பெண்கள் மீதான வன்முறைகளை அங்கீகரிக்கிறதா சமூகம்?

உலகளாவிய சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையையும் ஒடுக்குமுறையும் பட்டியலிட்டால் உலகில் காகிதப் பற்றாக்குறையே ஏற்பட்டுவிடும். ஆனால், பெண்கள் மீதான வன்முறையாக, பாலியல் குற்றங்களை மட்டும் தான் பொது சமூகம் அங்கீகரிக்கிறது.

பாலியல் குற்றங்கள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பாலியல் குற்றங்கள் மட்டும் தான் பெண்களைக் காயப்படுத்துகிறதா? என்ற கேள்வியை தான் ஆராய வேண்டும்.

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் தனிக்குடும்பமாக இருந்தாலும் குடும்ப அம்சமே மனித சமூகத்தால் பாராட்டக்குரியதாக உள்ளது.

ஆனால், குடும்பம் பெண்களுக்கான இடமாக என்றுமே இருப்பதில்லை. தன்னுடையது என்று உரிமை கொண்டாடுவதற்கு சொந்த வீட்டை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.

பிறந்தது ஒரு வீடு, திருமணமானது இன்னொரு வீடு. இரண்டு வீடு இருந்தும் எதையும் உரிமை கொண்டாட முடியாது.

தான் தங்கும் வீட்டில் தனக்கு சொந்தமென்று சமையலறையும், பூஜை அறையை மட்டும் தான் பெரும்பாலான பெண்களின் உரிமையாக உள்ளது.

சமையலறை எனக்கு மட்டும் தான் என்ற போட்டி இன்றும் பல வீடுகளில் பெண்களுக்கு இடையில் நடக்கிறது.

மகனுக்கு நான் தான் சமைத்துக் கொடுப்பேன் என்று அம்மாவும், இனி எனக்கான சமையலறை என திருமணமான பெண்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் சமையலறை தான் தான் முழுமையான பெண் என்பதற்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

பூஜையறை தன்னுடைய கவலைகளை, எண்ணங்களை பொருட்படுத்தாத காதுகளுக்கு மத்தியில் கடவுளிடமாவது கொட்டித் தீர்ப்பதற்கான இடமாகப் பார்க்கப்படுகிறது.

சமையலறை மற்றும் பூஜையறையில் வாழ்க்கையைக் கழிக்கும் பெண்களுக்கு அவையும் நிரந்தரமில்லை.

எந்நேரம் வேண்டுமானாலும் சண்டையில் வீட்டைவிட்டு வெளியில் துரத்தப்படலாம். எனவே பெண்களுக்கென நிரந்தரமான இடம் எதுவும் இல்லாத சூழலில் பெண்களுக்காக இடம் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.

குடும்பங்களை விட்டு விலகி பெண்கள் தனித்து வாழும் முடிவை எடுக்கலாம். இது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் வலி நிறைந்தது. ஏனென்றால் மனித இனமே சார்ந்திருக்கும் வாழ்க்கைமுறையை உள்ளடக்கியதுதான்.

ஆணாதிக்க சமூகம் கொடுக்கும் வலிகள் ஒருபுறமிருக்க, தனித்து இருப்பது ஒரு கட்டத்தில் நமக்கென்று யாருமே இல்லையே என்ற ஏக்கத்தையும் சுய பாதுகாப்பின்மையும் ஏற்படுத்தும்.

அதனால் தான் Women Democratic space தேவைப்படுகிறது. Women Democratic space – இது பெண்களுக்கான ஜனநாயக இருப்பிடம். இது வழக்கமான விடுதி போல் இல்லை.

குடும்பமாக வாழ்வதை போல் இவ்விடத்தில் பெண்கள் குழுவாக வாழலாம். தனக்கு விரும்பியதை சமைத்து சாப்பிடுவது, கலை உணர்வை வளர்த்து கொள்வது,

ஆட்டம் பாட்டமாக தினசரி வாழ்க்கையை கழிப்பது, படிப்பது, பாட்டுக்கேட்பது விளையாடுவது என பெண்கள் தங்களுக்கான உலகத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்குமிடமாக ஜனநாயக இருப்பிடம் விளங்கும்.

பெண்களுக்கான ஜனநாயக இருப்பிடத்தில் பெண்கள் நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற எந்தவித கட்டாயமில்லை.

எப்போதெல்லாம் பெண்கள் குடும்பத்தால் சமூகத்தால் தனித்துவிடப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அடைக்களமாக ஜனநாயக இருப்பிடம் அமையும்.

வெறும் நிர்பந்தத்தில் வெளியேறும் சூழ்நிலைகளில் மட்டுமல்லாமல் பெண்கள் தங்களுக்கு தினசரி வாழ்க்கையிலிருந்து ஆசுவாசப்படுத்துவதற்கும் ஜனநாயக இருப்பிடம் திறந்தே இருக்கும்.

பெண்களுக்கான ஜனநாயக இருப்பிடமென்பது வெறும் தங்குவதற்கான இடம் மட்டுமல்ல.

குடும்பம் மற்றும் சமூகத்தின் அவதூறுகளால், ஏச்சுகளால், வன்முறையால், வல்லுறவால் பாதிக்கப்பட்ட உயிர்கள் தங்களுக்குள் கலந்துரையாடுவதற்கு,

தோள் சாய்வதற்கு, ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதற்கு, குடும்பம் மட்டுமே பாதுகாப்பு, அரவணைப்பு என்று சொல்லி குடும்ப உறுப்பினர்கள் காலங்காலமாக சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமத்துவக் கூடமே பெண்களுக்கான ஜனநாயக இருப்பிடம்.

இதனை உருவாக்கித் தருவது அரசின் கடமை.

– கு.சௌமியா

Comments (0)
Add Comment