வாழை – உண்மைச் சம்பவம் அடிப்படையிலான கதை!

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், அவர்கள் கடந்து வந்த வேதனைகளையும் சொல்வதாக இருந்து வருகின்றன மாரி செல்வராஜின் படங்கள்.

அவர் தந்த ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களின் களங்கள் வெவ்வேறாயினும், அக்கதையின் அடிநாதம் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் ஆற்றாமையைச் சொல்வதாக இருந்தது.

அந்த வரிசையில், மீண்டும் தான் பிறந்த மண்ணான புளியங்குளத்தை மையப்படுத்தி ‘வாழை’ தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படம் தனது வாழ்வின் ஓராண்டில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியிருக்கிறார்.

‘வாழை’ எப்படிப்பட்ட படமாகத் திரையில் வெளிப்பட்டிருக்கிறது?

காய் சுமக்கப் போகணும்!

புளியங்குளம் ஊரில் தாய் (ஜானகி), சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) உடன் வாழ்ந்து வருகிறார் பதின்ம வயதுச் சிறுவனான சிவனணைந்தான் (பொன்வேல்). அவரது நெருங்கிய நண்பர் சேகர் (ராகுல்).

கருங்குளத்தில் அரசுப் பள்ளியில் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அப்பள்ளிக்கு நடந்து செல்வது அவர்களது வழக்கம்.

அப்போது, தங்களுக்குப் பிரியமான விஷயங்கள் குறித்து இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

ரஜினி ரசிகனாக சிவனணைந்தானும், கமல் ரசிகனாக சேகரும் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக, நட்பைத் தாண்டி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் நிகழும்.

போலவே, ஆசிரியை பூங்கொடி (நிகிலா விமல்) மீது சிவனணைந்தான் கொண்டிருக்கும் பிரியத்திற்காகவும் அவரைச் சீண்டுவது சேகரின் வழக்கம்.

ஒருமுறை கீழே விழுந்த பூங்கொடியின் கர்ச்சீஃபை சிவனணைந்தான் எடுத்து வைத்துக் கொள்கிறார். அந்த விஷயம் தெரிய வந்ததும், “அதை ஏன் எடுத்த” என்கிறார் பூங்கொடி.

முதலில் அது தனது சகோதரியினுடையது என்று கூறும் சிவனணைந்தான், பிறகு “உங்க ஞாபகார்த்தமாக இருக்கட்டும்னு எடுத்து வச்சேன்” என்கிறார். அதைக் கேட்டதும் பூங்கொடி சிரிக்கிறார்.

பிறகு, சிவனணைந்தான் சட்டையைச் சேகர் கிழித்துவிட, அதனைத் தைத்துக் கொண்டு வருகிறார். அதற்குப் பதிலாக, அவருக்கு இருவரும் மருதாணி இலை பறித்துக் கொண்டு வருகின்றனர்.

இதேபோல, ஊரில் வாழும் கனி (கலையரசன்) மீது வேம்புவுக்குக் காதல் ஏற்படுகிறது. அவரும் அப்பெண்ணை விரும்புகிறார்.

அதேநேரத்தில், அது பற்றி எதுவும் தெரியாத சிவனணைந்தான் தனது சகோதரியிடம் “நீ கனி அண்ணனையே கல்யாணம் பண்ணிக்கோ” என்கிறார்.

இது சிவனணைந்தானின் ஒரு பக்க வாழ்க்கை தான். இன்னொரு புறம், அவரது சனி, ஞாயிற்றுக் கிழமைகளைப் பூதம் போல ஆக்கிரமிக்கிற இன்னொரு விஷயம் இருக்கிறது.

அந்த நாட்களில் தனது தாய் வாங்கிய கடனுக்காக, வாழைத்தோப்பில் அவரோடும் சகோதரியோடும் வேலை செய்யச் செல்கிறார் சிவனணைந்தான். நாள் முழுவதும் வெட்டப்படும் வாழைத்தார்களைத் தலையில் சுமந்து வந்து லாரியில் ஏற்றும் பணி அது.

அடுத்த நாள் முதல் ஒரு வார காலத்திற்குத் தலையையே தனியே கழற்றி வைக்கலாம் எனுமளவுக்கு வலியைத் தரும் அந்த வேலை.

அதிலிருந்து தப்பிக்கத் தாயிடம் ஏதேனும் ஒரு சாக்கு சொல்வது சிவனணைந்தான் வழக்கம்.

ஒருமுறை அப்படிச் செய்யும்போது, அவர்களது மாடு வேறொருவரின் வயலுக்குள் நுழைந்துவிடுகிறது.

இரண்டாவது முறை, மீண்டும் ‘காய் சுமக்கும் வேலை’க்குப் போவதாகச் சொல்லிவிட்டு பள்ளியில் நடைபெறும் நடனப் பயிற்சியில் பங்கேற்கப் போகிறார் சிவனணைந்தான்.

அன்றைய தினம் உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவரது தாயும் வேலைக்குச் செல்லவில்லை.

சில மணி நேரங்கள் கழித்து, வீடு திரும்புகிறார் சிவனணைந்தான். தாய் கொடுத்த சாப்பாட்டு வாளி சகோதரியிடம் இருந்த காரணத்தால், நாள் முழுவதும் சாப்பிடாமல் அவர் பசியில் இருக்கிறார்.

அங்குமிங்கும் அலைந்து பசி மயக்கத்தில் வீடு திரும்புகிறார். அடுக்களையில் இருக்கும் சோற்றை எடுத்துச் சாப்பிடுகிறார்.

அந்த நேரத்தில், அறைக்கதவைத் திறக்கும் தாயார் ‘வேலைக்குச் செல்லவில்லையா’ என்று கேட்டு அவரை அடித்து துரத்துகிறார். அங்கிருந்து ஓட்டம் பிடிப்பவர், எங்கெங்கோ ஓடுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, தன் வீட்டுக்கு முன்னால் குடுகுடுப்பைக்காரர் வந்து ‘ஒரு பெரிய துக்கம் ஒண்ணு நிகழப்போகுது’ என்று சொன்னது, சிவனணைந்தான் காதுகளில் அந்நேரம் எதிரொலிக்கிறது. உடனே, அவர் மயங்கிச் சரிகிறார்.

அடுத்த நாள் காலையில், அவரது கிராமத்தில் போலீஸ் படையே குவிந்து நிற்கிறது. அதன் பின்னணி என்ன என்று சொல்வதோடு ‘வாழை’ முடிவடைகிறது.

பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படம் போல பதின்ம வயதுச் சிறுவனின் பாலியல் ஈர்ப்பைச் சொல்வதாக, இப்படத்தின் வெளித்தோற்றம் உள்ளது.

அதையும் தாண்டி அவர் வாழும் இடத்தின், சுற்றியிருக்கும் மக்களின், அவர்களது முன்னோர்களின் வாழ்க்கையைச் சொல்வதாக விளங்குகிறது ‘வாழை’.

வாழைத் தோப்புக்குச் சென்று குலை தள்ளிய வாழைத்தாரை வெட்டி எடுத்து, அதனைத் தலையில் சுமக்கும் கூலி வேலையாட்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா என்கிறது இப்படம். அதன் பின்னிருக்கும் கூலி உயர்வு, குழந்தை தொழிலாளர் மற்றும் சாதிரீதியிலான பிரச்சனைகளையும் பேசுகிறது.

நேரடியாகப் பார்க்கும் உணர்வு!

தொண்ணூறுகளின் இறுதியில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியில் நிகழ்வதாக அமைந்துள்ளது ‘வாழை’ படத் திரைக்கதை.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இப்படத்தைத் திரையில் ‘கலர்ஃபுல்’லாக காட்டியிருக்கிறார். அதேநேரத்தில், கதை நிகழும் களத்திற்கே நேரில் சென்ற உணர்வை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறார்.

படத்தொகுப்பாளர் சூரிய பிரதமன், முதல் காட்சி தொடங்கி இறுதி வரை நேர்த்தியாக ஷாட்களை அடுக்கியிருக்கிறார். சில இடங்களில் முன்பின்னாக சில நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

முன்பாதியில் அது ஒரு குறையாகத் தெரிவதில்லை. ஆனால், கிளைமேக்ஸ் காட்சியில் முக்கிய நிகழ்வொன்றை அந்த உத்தியைப் பயன்படுத்திச் சொல்லியிருப்பது உணர்வெழுச்சியை மட்டுப்படுத்தியிருக்கிறது.

கலை இயக்குனர் குமார் கங்கப்பன், திரைக்கதையில் தொண்ணூறுகள் காலகட்டத்தைக் காட்டச் சில சினிமா சுவரொட்டிகள், ரஜினி கமல் உருவம் கொண்ட டாலர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

பள்ளிகள், வீடுகளைக் காட்டிய விதம் கதையோடு எளிதாக ஒட்ட உதவுகிறது. அதேநேரத்தில் எம்-சாண்ட் செங்கல் பயன்பாடு, பள்ளியைச் சுற்றியிருக்கும் சுற்றுச்சுவர் போன்றவை காட்டப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

வாழைக்கறை படிந்த சட்டையைப் பெண்கள் அணிந்திருப்பது, ஆண் பாத்திரங்கள் பின்னந்தலையில் ‘பங்க்’ முடி வளர்த்திருப்பது போன்ற சில விஷயங்கள் படத்தின் ஆடை வடிமைப்பு, ஒப்பனையில் காட்டப்பட்டிருக்கும் கவனத்தைக் காட்டுகின்றன.

சிறுவர்கள் நடனமாடினால் எப்படி இருக்கும்? ஆசிரியர் நடனமாடினால் எப்படியிருக்கும் என்பதற்கேற்ப நடன வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் சாண்டி.

சுரேன், அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் குழுவினரின் பங்களிப்பு என்று இதில் தொழில்நுட்பப் பங்களிப்பும் சிறப்பாக உள்ளன.

சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘தென்கிழக்கு தேன்சிட்டு’ சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்கிறது. ‘பாதகத்தி’ என்று சொல்லை ‘பாதவத்தி’ என்று பயன்படுத்தி மாரி செல்வராஜ் எழுதியிருக்கும் பாடல் மண் மணத்தைப் பரப்புகிறது.

பின்னணி இசையில் ‘உலக சினிமா’ பார்த்த எபெக்டை தருகிறார் சந்தோஷ் நாராயணன். சில இடங்களில் அது நம் மனதோடு ஒட்டி உறவாடுவதாக இல்லை. அதேநேரத்தில் நாதஸ்வரம், தவில் பயன்படுத்தப்படும் இடங்கள் அந்த மாயாஜாலத்தை எளிதாக நிகழ்த்துகின்றன.

இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார், பத்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருமே அப்பாத்திரங்களாக மட்டுமே தென்படுகின்றனர்.

நிகிலா விமல் பாத்திரத்தின் சித்தரிப்பும் அது தொடர்பான காட்சிகளும் ஆபாசமானதாக தென்படக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கலையரசன் – திவ்யா பாத்திரங்களின் காதலைச் சொல்ல ‘தூதுவளை இலையரைச்சு’, ‘பஞ்சுமிட்டாய் சீலை கட்டி’ பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது அருமை.

நகரத்தில் இருந்து கிராமத்திற்கு ஆசிரியையாக வருபவர்களாகச் சில பெண்கள் இதில் காட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களது இயல்பான நடிப்பு அருமை.

இதில் சிவனணைந்தானாகப் பொன்வேல், சேகராக ராகுல் நடித்துள்ளனர். இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்களின் உரையாடலை நேரடியாகக் காண்பது போல, இருவருமே நடித்திருப்பது அழகு.

அதிலும் வேதனை, விரக்தி, வெறுமை, சோகம், ஆத்திரம், எரிச்சல், பாசம் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் பொன்வேல். அதனாலேயே அவர் முகத்தில் தென்படும் பருவ வயது ஈர்ப்பு நமக்கு துருத்தலாகத் தெரிவதில்லை.

‘காலில் முள் குத்திவிட்டதாக’ச் சொல்லிவிட்டு, காய் சுமக்கும் வேலையில் இருந்து தப்பிக்க இருவரும் திட்டமிடும் காட்சி நம்மைச் சிரிப்பலையில் தள்ளுகிறது.

அந்தக் காட்சியில் சேகரின் தாயாக நடித்தவர் நம்மை ஈர்க்கிறார். அதேபோல, இந்தக் கதையின் அடிநாதமாக விளங்குகிறது பொன்வேல், திவ்யாவின் தாயாக நடித்த ஜானகியின் இருப்பு. கிளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பல விருதுகளை வழங்குவதற்குத் தகுதியானது.

இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். அது, இக்கதையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

சமரசம் ஏதுமின்றி, அதேநேரத்தில் தான் சொல்ல வந்த சமூக அரசியல் கருத்துகளை எதிர்ப்புகள் ஏதுமின்றி, அனைவரும் ஏற்றுக்கொள்கிற வகையில் ஒரு திரைப்படைப்பைத் தந்திருக்கிறார். அதற்குப் பின்னிருக்கும் அபார உழைப்பையும் ஒருங்கிணைப்பையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

நல்லதொரு காட்சியனுபவம்!

2021-ம் ஆண்டு அரபி மொழியில் வெளியான, எரிகே செஹிரி இயக்கிய ’அண்டர் த பிக் ட்ரீ’ஸ் (Under the Fig trees) படத்தைச் சில இடங்களில் நினைவூட்டுகிறது இப்படம்.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் வார்த்தைகளில் விவரிக்க இயலாத வலியையும் வேதனையையும் தரலாம். அதையெல்லாம் விட, இதில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலரது கடந்த கால வாழ்க்கைப் பதிவாகியிருக்கிறது என்பதுதான் ஆகச்சிறப்பு.

படத்தின் தொடக்கக் காட்சியில் கமலின் டாலரை அறுப்பதோடு, நைசாக அதனைத் தன் டவுசர் பாக்கெட்டில் வைப்பார் சிவனணைந்தான். அப்போது, நம் மனதில் அவர் உண்மையாகவே ரஜினி ரசிகர் தானா என்ற சந்தேகம் வரும்.

‘பூங்கொடி’ எனும் ஆசிரியையின் இருப்பு தனக்குப் பிடித்தமானது என்று கூறும் சிவனணைந்தான், அவரிடம் அதனை நேரில் தெரிவிக்கும் காட்சி நமக்கு உறுத்தலாகத் தெரியாது. அந்த இடத்தில் இயக்குநர் காட்டியிருக்கும் கூர்மை அபாரம்.

கிளைமேக்ஸ் காட்சியின் வலியை உணரும்போதுதான், இந்தக் கதையில் பூங்கொடி பாத்திரத்திற்கான இடம் நமக்குத் தெரியவரும்.

இந்தக் கதையில் ‘பொதுவுடைமைச் சித்தாந்தத்திற்கு’ ஒரு இடம் உண்டு. அது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம், சாதாரண மக்களின் வாழ்வில் அதன் தாக்கத்தை உணர்த்துவதாக உள்ளது.

வாழைகளை அறுத்து விற்பனை செய்யும் வியாபாரிக்கும் கூலியாட்களுக்கும் இடையே ஒரு இடைத்தரகர் செயல்படுகிறார்.

முதலாளிக்கு ஆதரவானவராகச் சித்தரிக்கப்படும் அப்பாத்திரம், ‘வேலையாட்கள் போக வண்டி இருந்தா சரியா இருக்கும். ரொம்ப தொலைவுக்கு லோடு மேல ஏறி உட்காந்து போக முடியாது’ என்று அந்த முதலாளியிடம் சொல்லும். அது, அப்பாத்திரத்தின் நிலைப்பாட்டை உணர்த்துவதாக இருக்கும்.

இந்தக் கதையில் அந்த முதலாளியின் பின்னணியை விளக்கிய இயக்குநர், அவரது பார்வைகள் எப்படிப்பட்டவை என்பதைத் திரைக்கதையில் விளக்கவில்லை அல்லது இறுதி வடிவத்தில் இடம்பெறச் செய்யவில்லை. ‘கர்ணன்’ படத்திலும் இது நிகழ்ந்திருந்தது.

‘வீட்ல உங்க அம்மை இருக்காவுளா’ என்பது போன்ற வசனங்கள் எளிய மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கைச் சொல்வதாக இருக்கின்றன. அது தமிழகத்தின் வேறு பகுதி மக்களுக்குப் புரியும்விதமாகவும் உள்ளன.

அனைத்துக்கும் மேலே, இக்கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த நிகழ்வுக்குத் தனது கற்பனையில் விளைந்த பாத்திரங்கள், களங்கள் மூலமாக உருவம் கொடுத்திருக்கிறார்.

அதனை வெறுமனே ஆவணப்படுத்துவதற்குப் பதிலாக, சாதாரண ரசிகர்கள் ரசிக்கிற படங்களின் உள்ளடக்கத்தைப் போன்று அனைத்து அம்சங்களும் நிறைந்ததாகச் சொல்ல முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. பலரைச் சென்றடைய, அவர்கள் பார்த்து ரசிக்க, அதுவே சிறந்த வழி.

அப்படியொரு எழுத்தாக்கத்தையும் காட்சியாக்கத்தையும் கைக்கொள்ளப் பெரும் உழைப்பு தேவை. அதனை நிகழ்த்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சில கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழுகின்றன. தெளிவற்ற சித்தரிப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

அதற்கான பதில்கள் திரைக்கதையில் இருக்கின்றன என்றபோதும், அவை அடிக்கோடிட்டுக் காட்டப்படாதது சிலருக்குக் குறைகளாகப் படலாம். அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், நல்லதொரு திரையனுபவத்தைத் தருவதாக இந்த ‘வாழை’ இருக்கும்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

வாழை விமர்சனம்
Comments (0)
Add Comment