படமாகிறது ‘பாண்டியன் பரிசு’.
பாரதிதாசன் பிக்சர்சாரின் ‘பாண்டியன் பரிசு’
விரைவில் திரைவானைச் சித்தரிக்கும்.
இது 1960-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி அன்று வெளிவந்த ‘குயில்’ இதழில் பாரதிதாசன் வெளியிட்ட விளம்பரம்.
ஏற்கனவே மாடர்ன் தியேட்டர்ஸில் வெளிவந்த ‘வளையாபதி’ போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிற பாரதிதாசன், தான் எழுதிய ‘பாண்டியன் பரிசு’ காவியத்தைத் திரைப்படமாக்க நினைத்தார்.
இதற்காக துவக்கப்பட்டதுதான் ‘பாரதிதாசன் பிக்சர்ஸ்’ என்கின்ற படத் தயாரிப்பு நிறுவனம். இதற்காக புதுச்சேரியில் தான் வாழ்ந்த வீட்டையை ஈடாக வைத்து 18,000 ரூபாய் கடனாகப் பெற்றார்.
தானே படத் தயாரிப்பாளராகவும் மாறி விட்டார். படத்திற்கு ஒரு கதாநாயகன் வேண்டுமே!
அதற்காக காங்கிரஸ் தலைவரான காமராஜரைத் தொடர்பு கொண்டார் பாரதிதாசன்.
தான் தயாரிக்கும் படத்தில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்கப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படியே கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார் சிவாஜி கணேசன். அவருடன் சரோஜா தேவி, எம்.ஆர். ராதா போன்றவர்கள் நடிக்க, பீம்சிங் படத்தை இயக்கியவதாக முடிவானது.
1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி ‘பாண்டியன் பரிசு’ திரைப்படத்திற்கான தொடக்க விழா நடந்தது. அதில் தலைமையேற்று வாழ்த்தியவர் காமராஜர்.
ஆனால், பாரதிதாசன் எதிர்பார்த்தப்படி அந்தப் படத்தை அவரால் தொடர்ந்து தயாரிக்க முடியவில்லை. பலதரப்பட்ட இடையூறுகள், பொருளாதார சிரமங்கள்.
மிகவும் வருத்தத்துடன் தன்னுடைய அனுபவத்தை இப்படிப் பகிர்ந்திருந்தார் பாரதிதாசன்.
“இப்படம் எடுக்கும் முயற்சியில் பலவாறாகத் தொல்லைப்படுகிறேன். என் இயற்கைக் குணத்திற்கு மாறாக நடந்து கொள்கிறேன். இவையெல்லாம் நான் எதிர்பார்க்காத என் வாழ்க்கையில் நடக்கக் கூடாத நிகழ்ச்சிகள்” என்று பதிவிட்டுயிருக்கிறார்.
அவர் தயாரிக்க நினைத்த ‘பாண்டியன் பரிசு’ வெளிவரவே இல்லை.
-நன்றி: முனைவர் ச.சு. இளங்கோ தொகுத்து, பாரி நிலையம் வெளியிட்ட ‘பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்’ என்கின்ற தொகுப்பு நூல்.