நூல் அறிமுகம்: விசிறி வீடு
கவிராயர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொகுப்பாக இந்தக் கதைகளை வாசிக்கும் போது, நேற்று எழுதியவை போல் புதுக்கருக்குடன் இருக்கின்றன என்று தஞ்சாவூர்க் கவிராயரின் சிறுகதைகள் பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் இலக்கிய ஆர்வலர் அக்களூர் ரவி. அந்த சுவையான நூல் விமர்சனப் பதிவைப் பார்க்கலாம்.
சிறுகதைக்கு ஓர் இலக்கணம் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களின், மக்கள் வாசித்துக் கொண்டாடிய கதைகளையும், அந்த இலக்கணத் தராசில் நிறுத்தி ’எடை குறைந்தது’ என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.
பலர், அப்படி இல்லை; வாழ்வின் நாம் எதிர் கொள்ளும் ஒரு நிகழ்வை, பார்ப்பதை சுவையுடன், நல்ல தொடக்கத்துடன், அழகான முடிவுடன் சொல்வது மட்டுமே சிறுகதை என்கிறார்கள்.
விசிறி வீடு தொகுப்பிலிருக்கும் கதைகள் மேற்கூறிய வகைமையில் அடங்குபவை என்று சொல்வேன். எளிமை மிளிறும் கதைகள். எளிமையாக எழுதுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளை – சிறு வயது முதல் முதிர்ந்த குடும்பத்தலைவனாக வளர்ந்தது வரையிலும் அவரைப் பாதித்த சம்பவங்களை, சந்தித்த மனிதர்களை, மகிழ்வித்தவற்றை, ரசித்தவற்றை, வருத்திய துயரங்களை, தானும் அத்தகைய ஒன்றைத் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம் என்று வாசிப்பவர் எண்ணுமளவு அழகாக, தெளிவாக, சிக்கலற்ற படைப்புகளாகத் தந்திருக்கிறார்.
பெரும்பாலும் இந்தக் கதைகள் பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டவையாக இருக்கின்றன. விசிறி வீட்டில் வரும் பெண்கள், அம்மா, மனைப்பாம்பு பாட்டி, அசீனா அக்கா, மனோகரி, வங்கி மேலாளர் பேருந்தின் சக பயணி, முத்தம்மா, சந்திரா. அந்தக் கதைகளை இரண்டாவது முறை வாசிக்கையில் காரணத்தை ஓரளவு நாம் உணர முடியும்.
பிரியங்கொட்டும் அப்பாவையும் அன்பைப் பிழிந்து தரும் அம்மாவையும் அழகாகக் காட்சிப்படுத்துகிறார் கவிராயர்.
வாழ்க்கையில் மனிதர்களை இணைப்பதும் பிரிப்பதும் ஒரு புள்ளி. ஒரு நுட்பமான உணர்வு. இழையோடும் புரிதல். ஒரே மாதிரியான பாதிப்புகளும் இழப்புகளும்.
கோபாலியென்ற பெயரில் இவர் எழுதியிருக்கும் கவிதைகளை நான் படித்ததில்லை. என்றாலும், கதைகளில் கவிராயர் நுட்பமான உணர்வுகளை மிக எளிதாக வெளிப்படுத்தி, நமக்குள் கடத்துவதும், கதைக்குள் நம்மை இழுத்து உட்கார வைப்பதும் நல்ல கவிதையாகவே ரசிக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக இரண்டு கதைகளைப் பார்க்கலாம். மழை பெய்யும் நேரத்தில் பேருந்துப் பயணத்தில், சக பயணியுடன் உருவாகும் நட்பு; அந்தப் பயணி இறங்கும்போது மனம் ஓர் இழப்பை உணர்வது.
மற்றொன்று, வங்கிக்கு வெளியில் மழைக்கு ஒதுங்கி நிற்கும் போது, அவரைக் கூப்பிட்டுக் காபி அளித்து அக்காவும் அவரும் கொண்டிருந்த அன்புறவை வெளிப்படுத்தி, அக்கா அவரை மணக்காத சூழலால் உணரும் இழப்பை வெளிப்படுத்தும் தங்கையின் பிரியமான சொற்கள்.
ஒரு படைப்பு நம்மை, நம் உணர்வைப் பரவசமடையச் செய்து மேம்படுத்துகிறதா? போதும், அதுவே சிறந்த எழுத்து. மானுட மேன்மைதானே எழுத்து?
இந்த எளிமையான கதைகள் என்னுள் பெரும் அசைவுகளை உண்டாக்கின. பெரும்பாலோருக்கும் அப்படித்தான் இருக்கக்கூடும்.
அதிகம் நகரமயமாகாத ஊர்களில் அக்காக்களுக்கு, பிரியமான தம்பி ஒருவன் இருப்பான். உடன் பிறந்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, அதுபோல், ஒரு பையனுக்குப் பிரியமான அக்காவும் இருப்பாள்.
சந்தோஷமான தருணத்திலோ அல்லது துக்கத்தை எதிர்கொள்ளும்போதோ அந்தத் தம்பியை இறுக்கி அணைத்துக் கொள்வது, வெளியில் சொல்ல முடியாத உணர்வை வெளிப்படுத்திக் கொள்வதுதான். இந்தக் கதைகளில் அதைப் போன்ற நுட்பமான உணர்வு கடத்தல்களைப் பார்க்கமுடிகிறது.
சாமிநாதன் கதை, எனக்கு ஜானகிராமனின் கதையொன்றை நினைவுக்குக் கொண்டு வருவதைக் கவிராயரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அனைத்திற்கும் மேலாக, மனிதன் அவனுக்குள் பொதிந்து கிடக்கும் மனித உணர்வால் இயக்கப்படுபவன்தானே?
’தம்பி’ சாமிநாதனை ஆற்றங்கரையிலிருந்து தோளில் தூக்கிவரும் மிலிட்டரி அண்ணன் அதைச் சொல்லித் தருகிறான்.
என்ன ஒன்று, பலரும் அந்த உணர்வு உள்ளிருந்து எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது தான் சிக்கல்.
புலிவேஷம் கதை! சவாலே சமாளி படத்தில் புலிவேஷம் கட்டியிருப்பவர் எங்க ஊர் அமாவாசை என்பார்கள். அற்புதமான அசைவுகளின் இறுதியில் புலி தன் கையிலிருக்கும் மடுவை அந்த முதலாளியை நோக்கி நீட்டி நிறுத்தும்.
இந்தக் கதையில் புலி தனக்குத் துரோகம் செய்யும் முத்தம்மாவையும் நயினாரையும் கிழித்து எறிகிறது.
சாதாரண மனிதனாக யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத அவன், புலி வேஷத்தின் ஆக்ரோஷத்தின் பின்புலத்தில் அந்தத் தண்டனையை வழங்குவது புரிந்துகொள்ள முடிகிற ஒன்றுதான். எல்லோருக்கும் ஒரு முகமூடி பெரும்பாலும் தேவைப்படுகிறது.
திருமணமாகாத பெண் இருக்கும் வீட்டு வாசலில் ஒரே மாதிரியான, அலட்சியமான கோலம் ஆண்டுக்கணக்கில்.
பெண் பார்க்க வரும் அன்று தெருவடைத்துக் கோலம் என்று திருமணம் என்ற விதிப்புக்காகக் காத்திருக்கும் பெண்களின் மனநிலையைக் கவிராயரின் கதைகள் சொல்கின்றன.
விசிறி வீடு கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். அழகழகான விசிறிகள் செய்யும், காற்றே வராத அறையில் இருந்தாலும், செய்து வைத்திருக்கும் விசிறிகளை எடுத்து வீசிக்கொள்ளாத மனம் கொண்ட அந்த வீட்டுப் பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் யதார்த்தம் நம்மீது பெரும் துயரத்தை வீசுகிறது.
அந்தக் வெப்பக்காற்றை நம்மால் தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை.
கவிராயர் தன் கதைகளை, பாந்தமான சொற்களில், அற்புதமான வரிகளில் அழகான ஒரு சட்டகத்திற்குள் பொருத்திவிடுகிறார்.
வாதாமரத்தின் குழந்தையான அணில், தாயின் மடியில் ஏறி விளையாடும் குழந்தைபோல் அந்த மரத்தில் தாவிக் குதிப்பது போல் கதைகளுக்குள் நுழையும் நம் நினைவுகளும் முன்னும் பின்னுமாக நினைவுகளெனும் ஊஞ்சலில் ஆடுகின்றன. பல இடங்களில், பாத்திரங்களில் நிகழ்வுகளில் நம்மை நாம் பார்க்கமுடிகிறது.
- அக்களூர் ரவி
*****
நூல்: விசிறி வீடு
தஞ்சாவூர்க் கவிராயர்
நாற்கரம் பதிப்பகம்
விலை: ரூ.150/-