கிராமப்புறங்களில் காணப்படும் நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும். அவற்றில் பல கடந்த கால உண்மைகள் பொதிந்திருக்கும். அவை பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்நிலத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல், கலாசார வன்முறையின் கோர முகத்தைக் காட்டுவதாக இருக்கும்.
ராஜ்-டிகே எழுத்தாக்கத்தில், அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், சாரதா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி, அபர்ஷக்தி குரானா முதன்மை பாத்திரங்களில் நடித்த ‘ஸ்திரி’ இந்தி திரைப்படம், அப்படியொரு கதையைச் சொன்னது. 2018இல் வெளியான இப்படம்.
தற்போது அதன் இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. இதிலும் முதன்மை பாத்திரங்களில் அதே கலைஞர்கள் நடித்திருக்கின்றனர்.
முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாகவே இதன் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தினேஷ் விஜனின் ‘மேட்டாக் பிலிம்ஸ்’ இதனைத் தயாரித்துள்ளது.
இந்நிறுவனம் ‘ஸ்திரீ’ தொடங்கி ’ரூஹி’, ‘பேடியா’, ‘முஞ்யா’ என்று ‘ஹாரர்’ படங்களைத் தந்து வருகிறது. அதிலுள்ள கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த படங்களில் இடம்பெறுவதாக வடிவமைத்து ’மேட்டாக் சூப்பர் நேச்சுரல் யூனிவர்ஸை’ ரசிகர்களுக்கு தந்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது வெளியாகியிருக்கும் ‘ஸ்திரி 2’ ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைக் கொடுக்கிறது?
முன்கதைச் சுருக்கம்!
சில நூற்றாண்டுகளுக்கு முன் சந்தேரி எனும் ஊரில் ஒரு விலைமாது ஒரு ஆடவனை விரும்பித் திருமணம் செய்ததாகவும், அன்றைய தினம் அக்கிராமத்து ஆண்களால் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், அதற்குப் பழி வாங்கும் வகையில் அக்கிராமத்தினரை அப்பெண் பேயாக வந்து வதைத்து வருவதாகவும் சொன்னது ‘ஸ்திரீ’.
‘ஸ்திரீ’ என்றால் பெண் என்று அர்த்தம். அந்த பேய்க்கும் அதையே பெயராக வைத்திருக்கின்றனர் அக்கிராமத்தினர்.
அந்தப் பேயைச் சாந்தப்படுத்தி தெய்வமாகத் தற்போது அக்கிராமத்தினர் வணங்குவதாகவும், பிறகு ‘ஸ்திரீ’ அங்கு வருவதில்லை எனவும் அப்படத்தின் முடிவு அமைக்கப்பட்டிருந்தது.
அதில் நாயகனைக் காதலிக்கும் பெண் மாயசக்தி கொண்டவராகவும், மனித உருவில் இருக்கும் ஒரு மோகினியாகவும் காட்டப்பட்டிருந்தார். அவரது பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ‘அவர்தான் ஸ்திரீயா’ என்ற கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.
‘விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறோம்’ என்று முதல் பாகம் முடிந்ததில் இருந்து கதை சொல்லத் தொடங்குகிறது ‘ஸ்திரீ 2’.
மீண்டும் பேயின் அட்டகாசம்!
சந்தேரி கிராமத்தை வாட்டி வதைத்த ‘ஸ்திரீ’ அம்மக்களை விட்டு விலகி ஓராண்டாகிறது. அங்கு கோயில் திருவிழாவும் தொடங்குகிறது.
அந்த நேரத்தில், அங்கு இளம்பெண்கள் காணாமல் போகின்றனர். தலையும் உடலும் தனித்தனியாக இருக்கும் ஒரு பேய் அவர்களைக் கடத்திச் செல்கிறது.
ஆனால், அக்கிராமத்தினர் அப்பெண்கள் யாரிடமும் சொல்லாமல் நகரத்திற்குச் சென்றுவிட்டதாக நினைக்கின்றனர். அவர்கள் நவநாகரீகமாக, சுயாதீனமாகச் செயல்பட்டதால் அப்படியொரு எண்ணம் உருவாகியிருக்கிறது.
ஸ்திரீக்கு சிலை வைத்து தெய்வமாக வணங்கக் காரணமாக இருந்த டெய்லர் விக்கி தன்னை விட்டுச் சென்ற அந்த மாயப்பெண் நினைவாகவே இருக்கிறார். அதனைக் கிண்டல் செய்வதையே தங்கள் வைத்திருக்கின்றனர் அவரது நண்பர்கள் ருத்ராவும் பிட்டுவும்.
இன்னொரு நண்பர் ஜனாவை அவரது பெற்றோர் டெல்லிக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கு, அவர் ஐஏஎஸ் தேர்வெழுதப் பயிற்சி பெற்று வருகிறார்.
பிட்டுவின் கேர்ள்ப்ரெண்ட் பெயர் சிட்டி. ஒருநாள் இரவு, அவர்கள் வீட்டின் முன்னே பிட்டுவும் விக்கியும் நிற்கின்றனர். அப்போது சிட்டியின் அலறல் சத்தம் கேட்கிறது.
அவர்கள் இருவரும் சென்று பார்க்கும்போது, மாடியில் இருக்கும் பாத்ரூம் சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் சிட்டி இல்லை. கீழே வந்து பார்த்தால், தெருவில் எவரும் வந்துபோன தடயம் ஏதுமில்லை.
அங்கு படுத்துக் கிடக்கும் ஒரு பிச்சைக்காரர், தலையும் உடலும் தனித்தனியாக இருக்கும் ஒரு ஆண் பேய் அப்பெண்ணைத் தூக்கிச் சென்றதாகச் சொல்கிறார். பிட்டு பயத்தில் அழத் தொடங்குகிறார்.
அதற்கடுத்த நாள் ருத்ராவுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில், ‘சந்தேரியை விட்டு ஸ்திரீ சென்றுவிட்டால் அவன் வந்துவிடுவது நிச்சயம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த ‘அவன்’ யார்? எதற்காக அந்த பேய் அக்கிராமத்து பெண்களைக் கடத்த வேண்டும்?
இந்த கேள்விக்கான பதிலைத் தேடும்போது, கடத்தப்பட்ட பெண்கள் அனைவருமே சுதந்திரமான, நவநாகரீகமான வாழ்வை விரும்புபவர்கள் என்பதைக் கண்டறிகின்றனர். அவர்களை மட்டும் கடத்துவதன் மூலமாக, அக்கிராமத்தில் எதனைச் சாதிக்க அப்பேய் விரும்புகிறது?
இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால், மீண்டும் ‘ஸ்திரீ’ அக்கிராமத்துக்கு வர வேண்டும் என்ற முடிவுக்கு விக்கி, ருத்ரா, பிட்டு மூவரும் வருகின்றனர்.
ஸ்திரீ இருக்குமிடத்தை ஞானதிருஷ்டியால் அறியும் சக்தி ஜனாவுக்கு உண்டு என்பதால் அவரை டெல்லியில் இருந்து அழைத்து வருகின்றனர்.
மீண்டும் அவர்கள் ஸ்திரீயை முதன்முறையாகச் சந்தித்த, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கோட்டைக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு ஸ்திரீ இல்லை.
அவர்கள் நால்வரையும் கொலைவெறியுடன் துரத்தத் தயார்நிலையில் அந்த பேய்தான் இருக்கிறது. அதன்பிறகு என்னவானது?
நால்வரும் என்னவானார்கள்? இந்த முறையும் அவர்களது உயிரைக் காக்க, அந்த மாயப்பெண் வந்தாரா? அந்தப் பேயின் கொட்டம் அடங்கியதா என்று சொல்கிறது ‘ஸ்திரீ 2’வின் மீதி.
முதல் பாகத்தில் பெண் பேய் என்றால், இதில் ஆண் பேயின் அட்டகாசத்தைச் சொல்லியிருக்கிறது நிரேன் பட்டின் எழுத்தாக்கம்.
சிரிப்புக்கு உத்தரவாதம்!
காஞ்சனா, அரண்மனை சீரிஸ் வழியே சிரிக்கச் சிரிக்க பேய் பட அனுபவத்தைக் கண்டடைந்தவர்கள் நாம்.
அது போன்றதொரு கதையை, வட இந்தியக் கிராமமொன்றின் வாழ்வியல் பின்னணியில் செறிவான உள்ளடக்கத்துடன் தந்தது ‘ஸ்திரீ’. இதிலும் அது தொடர்கிறது.
விக்கி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ராஜ்குமார் ராவ் இதிலும் அப்பாவித்தனமிக்க நாயகனாக வந்து போயிருக்கிறார்.
‘தான் ஒரு சாகசக்காரன்’ என்பதை அறியாதவராக, நம்பாதவராகத் தோன்றியிருக்கிறார்.
மாயப்பெண் ஆக வரும் சாரதா கபூர், இதில் தோன்றும் காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், அவரது நடிப்பும் ஒப்பனையும் ‘உண்மையிலேயே மாயப்பெண் தானா’ என்று எண்ண வைக்கிறது.
நூலகர் ருத்ராவாக வரும் பங்கஜ் திரிபாதி, பிட்டு ஆக வரும் அபர்ஷக்தி குரானா, ஜனாவாக வரும் அபிஷேக் பானர்ஜி மூவரும் நம்மைச் சிரிப்பலையில் தள்ளும் வகையில் திரையில் சீரியசாக தோன்றியிருக்கின்றனர்.
‘பேடியா’வில் ஓநாய் மனிதனாக வந்த வருண் தவான் இதில் கௌரவ தோற்றத்தில் தலைகாட்டியிருக்கிறார். ஒரு காட்சியில் அக்ஷய் குமார் தோன்றியிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து விக்கியின் தந்தை, நண்பர்கள், கிராமத்து ஆண்கள், பெண்கள் என்று சில டஜன் பேர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஜிஷ்ணு பட்டாச்சார்ஜி, திருவிழாவின் ஜொலிப்பையும் பேய் கோட்டையின் இருண்மையையும் திரையில் காட்டியிருக்கிறார்.
கண்களை அயர்வுறச் செய்யாத வகையில் அவரது கேமிரா பார்வையை மாற்றி அமைத்திருக்கிறது விஎஃப்எக்ஸ், டிஐ குழுவினரின் உழைப்பு.
முதல் பாகத்தில் வரும் விஷயங்களை சில ஷாட்களில் சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஹேமாந்தி சர்கார். முடிந்தவரை கதை எளிதாகப் புரியும் வகையில் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்.
இடைவேளையின்போது பேயிடம் மாட்டிய முதன்மை பாத்திரங்கள் அடுத்த நாள் காலையில் சர்வசாதாரணமாக நடமாடுவதாகக் காட்டும்போது மட்டும், ஏதோ ஒன்று ‘மிஸ்’ ஆனதாக மனதுக்குப் படுகிறது.
மயூர் சர்மாவின் தயாரிப்பு வடிவமைப்பில், காட்சிகளுக்குத் தேவையான ஒரு சூழலை நாம் திரையில் காண்கிறோம்.
ஒரே காட்சியில் பயத்தையும் சிரிப்பையும் விதைக்க, திரைக்கு முன்னும் பின்னும் பலரது உழைப்பை ஒருங்கிணைக்க வேண்டும். அந்த வகையில், தனது பின்னணி இசை வழியே எளிதாக இரண்டையும் அடுத்தடுத்து நமக்குள் ஊட்டுகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீஸ்.
சச்சின் ஜிகர் இசையமைத்திருக்கும் பாடல்கள், ஒரு கொண்டாட்டமான மனநிலையை உருவாக்குகின்றன. தமன்னா ஆட்டம் போடும் ‘ஆஜ் கி ராத்’ பாடல் அவற்றில் ஒன்று.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கும் நிரேன் பட், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இதனைக் காட்டச் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். அந்த இணைப்பு நூறு சதவிகிதம் பொருத்தமானதாக இல்லை.
அதேநேரத்தில் முக்கியப் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப, காட்சிகளையும் வசனத்தையும் அமைத்திருக்கிறார். அது நமக்கு எந்த வேறுபாட்டையும் உணர்த்துவதில்லை.
’பெண்மையை அடக்கியாள நினைப்பது தவறு’ என்பதைச் சொன்னது முதல் பாகம். இதில், அதுவே ஒரு ஆண் பேய் வழியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல் பாகம் போன்றில்லாமல் இதில் வணிக வெற்றியை நோக்கமாகக் கொண்டு சில விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மட்டும் அவை எடுபட்டிருக்கின்றன.
முக்கியமாக, சந்தேரி கிராமம் தொடர்பான நுணுக்கமான சித்தரிப்பு இதில் அறவே இல்லை. முதல் பாகத்தில் தான் விலாவாரியாகக் காட்டிவிட்டோமே என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்.
தமன்னா தோன்றும் பாடல், சாரதா கபூர் கிளைமேக்ஸில் ஆடும் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்துவிட்டால், இப்படம் குடும்பத்தோடு கண்டுகளிக்க ஏற்றதாகத் தெரியும்.
தியேட்டருக்கு சென்று மிரட்சியையும் சிரிப்பையும் பெற வேண்டும் என்பவர்களுக்கு ‘ஸ்திரீ 2’ நல்ல சாய்ஸ்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்