புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு, கோட்டையைப் பிடிக்கும் எண்ணத்தில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் குதித்தனர். அரை டஜன் பேர் தனிக்கட்சி ஆரம்பித்தனர். யாருமே சோபிக்கவில்லை. சிலர் கட்சியைக் கலைத்துவிட, பலர் வேறு கட்சிகளில் ஐக்கியமானார்கள்.
30 ஆண்டுகளாக, அரசியலுக்கு வரப்போவதாக ஜாடை காட்டிக்கொண்டிருந்த ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் ‘’ஆளை விடுங்க’’ என ஒதுங்கிக் கொண்டார். மற்றொரு உச்ச நடிகரான கமல்ஹாசன், தனிக்கட்சி தொடங்கி, தொடர் தோல்விகளையே சந்தித்தார்.
இந்த நிலையில்தான், ரஜினி, கமலுக்கு நிகராக சினிமாவில் சந்தை மதிப்பும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ள ‘இளையத் தளபதி’ விஜய், யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் இறங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதம் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டது.
’2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலே எனது இலக்கு’ என அறிவித்த விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.
விரைவிலேயே கட்சி மாநாட்டை நடத்த உள்ள விஜய், தனது, ‘தமிழக வெற்றிக் கழக‘த்தின் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழன்) அறிமுகம் செய்தார்.
அடர் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்சிக் கொடியின் அறிமுக விழாவில், த.வெ.க. நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் சோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது கட்சித் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ’உறுதிமொழியை விஜய் படிக்க, அதனைக் கட்சித் தொண்டர்கள் எதிரொலித்தனர்.
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்“ என அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாநாட்டை உறுதி செய்த விஜய்:
விழாவில் பேசிய விஜய், விரைவில் கட்சியின் மாநாடு நடைபெற இருப்பதை உறுதி செய்தார். ”என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி, இந்தக் கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன்” என பலத்த கரகோஷத்துக்கு மத்தியில், தனது உரையை ஆரம்பித்தார்,
தொடர்ந்து பேசிய விஜய் கூறியதாவது :
‘’கொடியில் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன் – முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம் – இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம் – தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம்.
இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல – தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன் – நான் சொல்லாமலேயே இந்தக் கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும்
எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள் – நல்லதே நடக்கும் – வெற்றி நிச்சயம்” என உணர்ச்சிப் பெருக்குடன் தனது உரையை விஜய் முடித்தபோது, கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
– பாப்பாங்குளம் பாரதி.