போகுமிடம் வெகுதூரமில்லை – ஒரு வித்தியாசமான திரையனுபவம்!

குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்களை அடையாளம் காண்பதற்குச் சில வழிகள் உள்ளன. ஒரு மாதத்தின் பதினைந்தாம் தேதிக்குப் பின்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் அந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கும்.

அப்படி வெளியாகும் படங்களில் சிலவற்றின் உள்ளடக்கம் சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் அவற்றின் ட்ரெய்லரே அதனை உணர்த்துவதாக அமையும்.

அப்படி நம்மை ஈர்த்த படங்களில் ஒன்றாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இதில் விமல், கருணாஸ் இருவரும் மையப்பாத்திரங்களாக இடம்பெற்றிருந்தனர். மைக்கேல் கே.ராஜா இதனை இயக்கியிருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது?

டைட்டிலுக்கான காரணம்!

இரண்டு வேறுபட்ட நபர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வாகனம் ஒரு அமரர் ஊர்தி. அதில் ஒரு பிணம் இருக்கிறது.

ஊர்தி ஓட்டுநரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மருத்துவச் செலவுக்குச் சில ஆயிரங்கள் பணம் அவருக்குத் தேவை.

இன்னொரு நபர் ஒரு நாடக நடிகர். ஐம்பதைத் தாண்டியும் திருமணமாகாமல் தனிமரமாக வாழ்ந்தவர். நாடகத்திற்கான ரசிகர்கள் குறைந்துபோனதை உணர்ந்து, வெறுமையோடு தன் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறார்.

உதவி கேட்போருக்கு உடனடியாக உதவ வேண்டும் என்பது நடிகரின் இயல்பு என்றால், ‘தேவையில்லாத வம்பு எதுக்கு’ என்பது ஊர்தி ஓட்டுநரின் எண்ணம்.

இப்படி முரண்பாடுகளின் மூட்டைகளாகத் திகழும் இருவரும், ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களது வண்டியில் இருந்த பிணம் காணாமல் போகிறது.

அதனை எடுத்துச் சென்றது யார்? அதனைக் கண்டுபிடிக்கும் மனநிலையில் கூட, அவர்கள் இருவரும் இல்லை.

காரணம், இறந்துபோனது ஒரு பெரிய மனிதர். அவரது பிணத்திற்கு யார் எரியூட்டுவது என்பதில் அவரது குடும்பத்தினர் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றனர்.

மூத்த மனைவியின் வாரிசுகள், ‘அது தங்களது உரிமை’ என்கின்றனர். இன்னொரு மனைவியின் குழந்தைகளோ, ‘சாதி வேற்றுமையால் எனது தாயை அவமானப்படுத்திய இந்த ஊருக்கு, நாங்கள் வைக்கும் கொள்ளியே சரியான பதிலடி’ என்கின்றனர்.

ஆக, பிணம் காணாமல் போனதாகச் சொன்னால் பெரிய களேபரம் வருவது உறுதி. இந்தச் சூழலில், இரண்டாம் தாரத்து வாரிசுகள் ‘தந்தையின் சடலம் எப்போது வரும்’ என்று ஓட்டுநருக்குத் தொடர்ந்து போன் செய்கின்றனர்.

இன்னொரு தாரத்து வாரிசுகளோ, ஈமச்சடங்குகளை ரகசியமாக நடத்த முடிவு செய்கின்றனர்.

இறுதியில் என்னவானது? அந்த நாடக நடிகரும் அமரர் ஊர்தி ஓட்டுநரும் என்னவானார்கள்? பிரச்சனை தீர்வினைக் கண்டதா என்பதற்கான பதில்களைச் சொல்வதோடு முடிவடைகிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’.

திரைக்கதையில் எந்த இடத்திலும் டைட்டிலுக்கான அர்த்தம் சொல்லப்படவில்லை. கதையில் ஒரு பாத்திரமாக வரும் அந்த அமரர் ஊர்தியில் மட்டும் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

அது மனித வாழ்வில் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் பகைக்கும் மோதல்களுக்குமான பதிலாக உள்ளது.

நல்லதொரு கதை!

வெகுநாட்களுக்குப் பிறகு, விமல் தனது ‘பார்ம்’க்கு திரும்பியிருக்கிறார். குமார் எனும் அமரர் ஊர்தி ஓட்டுநராகத் தோன்றி, ஒரு சாதாரண மனிதராகத் திரையில் வெளிப்பட்டிருக்கிறார்.

நளின மூர்த்தி எனும் நாடக நடிகராக கருணாஸ் நடித்திருக்கிறார். ஐம்பதைத் தொட்டபிறகும் திருமணமாகாத ஆணாக, ஆங்காங்கே பெண்மையின் சாயல் வெளிப்படுபவராக, இதில் வந்து போயிருக்கிறார். சோகமான காட்சிகளில் அவரது நடிப்பு அழுகையை வரவழைக்கிறது.

மேரி ரிக்கெட்ஸ் இதில் விமலின் ஜோடியாக வருகிறார். சில காட்சிகள், பாடல் என்று கொஞ்சமாய் தனது முகத்தைக் காட்டியிருக்கிறார்.

ஆடுகளம் நரேன், அவரது தம்பியாக வருபவர்கள், மாமனாக வரும் மனோஜ்குமார் இறந்து போனவரின் முதல் மனைவி வழி உறவினர்களாக வந்து போகின்றனர்.

இன்னொரு பக்கம் பவன், தீபா சங்கர் ஆகியோர் ‘தீயாக’ இதில் தோன்றியிருக்கின்றனர்.

இவர்களுக்கு நடுவே வேல.ராமமூர்த்தி ஒரு ‘ஜமீனாக’ இக்கதையில் இருக்கிறார்.

விமல், கருணாஸ் பாத்திரங்கள் இக்கதையில் ஒரு காதல் ஜோடிக்கு உதவுகின்றன. அப்பெண்ணின் தந்தையாக நடித்திருக்கிறார் அருள்தாஸ். அவரது உறவினர்களாகச் சிலர் இதில் நடித்திருக்கின்றனர்.

ஆக, இந்தப் படத்தில் குறைந்தபட்சம் நான்கு டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள்.

இவர்கள் தவிர்த்து சார்லஸ் வினோத், கல்கி ஆகியோர் சிறு பாத்திரங்களில் வந்து போகின்றனர்.

படத்தின் பட்ஜெட் குறைவு என்பதைச் சில காட்சிகளில் தெரியும் ‘நாடகத்தனம்’ உணர்த்துகிறது.

இயக்குநரின் எழுத்தாக்கம் சில இடங்களில் குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடுகிறது. குறிப்பாக, இப்படத்தின் கிளைமேக்ஸ் சட்டென்று நிகழ்ந்து நம்மை வெறுமையில் தள்ளிவிடுகிறது. அதனை இன்னும் நேர்த்தியாகச் செதுக்கியிருக்கலாம்.

டிமல் சேவியர் எட்வர்ட்ஸின் ஒளிப்பதிவு, தியாகராஜனின் படத்தொகுப்பு, சுரேந்தரனின் கலை வடிவமைப்பு உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு ஒன்றிணைந்து இயக்குனரின் திரைக்கதைக்கு உருவம் தந்திருக்கின்றன. அவற்றில் சில இடங்கள் போதாமையை வெளிப்படுத்துகின்றன.

ரகுநந்தனின் ‘புல்லட்டு வண்டியில’ பாடல் மரண வீடுகளில் பாடப்படும் ஒப்பாரியின் இன்னொரு வடிவமாக விளங்குகிறது. ‘ஏண்டி என்ன இப்படிப் பார்க்குற’ பாடல் கேட்க கேட்கப் பிடிக்கும் ‘மெலடி’ மெட்டு.

மையப்பாத்திரங்களின் வேதனைகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்த உதவுகிறது அவரது பின்னணி இசை.

இயக்குநர் மைக்கேல் கே.ராஜா, இதில் வித்தியாசமானதொரு திரையனுபவத்தை நமக்குத் தருகிறார்.

மரணம் நிகழ்ந்த வீட்டை மையப்படுத்தி சில திரைப்படங்களைக் கண்டிருப்போம். பிணத்தை ஒரு பாத்திரமாகக் கொண்ட சில படங்களைப் பார்த்திருப்போம்.

ஆனால், ஈமச்சடங்குகளைச் செய்வதற்குப் பின்னால் சில மனிதர்களின் வாழ்நாள் ஆசைகள் பூர்த்தியடைவதைப் பேசுகிறது இப்படம். அந்த வகையில் இது நல்லதொரு கதையைக் கொண்டிருக்கிறது.

திருப்தி தராத ‘கிளைமேக்ஸ்’!

இந்தியில் துல்கர் சல்மான், இர்பான் கான், மிதிலா பால்கர் நடிப்பில் ‘கார்வான்’ என்றொரு படம் வந்திருக்கிறது. அதிலும் ஒரு பிணத்தை வண்டியில் வைத்துக்கொண்டு சில பாத்திரங்கள் உலாவுவதாகக் கதை நகரும்.

இது போல இன்னும் சில படங்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கலாம்.

ஆனால், நெல்லை வட்டாரத்தில் புழக்கத்தில் இருக்கும் சில சடங்கு சம்பிரதாயங்கள், அங்கு நிலவும் சாதீய வேற்றுமைகள், அவற்றால் புண்பட்ட மனித மனங்களின் வாழ்நாள் ஆற்றாமை போன்றவை இப்படத்தில் சில பாத்திரங்களின் வழியே உணர்த்தப்படுகின்றன.

விமல், சார்லஸ் வினோத் போன்றவர்கள் சென்னை வட்டாரத் தமிழ் பேச, இதர பாத்திரங்கள் மதுரை, நெலலை தமிழைப் பேசுகின்றன.

ஒரே படத்தில் இப்படிப்பட்ட வசனங்களைக் கேட்பது வெகு அரிதாகத்தான் நிகழும். அதனை முடிந்தவரை சரியாகக் கையாண்டிருக்கிறார் மைக்கேல் கே.ராஜா.

முன்பாதியில் ஒரு திசை நோக்கி நகரும் கதை, பின்பாதியில் இலக்கில்லாமல் பயணிப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது மேலோட்டமான பார்வை தான்.

அவ்வாறு தோன்றக் காரணம், கருணாஸ் பாத்திரத்தின் இயல்பையும் மன விருப்பங்களையும் திரைக்கதையில் இயக்குநர் அடிக்கோடிட்டுக் காட்டவில்லை. அதனைச் செய்திருந்தால், இப்படத்தின் கிளைமேக்ஸ் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

போலவே, கிளைமேக்ஸ் காட்சியையொட்டி நிகழ்வதாக காட்டப்படும் சம்பவங்களும் நமக்கு ‘ஏற்புடையதாக’ இல்லை. அதனை இன்னும் நேர்த்தியாகத் திரையில் தெரியும்படி வார்த்து திருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.

அது போன்ற குறைகளைத் தாண்டி, பட்ஜெட் குறைவால் தெரியும் அபத்தங்களைத் தாண்டி, ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ நம்மை நிச்சயம் ஈர்க்கும். அதற்கான உழைப்பும் உள்ளடக்கமும் இப்படத்தில் நிறையவே இருக்கிறது..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

போகுமிடம் வெகுதூரமில்லை
Comments (0)
Add Comment