கடலோடிகளின் வழிகாட்டிகளாக இருந்த காகங்கள்!

‘பண்டைய காலத்தில் தமிழக மாலுமிகள் கடற்பயணத்தின்போது கரை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள்‘ – இப்படி ஒரு பதிவை அண்மையில் இரண்டு முகநூல் பதிவுகளில் பார்த்தேன்.

‘பழங்காலத் தமிழ் மாலுமிகள், இதற்காகவே மரங்கலங்களில் காகங்களை வளர்த்தார்கள். திசையைக் கண்டறிய காகங்களைப் பறக்க விட்டார்கள்’ என்று அந்தப் பதிவுகளில் தகவல்கள் காணப்பட்டன.

பைபிளில் வரும் நோவா, பெருவெள்ளம் வடிந்து, நிலம் தெரிகிறதா என்பதைக் கண்டறிய தன் பேழையில் இருந்து ஒரு காகத்தை (பிறகு புறாவை) பறக்க விட்டது, சங்ககால பெண்பால் புலவரான காக்கைப்பாடினியார் (குறுந்தொகை 210ஆவது பாடலில்),

‘காகம் பறந்து வருவதைப் பார்த்த பெண் ஒருத்தி, மரக்கலத்தில் வணிகத்துக்காகச் சென்ற கணவன் திரும்பி வருகிறான் என்று அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து கடற்கரையில் காத்திருந்தது போன்றவை அந்த முகநூல் பதிவுகளில் சுட்டப்பட்டிருந்தன.

‘காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்’ என்ற தமிழர்களின் நம்பிக்கை கூட, கரை திரும்பும் கப்பலில் இருந்து முன்னோட்டமாக பறந்து வரும் காகங்களால் வந்த பழமொழிதான் என்றும் அந்தப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

தமிழரின் பண்டைய தெய்வமான தவ்வையின் கொடியில் காகம் இருந்ததும் கூட இதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டிருந்தது.

சிந்து சமவெளியில் கிடைத்த 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு முத்திரையில் படகில் இரு காகங்கள் காணப்படும் படம் இருந்தது, பாய்மரக் கப்பலின் உச்சி காக்கைக்கூடு (Crow nest) என்று அழைக்கப்பட்டது, திசகாகா என்ற சொல் திசைக்காக்கை என்ற சொல்லில் இருந்து வந்த திரிபு… இப்படி பலவிதமான தகவல்கள் அந்த முகநூல் பதிவுகளில் பந்தி வைத்திருந்தன.

சரி. அந்த முகநூல் பதிவுகள் இருக்கட்டும். இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிறீர்களா?

இதோ சொல்லி விடுகிறேன்.

உலக வரலாற்றில் வைக்கிங் (Viking) என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

டென்மார்க், நார்வே, ஸ்வீடன் போன்ற ஸ்காண்டிநேவியப் பகுதிகளில் வாழ்ந்த கடல் மக்கள் இவர்கள். கி.பி.800 முதல் 1100 வரை, 300 ஆண்டுகாலம் பெருங்கடல்களை ஆட்டிப் படைத்த சிறந்த கடலோடிகள், இந்த வைக்கிங்கள்.

ஐரோப்பா கண்டத்தில் அந்த காலத்தில் வைக்கிங் கடலோடிகளின் பாய்மரக் கப்பல்கள் புகாத கடல்களோ, ஆறுகளோ கிடையாது.

ரஷியாவில் குடியிருப்புகளை அமைத்து முதன்முறையாக ரஷியாவுக்கு ஒரு மன்னரை தந்தவர்கள் வைக்கிங் கடலோடிகள்தான்.

ஐஸ்லாந்து, கிரீன்லாந்து பகுதிகளைக் கண்டுபிடித்து, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே புதிய உலகமான அமெரிக்காவில் கால் பதித்தவர்கள் கூட இதே வைக்கிங் கடலோடிகள்தான். அமெரிக்காவுக்கு அந்நாளில் அவர்கள் வைத்திருந்த பெயர் வின்லாண்ட்.

இந்த வைக்கிங் கடலோடிகள்கூட, காகத்தைப் பயன்படுத்தியே கடலில் திசை கண்டு பிடித்ததாக வரலாறு கூறுகிறது.

கரை இருக்கும் திசை நோக்கி வைக்கிங் கடலோடிகள் பழகிய காகத்தைப் பறக்க விடுவார்கள். காகம் கரை இருக்கும் திசை நோக்கி வேகமாகப் பறந்து, கரையைத் தொட்டதும் திரும்பி கப்பலை நோக்கிப் பறந்து வந்து விடும்.

காகம் புறப்பட்டது முதல் திரும்பியது வரையிலான நேரத்தை வைத்து கரை இருக்கும் தொலைவையும், கரை இருக்கும் திசையையும் வைக்கிங் கடலோடிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வைக்கிங் கடலோடிகள் பயன்படுத்திய காகம் நம்மூர் அண்டங்காகமோ, மணியங் காகமோ அல்ல. அவர்கள் ஊரில் உள்ள ரேவன் என்ற காகம்.

வைக்கிங்குகளின் கொடி, சின்னங்களில் கூட காகத்தின் உருவம் இடம்பெற்றிருக்கிறது.

ஆக, இந்த வைக்கிங்குகள் ஒருவேளை ஆதிகுடிகளான பழந்தமிழர்களிடம் இருந்து தோன்றியவர்களோ என்ற ஐயப்பாடு இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

‘சனி நீராடு’ என்று நம் தமிழில் ஓர் ஆன்றோர் வாக்கு இருக்கிறது அல்லவா? அதுபோல சனிக்கிழமைகளில் வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள் வைக்கிங் கடலோடிகள். சனிக்கிழமை என்பது அவர்களுக்குக் குளியல் நாள்!

(சனி நீராடு என்பதற்கு ஓடும் புதிய நீரில் குளிப்பது, அதிகாலையில் குளிப்பது என விதவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன.

அந்த பொருள்பட பார்த்தாலும் சனி நீராடு என்பது வைக்கிங் கடலோடிகளுக்குப் பொருந்தக்கூடியதே!)

பழங்காலத்தில் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ஓர் இனக்குழுவின் தலைவரான கோன்-டிகி என்பவர் நார்வே நாட்டைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு.

உலகக் கடல்களில் பால்சா மரக்கட்டைகள், பாப்பிரஸ் புல், நாணல் படகுகளில் கடற்பயணங்கள் செய்த நார்வே நாட்டைச் சேர்ந்த தோர் ஹெயர்தால் என்பவர்கூட இந்த கோன்-டிகியை தன்குலத்தின் முன்னோடியாகக் கருதினார்.

(இது தொடர்பாக நான் ஏற்கெனவே எழுதிய ஒரு பதிவு முகநூலில் இருக்கிறது. இணைப்பு முதல் பின்னூட்டத்தில்)

ஆனால், காக்கையை திசைகாட்டி கருவியாகப் பயன்படுத்தியது மட்டுமல்ல, தென்னமெரிக்காவின் பழங்கால நாகரீங்கள் தமிழர் நாகரீகம் என்ற நிலையில் நார்வே நாட்டினர் அதற்கு உரிமைகோருவது, வைக்கிங் கடலோடிகள், பழங்கால தமிழர்களின் வழிவந்தவர்கள் என்ற நமது நம்பிக்கையை இன்னும் வலுவாக்குகிறது.
 
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு 

Comments (0)
Add Comment