நடிகை நீ. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால நீ நடிக்காம இருக்கக்கூடாது. தாராளமா நீ நடிக்கலாம்’ என்றார் பீம்சிங். தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான ஆறு மொழிகளில் ரவுண்டு கட்டி வலம் வந்தார் சுகுமாரி.
இதில் மலையாளப் படவுலகில், எந்த இயக்குநர் படமெடுத்தாலும் எந்த நடிகர் நடித்தாலும் எந்தத் தயாரிப்பாளர் நடித்தாலும், முதலில் புக் செய்வது சுகுமாரியைத்தான். கதை பண்ணும்போதே, சுகுமாரிதான் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து, அவரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள்.
நம்மூரில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும் பன்முகங்களுடன் நடித்த மனோரமா, எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தியது போல், அங்கே சுகுமாரியைச் சொல்லுவார்கள். அதனால்தான், ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று கொண்டாடியது கேரளத் திரையுலகம்.
#சுகுமாரி #எம்ஜிஆர் #சிவாஜி #ஜெய்சங்கர் #அண்ணா #இயக்குநர்_ஏ_பீம்சிங் #மனோரமா #sugumari #mgr #sivaji #jaishankar #anna #director_bheemsingh #manorama