பரிணாமம் பற்றிய அறிவியல் விளக்கங்கள் மேலோட்டமாகவேனும் பரவலாக அறியப்பட்டவை.
ஆனால் பாடப்புத்தகங்கள், அறிவியல் புனைவு சினிமாக்களில் சொல்லப்பட்டதின் வழியாக புரிந்து கொண்ட உயிரின் பரிணாமத் தொடர்ச்சி பற்றிய புரிதலில் பெரும் இடைவெளிகள் இருக்கின்றன.
பரிணாமம் எப்படி நிகழ்கிறது என்கிற சூட்சுமமான இடைவெளி தான் அது!
முதல் உயிர் தோன்றியது எப்படி? அதற்கான சாத்தியங்கள் பூமியிலேயே இருந்தனவா? புதைப்படிமங்களிலிருந்து அழிந்து போன உயிரினத்தின் வயதை எவ்வாறு ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்?.
மரபணுத் தொடர்ச்சி பரிணாம வளர்ச்சியில் எவ்வாறு பங்காற்றுகிறது? பரிணாமத் தொடர்ச்சியில் மனித இனத்தின் இடம் நிரந்தரமான ஒன்றா?
டி.என்.ஏ மரபணு கண்டறியப்பட்ட பிறகு உயிரியலில் அறிவியல் பரிசோதனைகள் நிகழ்த்திக் காட்டியுள்ள பாய்ச்சல் ஈட்டிய சாதனைகளும் அதன் அடுத்த கட்ட நகர்வும் என்னவாக இருக்கிறது? (Neuralink),
வலிமையானது பிழைக்கும் என்ற பரிணாமக் கோட்பாட்டை மறுக்கும் ‘மரபியல் வேறுபாடு’ கோட்பாடு தரும் பரிணாம விளக்கம் என்ன?
இன்னும் பல கேள்விகளும் பரிசோதனை விளக்கங்களும் சீரான வரிசையில் சொல்லப்பட்டிருக்கின்றன.
‘வேதியியலின் அதிசயம்’ என்ற அத்தியாயம் தொகுப்பில் இருக்கும் அனைத்து அத்தியாயங்களையும் இணைக்கும் ஒரு மையப்புள்ளி என்று சொல்லலாம்.
பரிணாமம் என்பது உயிர்களுக்குள் நடக்கக்கூடிய செயல்பாடு என்பது புறவயமாகத் தெரிவது. ஆனால் உயிர் செல்களை இயக்கும் சக்தி வேதியியல் வினைகளின் ஆற்றல் மூலமே பெறப்படுகிறது.
உயிரின பரிணாமத்தை முன்னகர்த்திச் செல்வதில் சூழலில் நிகழும் வேதியியல் பரிணாமம் முக்கிய காரணியாகத் திகழ்கிறது.
உயிரினத்தின் தன்மையைப் பொருத்தே பரிணாமத்தின் அடுத்த கட்ட நகர்வு சாத்தியமாகிறது என்பதற்கு முரணாக சூழலைப் பொறுத்தே உயிரினத்தின் பண்புகள் மரபணுவில் அடுத்தடுத்த தலைமுறைகளின் தொடர்ச்சி வழியாக எழுதப்படுகின்றன என்ற கருத்தை விளக்கும் பகுதி மிக முக்கியமாக அடிக்கோடிட்டுக் கொள்ளப்பட வேண்டியது.
டார்வினின் பரிணாமக் கோட்பாட்டோடு ஒத்துப் போகும் இந்தப் பகுதியில் உயிரினத்தின் பரிணாமமும் சூழலில் நிகழும் வேதியியல் வினையும் ஒன்றைச் சார்ந்து இன்னொன்று இணைந்து சிக்கலான ஒழுங்கமைப்பு கொண்ட மரபணுத் திரிபுக்கு எவ்வாறு காரணியாக அமைகின்றன என்று தெளிவுப்படுத்தப்படுகிறது.
மரபணுத் திரிபு பரிணாமத்தில் எவ்வளவு இன்றியமையாத செயல்பாடு என்பதற்கு மரபுரீதியான தொற்று முறிவு இப்படியான திரிபுகளிலேயே சாத்தியமாகிறது என்பது ஒரு உதாரணம்.
குறிப்பிட்ட மரபணு ஒப்புமையைக் கொண்ட உயிரினக் குடும்பத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று வேறொரு மரபணு குடும்பத்தில் அதன் வீரியத்தை இழக்கிறது. அதேசமயம் வைரஸ் தொற்றும் வேறொரு வடிவத்தில் பரிணாமம் அடைகிறது.
தொற்றுக்கான காரணத்தை அறியவோ மருந்தைக் கண்டுபிடிக்கவோ மரபணுத் திரிபுச் சங்கிலித் தொடர் கோர்ப்பின் அவசியம் என்ன என்பதற்கு HIV வைரஸ் தொற்றின் மூலத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.
தனிமங்கள், சேர்மங்கள், மூலக்கூறு, அணு, அணுக்கரு, நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான், ஐசோடோப்புகள் போன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட சொல் பதங்கள் இன்றி உள்வாங்கிக் கொள்ள இயலாத களத்தில் ஆர்வத்துடன் உள்நுழைய வைக்கிறது நன்மாறனின் சுவாரஸ்யமான எழுத்துநடை.
சுஜாதா அவர்களுக்கு இப்புத்தகத்தைப் படித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தால் நிச்சயமாக அவரின் பாராட்டை இந்நூல் பெற்றிருக்கும் என்பதே என் எண்ணம்.
நமக்கு அவ்வளவாகப் பரிட்சயமில்லாத விஷயங்கள் சார்ந்த அறிதலை நோக்கி ஈர்ப்பதில் இரண்டு முக்கிய காரணிகள் இருக்கின்றன.
ஒன்று, பொருட்படுத்தாமல் இருந்த சூழலை விந்தையான கண்ணோட்டத்தில் நம்மை அவதானிக்க வைக்கும் ஒரு சிறு பொறி அதுவாக நம் கவனத்தில் தட்டுப்படுவது.
இன்னொன்று, நம்பகமான மனிதர் மூலம் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்க நேரும் சந்தர்ப்பம் அமைவது.
அறிவியல் மீதான ஆர்வத்தை இத்தனை சுவாரஸ்யமாகத் தூண்ட முடியுமா என்று என்னை ஈர்த்த புத்தகம் இயற்பியலாளர்Feynman இன் ‘Surely you are joking, Mr.Feynman’.
இது முதலாவதைச் சேர்ந்தது. எலான் மஸ்க் பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் நன்மாறன் திருநாவுக்கரசு பற்றியும் எவ்வித அறிமுகமும் எனக்குக் கிடையாது.
எலான் மஸ்க் தொடரை வாசித்த பிறகு நன்மாறன் எழுத்தின் மீதும் எதிர்பார்ப்பும் மதிப்பும் வந்துவிட்டது.
அவர் எதைப்பற்றி எழுதினாலும் வாசக மனநிலையை ஈர்த்துக் கொள்ளும் தன்மை அவரது எழுத்தில் உண்டு என்ற நம்பிக்கை இரண்டாவது காரணிக்கு உதாரணம்.
புத்தகத்தில் இறுதியில் உதவிய நூல்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள Richard Dawkins எழுதிய Magic of Reality புத்தகத்தை வாங்கி தற்போது வாசித்து வருகிறேன்.
-டி.என்.ரஞ்சித் குமார்
****
நூல்: உயிர்!
ஆசிரியர்: நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்குப் பதிப்பகம்
விலை – ₹225/-