தென்கொரியப் பாப் பாடகியான சுங் ஹாவுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. பாடுவதோடு, ரசிகர்களைக் கவரும் வகையில் ஆடவும் செய்ய வேண்டும் என்பது ஆல்பம் இசையை வெளியிடுபவர்கள் முன்னிருக்கும் சவால்.
அந்த வகையில், இவரது நடனமாடும் திறன் நம்மைச் சுண்டியிழுக்கக் கூடியது. இவர் ஒரு நடன வடிவமைப்பாளர் என்பது கூடுதல் தகவல்.
இப்படிப் பல திறமைகளைக் கொண்டிருப்பதால் சினிமா, சீரிஸ் வாய்ப்புகளும் இவரைத் துரத்துகின்றன.
சமீபத்தில் சுங் ஹாவின் பாட்டு, ஆட்டத்தில் ‘அல்காரிதம்’ என்ற டிஜிட்டல் சிங்கிள் வெளியானது. ஒரு வார காலத்தில் சுமார் 36 லட்சம் பேர் வரை அதனைப் பார்த்திருக்கின்றனர்.
இதனை நீங்கள் படிக்கும்போது, அந்த எண்ணிக்கையில் மேலும் சில லகரங்கள் எகிறியிருக்கலாம்.
ஆண்டுக் கணக்கில் அந்த இடைவெளி அதிகரிக்கும்போது, பல கோடிகளாக அது இருக்கும் என்பது ‘சுங் ஹா’வின் கந்தர்வக் குரலுக்குக் கிடைக்கிற வெற்றி.
வெளிநாடு வாழ் அனுபவம்!
இந்த உலகில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருந்து அல்லது நடுத்தரக் குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து அல்லது ஓரளவு வசதியான நிலையில் வாழ்ந்து கலையுலகில் கோலோச்சுபவது சிலரது வாழ்வனுபவம்.
ஒரு சிலர் நல்லதொரு பின்னணியில் இருந்து, வெகு எளிதாக அந்த புகழ் வெளிச்சத்தைத் தம் மீது பதித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒருவராகத்தான் தென்கொரிய இசைத்துறையில் புகுந்தார் சுங் ஹா.
இவரது இயற்பெயர் கிம் சான் – மி. இவரது பெற்றோர் அமெரிக்காவின் டெக்ஸாஸில் வசித்தனர். இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, மகளின் பாட்டு ஆர்வம் காரணமாக அவர்கள் தென்கொரியா திரும்பினர்.
அதனால், இயல்பாகவே ஆங்கிலம் மற்றும் கொரிய மொழியில் இவருக்குப் புலமை அதிகம். கூடவே நடனமும் கற்றுக்கொண்டார்.
பதின்ம வயதுகளில் இசை ஆல்பம் வெளியிட வேண்டுமென்ற கனவுடன் திரிந்தார். அதன் ஒரு பகுதியாக, ‘ப்ரொடியூஸ் 101’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதன் வழியே ஐ.ஓ.ஐ எனும் குழுவில் ஒருவராகும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. அப்போதும் குழுவில் ஒருவராக ‘கோரஸ்’ பாடி வந்தார்.
’வாட்டெ மென்’ எனும் சிங்கிள் படம்பிடிக்கப்பட்டபோது, இவரது நடன வடிவமைப்புத்திறன் அங்கிருந்தவர்களால் கவனிக்கப்பட்டது. அப்படித்தான் கிம் சான் – மி மெதுவாக ‘சுங் ஹா’ ஆனார்.
புகழ் ஏணியில் ஏறி..!
பாடகியாகவும் நடன வடிவமைப்பாளராகவும் நடிகையாகவும் பரிமளிக்கத் தொடங்கிய காலத்தில், எம்.என்.ஹெச் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு அவர் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். அதனால், தொடர்ந்து அதனோடு அவரது பயணம் அமைந்தது.
தென்கொரியாவின் புகழ்பெற்ற பாப் பாடகியான ஐயு எனப்படும் லீ ஜி – யுன்னை சுங் ஹாவுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
பாடகி, பாடலாசிரியர், நடனமாடுபவர், அதனை வடிவமைப்பவர் என்று வெவ்வேறுபட்ட திறமைகளுக்காக அவர் அடையாளம் காணப்பட்டதே அதற்குக் காரணம்.
அதேபோன்று தானும் அடையாளப்படுத்தப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பல திசைகளிலும் தனது காலடி பதிக்கத் தொடங்கினார் சுங் ஹா.
குரேன்ஷியா, பேர் அண்ட் ரேர் என்று இரண்டு ஸ்டூடியோ ஆல்பங்களை இவர் வெளியிட்டிருக்கிறார். இது போக சில சிங்கிள்கள், தொலைக்காட்சி சீரிஸ்கள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் என்று சுங் ஹாவின் படைப்புகள் தொடரந்து வெளியாகி வருகின்றன.
கடந்த ஆண்டு எம்.என்.ஹெச் நிறுவனத்தோடு இருந்த ஒப்பந்தம் காலாவதியாக, ’ஜெ பார்க்’ எனும் நிறுவனத்தோடு இணைந்தார் சுங் ஹா.
கடந்த மார்ச் மாதம் ’ஐ ஆம் ரெடி’ உட்பட ‘ஈனி மீனி’ எனும் சிங்கிள் ஆல்பம் வெளியிட்டவர் இப்போது, ‘அல்காரிதம்’மை ரிலீஸ் செய்திருக்கிறார்.
‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.
தன்னம்பிக்கை, கழிவிரக்கம், சோகம், வலி, வேதனை, மகிழ்ச்சி, தன்னிறைவு என்று ஒரு பெண்ணாகத் தான் உணர்ந்த, எதிர்கொள்கிற, கனவு காண்கிற விஷயங்களைப் பற்றிப் பாடல்கள் பேசுமாறு பார்த்துக் கொள்வார்.
இது போக கலர்ஃபுல் காட்சியாக்கம், கவர்ச்சிகரமான ஆடை வடிவமைப்பு, தொடர்ச்சியான விளம்பரங்கள் என்று பல அம்சங்கள் சுங் ஹாவை பிரபலப்படுத்தும் வகையில் அந்தந்த ஆல்பத்தோடு இணைந்திருக்கும்.
அந்த வரிசையில், தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாற்போலிருக்கிறது ‘அல்காரிதம்’. ‘வொய் திஸ் கொலவெறி’ டைப்பில் கொஞ்சம் கொரிய மொழி, கொஞ்சம் ஆங்கிலம் என்று கலந்து கட்டி இருப்பதால் சர்வதேசப் புகழைப் பெறும் வகையில் இருக்கிறது இவரது படைப்புகள்.
வாருங்கள், ‘அல்காரிதம்’ வழியே சுங் ஹாவின் படைப்புலகுக்குள் கொஞ்சம் உலா வருவோம்!
-மாபா