தமிழ்ச் சமூக அசைவியக்கத்தின் சாட்சி!

நூல் அறிமுகம்: ஈத்து

தனது கவிதைத் தொகுப்புகளால் கவனம் ஈர்த்த முத்துராசா குமாரின் சமீபத்திய எழுத்து ‘ஈத்து’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாய் வெளியாகியிருக்கின்றது.

மாறிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தின் சாட்சியமாய் இருக்கின்றன கதைகள்.  90-களுக்கு பிந்தியத் தமிழ்ச்சமூகம் நிலவுடமைச் சமூக உறவுகளிலிருந்தும், அதை கட்டிக்காத்த சமூக, பண்பாட்டு நிறுவனங்களிலிருந்தும் பாரிய மாற்றத்தை சந்தித்திருக்கின்றது.

இம்மாற்றத்தை புறவயமாகவும், தன்னளவிலும் உணரும் ஒரு தன்னிலையாக ஈத்து தொகுப்பில் வரும் கதைகளின் கதைச் சொல்லி இருக்கிறார்.

பழங்குடிகள், தோற்பாவை கலைஞர்கள், வயல் எலிகளை வேட்டையாட இடுக்கித் தயாரிப்பவர், முது கிழவிகள், புலம் பெயர் வாதைக்கு ஆளானவர்கள், ஊரை விட்டு வெளியேறவே முடியாதவர்கள் எனப் பலத்தரப்பட்ட கதை மாந்தர்கள் உள்ள போதும், அவர்களை புறவயமாக பார்த்து அவர்கள் வாழ்வின் மாற்றங்களை கதையாகச் சொல்லும் கதைச் சொல்லியின் குரலே அதிகம் தென்படுகின்றது.

நிலம், அது சார்ந்தப் பண்பாட்டு நடவடிக்கைகள் என நிலக்கிழமைச் சமூக அமைப்பின் உறவுகளுக்குள் பல்வேறு அடுக்குகளில் இருப்பவர்கள் விளிம்பு நிலையிலிருந்து அழிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதன், ஒரு பொருளில் புதிய சமூக நிலைமை ஒன்றிற்கு மாறிக் கொண்டிருப்பதன் அடையாளங்களாக கதை மாந்தர்கள் உள்ளனர்.
எந்த ஒரு சமூகமும் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கான கருத்துருவ அமைப்பொன்றின் வலிமையினால்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. கருத்துருவ அமைப்புகள் அருவமான மனச்சித்திரங்கள் அல்ல, சமூக பண்பாட்டு நிறுவனங்கள், சடங்குகள், கலைச் செயல்பாடுகள் போன்ற பொருளாயத நிலைமைகளினால்தான் அவை பாதுகாக்கப்படுகின்றன.
மதுரை வட்டாரத்தை சுற்றி பின்னப்பட்டுள்ளக் கதைகள், இவ்வட்டாரத்தின்  நிலக்கிழமைச் சமூக இருப்பு தகர்வுக்குள்ளாகிக் கொண்டிருப்பதனை படம் பிடித்துக் காட்டுகின்றன.
’பொம்மை’ என்கிற சிறுகதையில் பொம்மைகளின் மட்கும் ’காலத்தை’ ‘சிமெண்ட்’ தரை நீட்டித்து விடுகின்றது. திருவிழாவின் தேவைமுடிந்து மண் தரையில் குவிக்கப்படும் பொம்மைகள் கரையும் வேகம் இப்போது குறைந்து பொம்மைகள் மலைப் போல குவிந்து விட்டதாக கதை நகர்கிறது.
கதையின் இன்னொரு முனையில் கண்மாய்களின் மண் முன்போல பொம்மைகள் செய்வதற்கு ஏற்றதாய் இல்லை, என பொம்மைச் செய்யும் தம்பதிகள் விசனப் பட்டுக் கொள்கிறார்கள்.
‘சிமெண்ட்’  எனும் காரணி இங்கு ஏற்படுத்தும் விளைவு ஆழமானது. அதுதான் புதிய இயல்பு பழையன குறித்த ஏக்கம் அதனைக் கட்டுபடுத்திவிட முடியாது. இதுதான் புதிய எதார்த்தம். மாறிக் கொண்டிருக்கும் அந்த எதார்த்தத்தின் கதைகள்தான் ‘ஈத்து’.
இம்மாறுதல்கள் ‘ஈத்து’ கதைகளின் கவித்துவ மொழியமைப்பினால் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
பொம்மைக் கதையில் ”வண்ணப் பொம்மைகளுக்கு நடுவில் இருவரும்  ‘தோல் பொம்மைகளாக’ அசைந்திருப்பார்கள்.” என கூறிச் சொல்கிறார் கதைச் சொல்லி. பொம்மைகளுக்கு நடுவே இரண்டு உயிருள்ள அசைந்தாடுகிற தோல் பொம்மைகளாக மனிதர்கள் மாற்றப்படுகின்றனர்.
இன்னொரு புறத்தில் உயிரற்ற குழந்தைப் பொம்மைகள் ‘ஒவ்வொரு பிஞ்சாகத் தூக்கி’ கொஞ்சப் படுவதன் மூலம் மனிதப் பண்பை பெறுகின்றன. மனித உயிர்கள் பொம்மைகள் ஆவதும், பொம்மைகள் மனித உயிரைப் பெறுவதுமான உருவக கட்டமைப்பு சாரத்தில் கவித்துவ கட்டமைப்பாகும்.

 

சமூகம் மாறிக் கொண்டிருப்பதை, பழையது அழிந்துக் கொண்டிருப்பதை ‘ஈத்து’ கதைகளில் தொழிற்படும் உருவக முரண்நிலை பதிலீடு செய்ய முயல்கிறது.

இதனை metaphorical fallacy என்பார் மார்க்ஸிய அறிஞர் இஸ்துவான் மெஸ்ஜாரோஸ், உருவக வழு என்பது இதற்கு பெயர். எதார்த்ததைப் பதிலீடு செய்ய முயலும் உருவகம் தன்னளவில் சார்பு நிலையிலான உண்மையாக மட்டுமே இருக்க முடியும் அதன் வாக்கிய கட்டமைப்புக்கு அப்பால் அதற்கு எத்தகைய உண்மைத் தன்மையும் இல்லை.

‘ஈத்து’ கதைகள் மாறிக் கொண்டிருக்கும் சமூக எதார்த்தம் ஒன்றை அடையாளப்படுத்தும் அதே வேளையில் கதைகளினுள் தொழிற்படும் கவித்துவம் அதற்கு முரணான மெய்மைகளைக் கட்டமைக்க முயல்கின்றது.
ஒரு வகையில் உரைநடைவடிவிலான கதை எனும் நவீன செயல்பாடொன்றில் போராடிக் கொண்டிருக்கும் தமிழின் மரபான கவிதைத் தலையீடு இது.
முத்துராசா குமாரின் ‘ஈத்து’ சிறுகதைத் தொகுப்பு, தமிழ் கவிதையிலிருந்து கதைக்கு மாற்றமடையும் ஒரு நவீன நிகழ்வுப் போக்கு.

 

நூல்: ஈத்து
ஆசிரியர்: முத்துராசா குமார்
சால்ட்- தன்னறம் வெளியீடு
பக்கங்கள்: 122
விலை: ரூ.
152/-

Comments (0)
Add Comment