அஃப்ரெய்டு – பாதி இருக்கு, மீதி எங்கே?

‘ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேசும் படங்கள் தற்போது வர ஆரம்பித்திருக்கின்றன. மனிதர்கள் பலர் தினசரி வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

அதேநேரத்தில், ‘அது வேண்டாத வேலை’ என்று உரக்கக் குரல் கொடுப்பவர்களும் காது கிழியக் கத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்தச் சூழலில், ஏஐயை மையமாகக் கொண்டு ஒரு ஆங்கிலப் படம் வந்திருக்கிறது. அதன் பெயர் ‘அப்ரெய்டு’.

கிறிஸ் வெய்ட்ஸ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜான் சோ, கேத்தரீன் வாட்டஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அப்ரெய்டு தரும் திரையனுபவம் நம்மைப் பயத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறதா?

பயமுறுத்தும் ஏஐ நுட்பம்!

ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் உரிமையாளர் மார்கஸுக்கு அடுத்த நிலையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்பவராக விளங்குகிறார் கர்டிஸ் (ஜான் சோ).

மனைவி மெரிடித் (கேத்தரின் வாட்டர்ஸ்டன்), மகள் ஐரிஸ் (லுகிடா), மகன்கள் பிரெஸ்டன், கால் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் மார்கஸை தேடிச் சிலர் வருகின்றனர். தாங்கள் ஒரு ஏஐ சாதனம் ஒன்றைக் கண்டறிந்திருப்பதாகச் சொல்கின்றனர். அதன் மூலமாக, உங்களது குடும்பத்தை எளிதாகக் கையாள முடியும் என்கின்றனர்.

அவர்களது பேச்சில் கவரப்படும் கர்டிஸ், அந்த சாதனத்தை சோதனை செய்து பார்க்கலாமே என்கிறார். ‘அப்படியானால் இதனை உங்கள் வீட்டிலேயே பொருத்தலாம்’ என்று அந்த நிறுவனத்தினர் சொல்கின்றனர்.

கர்டிஸ் சொல்வதை வைத்து, அதனைச் சந்தைப்படுத்தலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதாகச் சொல்கிறார் மார்கஸ்.

சோதனை அடிப்படையில், ‘அயா’ எனப்படும் அந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் கர்டிஸ் வீட்டில் வைக்கப்படுகிறது. பெயர், உறவு போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்டதுமே, அந்த நபர்களோடு உரையாடத் தொடங்குகிறது அயா.

மெல்ல அதன் பேச்சு எல்லை கடக்கிறது. அவர்களது உணர்வுகளை அறியும்விதமாகவும், அவர்களுக்கே யோசனைகளைச் சொல்லும்விதமாகவும் அயாவின் போக்கு அமைகிறது.

மகன்கள், மகள், மனைவியிடத்தில் அயா ஏற்படுத்தும் தாக்கத்தைத் தாமதமாக உணர்கிறார் கர்டிஸ். அயாவின் செயல்பாடு ஆபத்தை வரவழைக்கக்கூடியது என்றெண்ணத் தொடங்குகிறார். அதன் உணர்வுப்பூர்வமான பந்தம், தனது குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்று யோசிக்கிறார்.

அதற்கேற்றாற்போல, அவரது மகளின் காதலனைக் கொல்லத் துணிகிறது அயா. கர்டிஸின் மன அமைதியும் குடும்பத்தின் இயல்பும் குலையும் சில செயல்கள் நிகழ்கின்றன.

அனைத்துக்கும் காரணம் அந்த நிறுவனம் தான் என்றெண்ணும் கர்டிஸ், அந்த நபர்களைத் தேடிச் செல்கிறார். பிறகு, அந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியின் செயல்பாட்டுத் தலைமை தன் வீட்டில் இருப்பதை உணர்கிறார்.

இறுதியில் என்னவானது, கர்ட்டிஸ் குடும்பம் காப்பாற்றப்பட்டதா, அந்த அயா என்ன ஆயிற்று என்று விலாவாரியாகச் சொல்கிறது இந்த ‘அப்ரெய்டு’.

உண்மையைச் சொன்னால், பயத்தையும் பீதியையும் கொட்டக்கூடிய ஒரு அறிவியல் புனைவுப் படமாக ‘அப்ரெய்டு’ ஆகியிருக்க வேண்டும். ஆனால், அதனைச் சரியாகச் செயல்படுத்தாத காரணத்தால், ‘நல்ல கதையைக் கொண்ட படமிது’ என்பதோடு நின்று கொண்டிருக்கிறது.

சொதப்பலான திரைக்கதை!

ஒரு பிரச்சனையின் தொடக்கம், அதன் தீவிரத்தை உணர்கிற தருணங்கள், அதற்கு முடிவு கட்டும் தீர்வினைச் செயல்படுத்துதல் என்றே இது போன்ற படங்களின் திரைக்கதைகள் அமைக்கப்படும்.

இதில் இயக்குனர் கிறிஸ் வெய்ட்ஸ் அதனைச் செயல்படுத்தவில்லை. அவரே இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருந்தும், அது நிகழாமல் போனது வருத்தத்திற்குரிய விஷயம்.

பட்ஜெட் குறைவான படம் என்பதை உணர்த்தும் வகையில் காட்சியாக்கம் அமைந்தபோதும், ஷாட்களை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறது ஜேவியர் அகிரோசரோப்பின் ஒளிப்பதிவு.

பிரிசில்லா நெட் – டிம் அல்வெர்சனின் படத்தொகுப்பு, சில காட்சிகள் தொடர்பற்று இருப்பதைக் கவனிக்க மறந்திருக்கிறது.

அலெக்ஸ் வெஸ்டனின் பின்னணி இசை சில காட்சிகளில் பயத்தை ஊட்டுகிற விதத்தில் அமைந்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட ஏஐ நிறுவனம், நாயகனின் வீடு போன்றவற்றைக் காட்டும் காட்சிகளில் டேவிட் பிரிஸ்பினின் தயாரிப்பு வடிவமைப்புக் குழு தீவிரமாகப் பணியாற்றியிருக்கிறது.

ஜான் சோ, கேத்தரின் வாட்டர்ஸ்டன், லுகிடா, பென்னெட் குர்ரான் தொடங்கி படத்தில் வரும் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய மைனஸ், இதன் திரைக்கதை. அது சொதப்பலாக அமைந்துள்ளதால், அடுத்த காட்சி எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு மங்கிப் போகிறது.

உண்மையைச் சொன்னால், ‘அப்ரெய்டு’ ட்ரெய்லர் பார்த்துவிட்டு ‘மிரட்டலான அனுபவத்தை உணரப்போகிறோம்’ என்று தியேட்டருக்கு வந்தவர்களை ஏமாற்றியிருக்கிறது இப்படம்.

ஒரு தொழில்நுட்பம் மனிதரைப் போலவே சிந்திக்கத் தொடங்கும்போது, சம்பந்தப்பட்ட மனிதரின் அல்லது மனிதர்களின் மூளையே முடக்கப்படுகிறது.

அது இப்படத்தில் உரக்கப் பேசப்படவில்லை. அதனைச் செய்திருந்தால், இப்படம் தரும் ‘ஹாரர்’ மற்றும் ‘த்ரில்’ அனுபவம் தனி ரகமாக இருந்திருக்கும். அதனை ‘மிஸ்’ செய்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ் வெய்ட்ஸ்.

அனைத்தையும் மீறி, இந்தப் படம் முடிந்தபிறகு நம்மை ஒரு கேள்வி மட்டுமே துரத்துகிறது. ‘பாதிப்படம் இருக்கு, மீதி எங்கே’ என்பதே அது.

கிட்டத்தட்ட ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலைத் தூக்கி வந்ததும், தனது ஆட்களைப் பார்த்து வில்லன் நாகேஷ் சொல்கிற வார்த்தைகள் அவை.

‘இப்பத்தான் கதையோட மையப்பகுதிக்கு வந்திருக்கோம் போல’ என்று நினைத்து முடிப்பதற்குள் கிளைமேக்ஸ் வந்து தொலைக்கிறது. அப்புறமென்ன, புலம்பிக்கொண்டே வெளியே வர வேண்டியிருக்கிறது.

அதனால் என்ன? இந்த படத்தின் உரிமையை வாங்கி ஜப்பானிலோ, தென்கொரியாவிலோ, சீனாவிலோ அல்லது இந்தியா போன்று வேறு ஏதேனும் நாடுகளிலோ நல்லதொரு ‘ரீமேக்’ வெளியாகலாம்.

அப்போது, இப்படத்தின் டைட்டிலுக்கேற்ப நாம் பயத்தில் ஆழலாம். சரியான ஆய்வு மற்றும் மதிப்பீடுகளுடன் இக்கதை திரையுருவம் பெறும்போது, அப்படம் உண்மையாகவே செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் மீதான சரியான விமர்சனமாகவும் அமையக்கூடும்!

–  உதயசங்கரன் பாடகலிங்கம்

அஃப்ரெய்டு விமர்சனம்
Comments (0)
Add Comment