பெண் விடுதலையைப் பேசும் நூல்!

நூல் அறிமுகம்: துப்பட்டா போடுங்க தோழி!

‘மாதவிடாய்’. ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார் கீதா இளங்கோவன். சிறந்த சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணியச் சிந்தனையாளர்.

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற தோழர் கீதா. சமூக வலைத்தளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

தொகுப்பு… கற்பு. பெண் உடலின் மீதான குற்ற உணர்ச்சி. குடும்பப் பெண். நகையலங்காரம். சுயபரிவு.

உடற்பயிற்சி, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், வாகனம் ஓட்டுதல் எனப் பல தலைப்புகளில் கேள்விகளை எழுப்புவதோடு, தீர்வின் திசையையும் விவாதிக்கிறது.

மொத்தத்தில் இந்தப் பதிவுகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்பவர்களுக்கான பதில்: பெண்களின் சமகால சிந்தனைப் போக்கை தெளிவாக காட்டும் கண்ணாடி: ஆணாதிக்கத்தை விட்டொழிக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கான கையேடு!

ஆயிரம் அடிகளை ஆண்களின் கன்னத்தில் அறைகிறது. பரவாயில்லை அதில் ஐநூறு அறைகளை பெண்களுக்கு நீங்கள் திருப்பித் தரலாம்.

நிறைய பெண்களும் கூட ஆணாதிக்கப் பொதுப் புத்தியோடுதான் இருக்கிறார்கள். அறைகளை அவர்களுக்கு மட்டும் திருப்பிக் கொடுங்கள் தவறில்லை.

நிறைய பெண்கள் இன்னும் தனக்காக வாழவே தொடங்கவில்லை என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

ஆடையில் தொடங்கி ஆசைகள் வரை மட்டுமல்ல அணிகலனிலிருந்து காதல் – கல்யாணம் – காமம் – கற்பு – தாய்மை என்று எல்லாவற்றிலும் ஒரு பெண்ணானவள் எப்படி நிறுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை அழகாகப் பேசியிருக்கிறது புத்தகம்.

ஆண்களை விட நிறைய மாறவேண்டும் பெண்கள். சில அடிமைத் தனங்களை நீங்களே விரும்பி ஏற்றுக்கொள்கிறீர்கள்.

அதிலிருந்து வெளியேறுவது உங்களுக்கே விருப்பமில்லாத ஒன்றாகிவிட்டது. இப்படியான பெண்கள் இருப்பதால் ஆண்களை எதிர்த்து சண்டையிடுவது எங்களுக்கு சிரமமாக இருக்கிறது.

மற்ற பெண்களெல்லாம் இப்பிடி இருக்க நீ மட்டும் தான் இப்படியெல்லாம் கேள்விகள் அடுக்குகிறாய் என்ற இலகுவாய் தங்கள் தவறுகளை நிராகரித்துவிட்டுப் போகிறார்கள். ஆண்கள் மாறாதிருப்பதற்கு பெருங்காரணமாக இருப்பதே பெண்கள் தான்.

‘துப்பட்டா போடுங்க தோழி’ ஒவ்வொரு பெண்ணையும் பட்டாம்பூச்சியாக்க முயற்சிக்கிறது. 

*****

புத்தகம் : துப்பட்டா போடுங்க தோழி
ஆசிரியர் : கீதா இளங்கோவன்
ஹெர் ஸ்டோரீஸ் பப்ளிகேஷன்

பக்கங்கள் : 127
விலை: ரூ.152/-

Comments (0)
Add Comment