மலையாளத் திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்துச் சில ஆண்டுகளாகவே உரத்த குரலில் சிலர் பேசி வருகின்றனர்.
அங்கு அறிமுகமான நடிகைகளில் சிலர் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாமல் காணாமல் போனதற்கும், வேறு மொழிகளில் நடித்து சிலர் புகழ் ஈட்டியதற்கும் அதுவே பின்னணி என்றும் கருத்துகள் கூறப்பட்டு வந்தன.
நடிகை பாவனா மீதான பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்துவரும் நிலையில், அதையே காரணம் காட்டி பல பிரபலங்கள் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்தனர்.
இதோ, சில ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த ஹேமா கமிஷனின் அறிக்கை கேரள அரசால் தற்போது வெளியிடப்பட்டு, நாளும் ஒரு செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டதும் நாம் அறிந்ததே..!
இன்னும் இரண்டொரு மாதங்களில் தேர்தல் நடந்து, கலைக்கப்பட்ட சங்கத்தில் அங்கத்தவர்களோ அல்லது புதிதாகச் சிலரோ சங்கத்தை வழிநடத்தலாம்.
ஆனால், அப்போதும் இதுபோன்ற தவறுகள் தொடர்கதை ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மனித மன மாற்றங்களே ஆகப்பெரிய தேவை.
மலையாளத்தில் வளரும் நடிகையாக இருந்துவரும் சாந்தி பாலச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அதையே காட்டுகிறது.
யார் இவர்?
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த ‘தரங்கம்’ மலையாளப் படத்தில் அறிமுகமானவர் சாந்தி பாலச்சந்திரன். கொல்லத்தைச் சேர்ந்தவர்.
கொச்சியில் ஆங்கில நாடகமொன்றில் இவர் நடித்ததைப் பார்த்துவிட்டு, இயக்குனர் அருண் டொமினிக் அப்படத்தில் நடிக்க வைத்தார். பிறகு லிஜோ ஜோஸ் பெலிசேரியின் ‘ஜல்லிக்கட்டு’வில் நடித்தார் சாந்தி.
தொடர்ந்து ‘பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே’, ‘ரண்டுபேர்’, ‘ஆஹா’ ‘சதுரம்’, ‘ஜின்’ ஆகிய படங்களில் நடித்தார்.
இந்தியில் ‘குல்மொஹர்’ மூலம் அறிமுகமானார். தமிழில் ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் வெப்சீரிஸில் லட்சுமி, மதுபாலாவுடன் நடித்திருக்கிறார்.
வித்தியாசமான நடிகை எனும் வகையில் கவனிப்பைப் பெற்றாலும், கமர்ஷியல் மலையாளப் படங்களில் இவர் பெரிதாக நடித்ததில்லை. அதாவது, புதிய அலை திரைப்படங்களை எடுக்க முனைபவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் கவனம் காட்டியிருக்கிறார் சாந்தி.
அப்படியொருவர் புயலைக் கிளப்பும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.
என்ன சொல்லியிருக்கிறார்?
’சினிமாவில் மட்டுமே பெண்களுக்கு இப்படியொரு நிலை என்றில்லை; நமது சமூகமே ஆணாதிக்கம் நிறைந்ததாகத்தான் உள்ளது’ என்று தொடங்குகிறது இவரது குரல்.
’திரையுலகில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களைத் தடுக்கவோ, உரிய நிவாரணத்தை ஒழுங்கவோ ஒரு ஒழுங்கமைப்பு இல்லை.
அதிகக் கவர்ச்சி நிறைந்தது என்பதால், சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தும் உடனடியாகப் பரவலாகிறது’ என்று கடந்த சில நாட்களாகக் கேரள திரையுலகம் குறித்து வெளியாகும் செய்திகளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்திற்குக் காரணம் கூறுகிறார் சாந்தி பாலச்சந்திரன்.
இது எல்லாமே தினசரிகளை வாசிப்பவர்களுக்குச் சர்வசாதாரணமாகத் தெரிந்த உண்மைகள். சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அதிலிருப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றும், ஹேமா கமிஷன் அறிக்கையால் அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் சமூகத்தில் விவாதங்களை உருவாக்கி, பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடக் காரணமாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன்.
அது மட்டுமல்லாமல், அவர்களில் சிலரது கருத்துகள் பாலியல் அத்துமீறலை விடவும் மோசமானதாக உள்ளதாகச் சொல்கிறார்.
‘பாலியல் குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் முன்வைப்பவர்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
’அப்படி நடந்தால் அந்த வேலையை ஏன் செய்வானேன்’ என்று சிலர் சொல்கின்றனர். பணியிடத்தில் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் நிகழ்ந்தால், பெண்கள் தங்கள் லட்சியங்களைத் துறக்க வேண்டுமா?
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் என்பதையும் சிலர் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் அல்லது மிரட்டல் நிகழ்ந்த உடனேயே அதனைச் சொல்லாமல் போவது சரியாகுமா என்கின்றனர் சிலர். அவர்கள் அப்படிச் செய்யாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டாமா?
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களைக் கிண்டலடிக்கும் வகையில், ‘இதுக்கு ஒரு முடிவே இல்லையா’ என்று சிலர் கூறுகின்றனர்.
தேவையில்லாமல் இப்பெண்கள் கூக்குரலிடுவதாகக் கருதுகின்ற்னார். அவர்கள் சொல்வது போல ஒரு முடிவு நிச்சயமாக ஏற்படும்.
அதற்கு திரைத்துறை ஒழுங்கமைப்பு அற்ற துறையாக இருப்பது மாற்றியமைக்கப்பட்டு, சமத்துவம் நிறைந்த பணியிடமாக மாற்றப்பட வேண்டும்.
இப்போது தங்களது அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களால் அந்த மாற்றம் நிகழும்’ என்று தனது இன்ஸ்டாகிரம் பதிவில் சாந்தி பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் போன்று இன்னும் பலரும் இதே தொனியில் குரல் எழுப்பலாம். ஆனால், ’இவர்களும் காயம்பட்டவர்கள்தானா’ என்ற எண்ணத்தை எழுப்புவதாகவே அவை இருக்கும்.
மலையாளத் திரையுலகில் பற்றிய இப்பிரச்சனை, எப்போது வேண்டுமானாலும் வேறு திசைக்குப் பரவலாம். உண்மையைச் சொன்னால், இது சமூகத்தின் ஒரு அங்கமாக அல்லது கண்ணாடியாக விளங்கும் ஒரு துறை மீதான குற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பெண்களின் மீதான அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, திரைத்துறையை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதும் அரசின் கடமையாகும்.
அம்மாற்றத்தை நாடு முழுவதற்குமானதாக நிகழ்த்தும்போது, எதிர்காலத்தில் இப்படியான குற்றச்சாட்டுகள் எழாமல் போகும்..!
– மாபா