’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்பது சிறுவயதில் படித்த சொலவடை. என்னதான் கல்வியிலும் செல்வத்திலும் உயர்ந்தாலும், சொந்தமாகத் தொழில் செய்வதென்பது இன்றும் பலருக்கு எட்டாக் கனவுதான்.
அதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனாலும், கிடைக்கும் லாபத்தைக் காட்டிலும் நட்டத்தைக் குறித்த பயமே பலரையும் பின்னோக்கி நகரச் செய்கிறது.
அதையும் மீறி, சொந்தக்காலில் நிற்கத் துடிக்கும் பலர் நம்மிடையே உள்ளனர். இன்றைய சூழலில் அப்படி எண்ணுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
சொந்தக்காலில் தான் நிற்பதைக் காட்டிலும், அதன் மூலமாகப் பலருக்கும் வேலைவாய்ப்பைத் தர வேண்டுமென்கிற எண்ணம் இன்று வேர் பிடித்திருக்கிறது. அவர்கள் போலாவது அப்புறமிருக்கட்டும்; அத்தொழில்களை ஊக்குவிக்க நாம் என்ன செய்திருக்கிறோம்?
தொழில்முனைவோர் எனும அந்தஸ்து!
காணி நிலம் என்றாலும் என்னுடையது என்றியங்கும் ஒரு விவசாயியைப் போலவே, சொந்தமாகத் தொழில் செய்வோருக்கு தம்முடையது பெரியது.
இந்த நம்பிக்கையே சமூகத்தில் அவர்களுக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது. வாழ்வில் எத்தனை மேடு பள்ளங்கள் வந்தாலும் நம்பிக்கையுடன் அடுத்த நாளுக்குத் தயாராகச் செய்கிறது.
அதனாலேயே, இன்று பலரும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தொழில் இருப்பதையும், பலருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் அதனை நிறுவனமாகக் கட்டியெழுப்புவதையும் பெரிதும் விரும்புகின்றனர்.
சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று நம் நினைவுக்கு எட்டும் பொருட்கள் தொடங்கி அலங்காரம், உணவு, தினசரி பயன்பாடு, மின்னணு சாதனங்கள், மோட்டார் சாதனங்கள், தூய்மைக்கான பொருட்கள் என்று பலவற்றைத் தயாரிப்பதற்கான தேவை இன்றும் இருக்கிறது.
பெரிய கார்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் கால் பதித்த பின்னும் கூட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான தேவை குறைந்துவிடவில்லை. அவை தயாரிக்கும் பொருட்களையும் மக்கள் புறக்கணிப்பதில்லை.
இதுவே, தொடர்ந்து சிறு அளவிலான வர்த்தகங்களை, தொழில்களை இன்றும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது.
அதனாலேயே, பெரும் முனைப்புடன் தமக்கான தொழிலைத் தேடுவோரின் எண்ணிக்கையும் நாளும் அதிகரிக்கிறது.
அகலக்கால் வைப்பதில்லை!
ஒரு வீடு கட்ட நூறு செங்கலை வாங்கும் அளவுக்குப் பணம் இருந்தாலும், முதலில் பத்து செங்கலை வாங்கிப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். இதையே நம் முன்னோர்கள் ‘எந்த காரியத்திலும் அகலக்கால் வைக்காதே’ என்றிருக்கின்றனர்.
சிறுதொழில் செய்வோர் பலரிடம் இக்குணத்தைப் பார்க்கலாம். முதலில் தம்மாலோ, தம்மைச் சார்ந்தவர்களாலோ ஒரு தொழிலில் இறங்க குறைந்தபட்ச முதலீட்டைத் திரட்ட முடியுமா என்று யோசிப்பார்கள்.
மெதுவாக அத்தொழில் வேகம் பிடித்து லாபம் வரத் தொடங்கியதும், அதனைக் கொண்டு அடுத்தடுத்த வளர்ச்சியைச் செயல்படுத்துவார்கள்.
ஒரு தொழில் முனைவோர் உருவானால், அவர் மூலமாக நிறைய பேர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
இது தவிர சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களோடு பணப் பரிவர்த்தனைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளும் பலரும் பலனடைவார்கள்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியுற்ற நகரங்களாக கருதப்படும் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்டவற்றில் இது போன்ற பல சிறு நிறுவனங்களைக் காண முடியும்.
அதிகபட்சம் 1 கோடி வரை முதலீடு செய்யப்படும் நிறுவனங்கள் இந்த வரையறையைப் பூர்த்தி செய்வதாக கருதப்படுகிறது. இன்று, சுமார் 50 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் கூட இதனுள்ளே அடங்குகின்றன.
மத்திய, மாநில அரசுகளும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
சிறுதொழில்களைக் கொண்டாடுவோம்!
இந்தியாவின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு கணிசமாக இருந்து வருகிறது.
பல ஆண்டுகளாகத் தொடரும் இவ்வழக்கம் கணினி யுகத்தில் மேலும் பெருகியிருக்கிறது.
தொண்ணூறுகளில் உலகமயமாக்கம் நோக்கி இந்தியா நகர்ந்தபோது, சிறுதொழில்கள் நசிந்துவிடும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இன்று கார்பரேட்மயமாக்கம் எங்கும் நிறைந்திருக்கும் சூழலில் கூட அது முழுமையாக நிகழவில்லை.
அது மட்டுமல்லாமல் சிறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டுமென்கிற எண்ணம் நுகர்வோர் மனதிலும் வேர் பிடித்திருக்கிறது.
எதுவானாலும் இறக்குமதியாகும் வரை காத்திருப்போம் என்கிற நிலையைத் தவிர்த்து, தொழில் மேம்பாட்டில் தற்சார்பை அடையும் நிலைமையை நோக்கி நகர்ந்து வருகிறோம் நாம்.
நாட்டின் தொழில் துறையைப் பொறுத்தவரை, சுமார் 40% பங்களிப்பை வழங்குகின்றன சிறு தொழில் நிறுவனங்கள்.
2000ஆவது ஆண்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உட்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் வகையில் ‘தேசிய சிறுதொழில் தினம்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2001 ஆகஸ்ட் 30 முதல் அது அணுசரிக்கப்படுகிறது.
சிறு தொழில்களின் உற்பத்தியைப் பெருக்கவும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் அதன் வழியே நாட்டில் வேலைவாய்ப்புகளைப் புதிதாக உருவாக்கமும் முயற்சிகளை மேற்கொள்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
இதன் மூலமாக, நமது சூழலமைப்பில் நல்ல பல மாற்றங்களை நிகழ்த்தலாம் என்ற நம்பிக்கையும் பரவலாகியிருக்கிறது.
இன்றைய சூழலில் கார்பரேட்மயமாக்கத்தை விரும்பாவிட்டாலும் கூட, அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே ஒவ்வொருவரும் இருக்கிறோம்.
ஆனாலும், எந்தெந்த இடங்களில் சிறு நிறுவனங்களை ஆதரிப்பது என்று முடிவு செய்யும் பொறுப்பு இன்னும் நம்மிடமே இருக்கிறது.
மக்களாகிய நாம் நினைத்தால், இப்போதிருப்பதைவிட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் பெருக்கலாம்; ஆர்வமிருந்தால், அதில் ஒரு அங்கமாகலாம்.
அதற்கான முனைப்பைக் காட்டுவதற்கான நாளாக இந்த ‘தேசிய சிறுதொழில் தினம்’ அமையட்டும்!
– உதய் பாடகலிங்கம்