தொடரட்டும் ‘வெற்றி’ப் பயணம்!

வெற்றி மாறன். தமிழ் சினிமா வரலாற்றைத் தனியே எழுதினால், அதில் தவிர்க்கப்பட முடியாத ஒரு பெயர்.

வர்த்தக வெற்றிகளும், கலையம்சங்களும் நிறைந்த கதை சொல்லலைத் தனது பாணியாகக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். அப்படிப்பட்ட வெற்றிமாறன், இன்று தனது 49 வயதை நிறைவு செய்திருக்கிறார்.

ஒரு ஆளுமையாக..!

ஆங்கில இலக்கியம் படித்த ஒரு மாணவராக இருந்த வெற்றிமாறன், தொண்ணூறுகளின் இறுதியில் திரைத்துறை பக்கம் திரும்பினார்.

தொலைக்காட்சி மற்றும் திரைமொழி குறித்து அறிவதில் தொடங்கிய ஆர்வம், ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாகிறது என்பதை அறியத் தூண்டியது.

அப்படித்தான் கல்லூரியில் சிறப்பு ஆசிரியராகத் தான் சந்தித்த இயக்குனர் பாலு மகேந்திராவைத் திரை ஆசானாக ஏற்கச் செய்தது.

இடைப்பட்ட காலத்தில், இயக்குனர் கதிரின் ‘காதல் வைரஸ்’ படத்தில் பணியாற்றிய அனுபவமும் வெற்றிமாறனுக்கு உண்டு. அப்போது, அவருக்கு வாய்த்த நண்பர் தான் இயக்குனர் மிஷ்கின்.

பாலு மகேந்திராவின் இயக்கத்தில் ‘ஜுலி கணபதி’, ‘அது ஒரு கனாக்காலம்’ படங்களில் பணியாற்றினார் வெற்றிமாறன். அது மட்டுமல்லாமல் ‘கதை நேரம்’ தொடரில் பணியாற்றியதும் அவரது திரை வாழ்வில் முக்கியப் பங்கினை ஆற்றியது.

சுமார் 25 நிமிடங்களில் அல்லது இரண்டு எபிசோடுகளில் ஒரு சிறுகதையைக் காட்சியாக்கம் செய்வது எப்படி என்ற வித்தையை, அப்போது அவர் கற்றுக்கொண்டார். அந்த வகையில், ஒரு எழுத்தாளரின் சிறுகதையை, குறுநாவலைப் படமாக்கும் ஆர்வத்தை விதைக்க ‘கதை நேரம்’ காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

அது மட்டுமல்லாமல் தமிழ், ஆங்கில மொழிகளில் இலக்கிய நயமிக்க நூல்களை வாசிக்கச் செய்தது பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த அந்த ‘குருகுல காலம்’. அந்த அனுபவமே, அவரது திரை ஆளுமை எப்படிப்பட்டது என்பதைத் தீர்மானிப்பதாகவும் அமைந்தது.

‘பொல்லாதவன்’ பட வெளியீட்டுக்கு முன்னர், அதன் படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான காட்சிகளில் மிகச்சாதாரணமாகத் தெரிந்தார் வெற்றி மாறன்.

ஆனால், அவரது உதவியாளர்களின் வியப்பு அவர்களது கண்களில் தெரிந்தது.

அந்த படத்தை தியேட்டரில் பார்த்தபிறகு ரசிகர்களிடமும் அது பரவியது. அதுதான் வெற்றிமாறன். அதனால், தொண்ணூறுகளின் இறுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 2007 வரையிலான காலகட்டமே வெற்றிமாறனின் இன்றைய ஆளுமையை வடிவமைத்தது எனலாம்.

பொல்லாதவன் தந்த ஏற்றம்!

பொல்லாதவன் படத்திற்கு முன்னர் ‘உதயம் என்ஹெச்4’ கதையை இயக்குவதற்கான வாய்ப்புகள் வெற்றிமாறனுக்கு வந்தன. சில விளம்பரங்களும் கூட வெளியானது. தனுஷ் அதில் நாயகனாக நடிப்பதாக இருந்தார். என்ன காரணத்தாலோ, அது நிகழவில்லை. நல்லவேளையாக, அந்த இடத்தை ‘பொல்லாதவன்’ பிடித்துக்கொண்டது.

இரண்டு கதைகளுமே இளம் நாயகர்களுக்குப் பொருத்தமானவை என்றபோதும், ’பொல்லாதவன்’ படத்தின் கதையில் இருந்த ‘ஆக்‌ஷன் பில்டப்’ மிகச்சாதாரண மனிதனோடு பொருந்தி நிற்பது. அதற்கேற்ப, நாயகன் தனது தந்தையின் மளிகைக்கடையில் இருக்கும் தராசை எடுத்துச் சண்டையிடுவது போலக் காட்சிகளை அமைத்திருப்பார் வெற்றி மாறன்.

என்னதான் நாயகன் ‘அசகாய சூரன்’ என்றாலும், தந்தையிடம் அடி வாங்குவார். அவரது வார்த்தைகளால் அசிங்கப்பட்டு நிற்பார். தான் காதலிக்கும் பெண்ணைக் கவர, தரையில் உருண்டு புரளவும் தயாராக இருப்பார்.

அதேநேரத்தில், தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒரு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்காதவராகவும் விளங்குவார்.

இந்த கதாபாத்திர சித்தரிப்பு, ‘பொல்லாதவன்’ வெளியான காலகட்டத்தில் பெரும்பாலான கமர்ஷியல் படங்களில் இல்லாத ஒரு விஷயம்.

அப்படத்தில் வரும் கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் பாத்திரங்களும் கூட வழக்கத்திற்கு மாறானதாகவே இருந்தன. அதனாலேயே, அப்படம் பெரிய கவனிப்பைப் பெற்றது.

கூடவே, ‘பைக் மீதான ஒரு இளைஞனின் வேட்கை’ என்பது முக்கியமான பேசுபொருளாக அக்காலகட்டத்தில் இருந்தது. அதனால், யாரும் எதிர்பாராதவிதமாக அவ்வாண்டு வெளியான தீபாவளி படங்களில் ‘பொல்லாதவன்’ பெருங்கவனிப்பைப் பெற்றது.

அதன் வணிக வெற்றி, இயக்குனர் வெற்றி மாறனை எவரும் அண்டாத ஒரு பீடத்தில் ஏற்றி வைத்தது.

வித்தியாசமான ‘கமர்ஷியல்’ படங்கள்!

2011-ல் வெற்றி மாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ தேசிய அளவில் அவருக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துத் தந்தது. அதன் உள்ளடக்கம் பல திரைத்துறை ஜாம்பவான்களை வியக்க வைத்தது.

தொடர்ந்து விசாரணை, வடசென்னை, அசுரன் படங்களைத் தந்தார் வெற்றி மாறன். இப்போது ‘விடுதலை பாகம் 1’ஐ அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் தரவிருக்கிறார்.

ஆடுகளம், விசாரணை படங்கள் கமர்ஷியலான படமாகத் தெரியாவிட்டாலும் கூட, அவற்றின் உள்ளடக்கதில் அப்படிப்பட்ட அம்சங்கள் நிறைந்திருப்பதைக் காண முடியும்.

வெறுமனே பாடல்கள், சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சிகளில் நிறைந்திருக்கும் யதார்த்தம், நுணுக்கமான கதை சொல்லல் போன்றவை அதனை உணர வைத்தன.

யதார்த்தமும் சினிமாத்தனமும் சரியான கலவையில் அமைந்த அவரது காட்சியாக்கத்திறன், அதனைச் சாதித்தது. வடசென்னை, அசுரன் படங்களில் இந்த அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேலாகத் திரைத்துறையில் இயங்கினாலும், இதுவரை 6 திரைப்படங்களையே இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். அதுவே, ஒரு படத்திற்காக அவர் செலுத்தும் உழைப்பு எத்தகையது என்று சொல்லும்.

அந்த கடின உழைப்பு மட்டுமே, அவரது படைப்பைச் சீர்மையுடனும் செம்மையுடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. அதற்காக, அவர் எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்தை நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

திரைப்பட உருவாக்கம் தவிர்த்து, தான் சார்ந்த துறை வல்லுநர்கள், சக இயக்குனர்களுடன் உரையாடுவது, புதிய படைப்பாளிகளின் முயற்சிகளுக்கு வரவேற்பு தருவது,

சமகாலச் சமூகம் சார்ந்த கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவது, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது,

இலக்கிய அசைவுகள் குறித்து தெரிந்து கொள்வது என்று பல முகங்கள் காட்டி வருகிறார் வெற்றி மாறன்.

அவையனைத்தும் ஒன்றுசேரும்போது கிடைக்கும் பிம்பம், அவரது படங்களுடன் பொருந்திப் போவதுதான் ‘வெற்றி மாறன் யார்’ என்ற கேள்விக்கான பதிலாகவும் இருக்கிறது. நிச்சயம் அது சாதாரண விஷயமல்ல.

இயக்குனர் வெற்றி மாறன் அடுத்தடுத்த படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பார்வையாளர்களான நமக்குச் சுவாரஸ்யமான திரையனுபவங்கள் பலவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டும். அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்!

-மாபா

 

Comments (0)
Add Comment