இயக்குநர் சிகரம் பாலசந்தரைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. அப்போது அவர் ‘பொய்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். நான் அவர் பற்றிய தகவல்களை ஏராளமாய்த் திரட்டி விட்டேன். ஆனால், அவையெல்லாம் சரிதானா என்று அவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
புகைப்படக் கலைஞர் சித்ராமணி மூலம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு அவரைச் சந்தித்தேன்.
நான் பேட்டி எடுக்கப் போகிறேன் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க… நானோ அவரைப் பற்றிய பல ஃபிளாஷ்பேக் விஷயங்களைக் கூறி, சரிதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதில் கருத்தாய் இருந்தேன்.
அவருக்குச் சிறிய ஏமாற்றம் இருந்தாலும் அவரைப் பற்றிய பல அபாரமான தகவல்களை நான் கூறியதைக் கேட்டு அவர் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.
அவரிடம் நான் கேட்ட ஒரே ஒரு கேள்வி, ‘வாழ்க்கை குறித்த உங்கள் அணுகுமுறை என்ன?’ என்பதே. அதற்கு அவர் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார், ‘அச்சமில்லை…’
பொய் படத்துக்காக வடிவமைத்திருந்த ஒரு அப்ஸ்ட்ராக்ட் பெண் சிலை ஒன்றைக் காட்டி இந்தச் சிலையின் கான்ஸ்செப்ட் மக்களுக்குப் புரியுமா?’ என்று அபிப்பிராயம் கேட்டார்.
நான் உடனே, “இந்தச் சமூகத்தின் அணுகுமுறைகளால் பெண் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டிக்க முடியாமல் முகமூடி அணிந்துதான் வாழ வேண்டியிருக்கு… வானமே எல்லைன்னு படம் எடுத்தவர் நீங்க… உங்க கற்பனைக்கு எல்லையே இல்லை சார்… உங்கள் கற்பனைச் சிறகுகளுக்கு அபார வலிமை… ” என்றேன்.
‘அதுதான் எனக்கும் பயமா இருக்கு. சிறகுக்கு வலிமை இருக்குன்னு அதை முழு வீச்சில் பயன்படுத்த முடியறதில்லை.
ஒரு பருந்து தன் சிறகுகளுக்கு வலிமை இருக்குன்னு ரொம்ப உயரத்தில் பறந்துடறதில்லை. அதன் தீனி தன் பார்வையில் படுகிற அளவைத் தாண்டி அதன் சிறகை அது பயன்படுத்துவதில்லை.
நானும் முழு வேகத்தில் சிறகடித்தால் மக்களை விட்டு வெகுதொலைவு விலகிச் செல்லும் நிலைதான் வரும். எல்லாத்துக்கும் ஒரு எல்லை வேணும் இல்லையா?’ என்று கூறிச் சிறுகுழந்தையைப் போல் சிரித்தார்.
– பெ.கருணாகரன்