தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!

கி.ரா சொல்கிறார்…

அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை.

சரி, கூப்பிடாதவர் கூப்பிட்டு விட்டார். போவம் என்று ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு அவசரமாகப் போய்ச் சேர்ந்தோம் சென்னை பிரசாத் ஸ்டுடியோவுக்கு.

முகமன் எல்லாம் முடித்து, “ஒரு படம் பாக்றீங்களா, மலையாளப் படம்?” என்று கேட்டார் இளையராஜா.

“சரி”

சொடக்குப் போடுகிற நேரத்தில் ஏற்பாடுகள் தயார். வேறோரிடத்தில் போட்டுக் காண்பிப்பதற்கென்றே ஒரு தியேட்டர். நானும் கணவதியும் தவிர ஒரு நாலைந்து பேர்தான் மொத்தம்.

விளக்குகள் அணைக்கப்பட்டன. இருட்டானதும், பேச்சு சத்தத்துடன் படம் தொடங்கியது. இந்தப் பேய்க் கூப்பாட்டுக்குப் பயந்தே படக் கொட்டகைகளுக்குப் போவதைத் தவிர்த்து வந்தேன். இப்போ தப்ப முடியாது. விரல் நுனிகளைக் காதினுள் திணித்து வைத்துக் கொண்டே படம் பார்த்தேன்.

பிறவிலேயே கண் தெரியாத ஒரு இளைஞனின் கதை. எழுத்தறிவு இல்லாதவன் என்றாலும் கவித்துவமான பாடல்களை இட்டுக்கட்டிப் பாட வல்லவன். கண்களை எடுத்துக் கொண்ட கடவுள் வளமான லய, இசை ஞானத்தை அள்ளி வழங்கியிருக்கிறான். அந்த மண்ணின் மக்கள் அவனுடைய இசையில் சொக்கி எப்படித் தம்மை மறந்து ஆடுகிறார்கள் என்பதை இயல்பாகக் காட்டுகிறது படம்.

அந்தத் தெருப்பாடகனுடைய சம்பாத்தியத்தில்தான் அவன் பிறந்த வீட்டில் அனைவருக்கும் சாப்பாடும் துணிமணியும் கிடைத்து வருகிறது.

அவனது வீட்டில் பக்கவாத நோயில் படுத்துவிட்ட சவடால்க்கார அப்பா, திடீரென்று தாக்கும் ஆஸ்துமாவில் மூச்சுமுட்டும் அம்மா, சண்டியர்த்தனமும் அடுத்தவர் உழைப்பை அபகரிக்கும் குரூர முகமும் கொண்ட அண்ணன், திருமண வயசில் நிற்கும் அழகிய ஒரு தங்கை (வசந்தி), தங்கைக்குப் பிரியமுள்ள, வாய் பேச முடியாத ஒரு ஊமைத்தோழி (லட்சுமி). இவளுக்கு அந்தப் பாடகன் மீது ஒரு ஈடுபாடு. அவனுக்கும் அப்படியே. அவனால் லட்சுமியைப் பார்க்கவும் குரலைக் கேட்கவும் முடியாத ஒரு சிக்கல்!

ஒரு டீ கடைக்காரருக்கு இவன் மீது மிகுந்த பிரியம். இவனுக்குப் பார்வைமட்டும் கிடைத்துவிட்டால் இவன் எங்கோ எப்படியோ இருக்க வேண்டியவன் என நினைப்பவர்.

ஒரு தினப் பத்திரிக்கையில் பிறவிக் குருடரும் பார்வை பெறமுடியும் என அறிந்து, இவனை ஒரு கண் நிபுணரிடம் அழைத்துக் கொண்டு போய் பரிசோதனை செய்ததில், பார்வை நிச்சயம் கிடைத்துவிடும் என அறிகிறார்.

அவனது வீட்டில் உள்ளோர் யாராவது ஒரு கண் தானம் செய்தால் பார்வை கொண்டுவந்துவிட முடியும் என்கிறார் கண் நிபுணர்.

இளைஞனுக்கு அளவுகடந்த சந்தோஷம். பிரியமுள்ள லட்சுமியைப் பார்க்க முடியுமே. வீட்டில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் ஒரு கண்ணை யார் தருவார்கள். அப்பா சும்மாதான்படுத்துக்கிடக்கிறார். ஒரு கண் போதுமே அவருக்கு.

அப்பா சொல்கிறார், “கண்பார்வை வந்ததும் இவனுக்கு கலெக்டர் வேலையா போட்டுத்தரப் போகிறார்கள். இவன் பாடித்தான் அப்பவும் பிச்சை வாங்கணும்.

இப்பவாவது, கண் தெரியாதவன்.. பாவம்னு காசு போடுகிறார்கள். கண்பார்வை வந்துவிட்டால் எவனும் கால்க்காசு போடமாட்டான். பிறகு குடும்பத்தோடு நாம எல்லாம் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்”

அப்பா சொன்ன கடைசி வாக்கியம் குடும்பத்தில் அனைவருக்கும் உண்மைதானே என்று பட்டுவிட்டது! அவர்களது ஆழ்ந்த மவுனம் அவனை ‘விழிப்பு’க் கொள்ளச் செய்கிறது. தான் ஒரு குருடனாக இருப்பதைத் தான் இவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்று கண்டு கொண்டான். அவனுக்கு நேர்ந்த துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பேசவோ பாடவோ வார்த்தைகள் அடைபட்டுப்போன அந்த நிலையில் தனிமையில் தன்னை கஞ்சிரா வாசிப்பில் வெளிப்படுத்துகிறான். பிறகு படத்தில் ஒரு திருப்பம் நிகழ்ந்து கதை முடிகிறது.

படத்தின் பெயர் “வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்”. படத்தின் இடைவேளையின் போது எனக்குப் பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த நடிகை சரிதாவிடம், “கண் தெரியாத ஒருத்தரை இப்படி நடிக்கச் செய்தது நல்லதாக போச்சி. பார்வை உள்ளவர்களால் இப்படித் தத்ரூபமாக நடிக்க முடியாது” என்றேன்.

“அய்யோ.. அவரு கண்பார்வை உள்ளவர்தான் சார், அப்படி.. நடிக்கிறார்” என்றார் சரிதா.

நம்பமுடியாமல் திணறினேன். நிஜமாகவா, நிஜமாகவா என்று மாறி மாறிக் கேட்டேன். நம்பமுடியாத அற்புதம்!

“யார் அந்த நடிகர்?” என்றேன்.

“கலாபவன் மணி” என்றார்.

கேரளாவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம், தேசிய விருது என பல விருதுகள் பெற்ற படம்.

இந்தப் படத்தைத் தமிழில் மறு ஆக்கம் செய்ய இருப்பதாகவும். அதற்கு நான் வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இளையராஜா கேட்டுக் கொண்டார். நானும் சம்மதம் தெரிவித்தேன்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment