இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ படத்தில் நாயகனாக சீயான் விக்ரம் நடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி உலகளவில் வெளியானது.
கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்பது தொடர்பாகவும் பூர்வகுடிகள் யார் என்பது தொடர்பாகவும் மையக்கருவாகப் பேசியுள்ளது தங்கலான்.
இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள தங்கலான் திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 26. 44 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது. கடந்த 5 நாட்களில் இப்படம் ரூ.68 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிந்தூரி விஷால் பாடியுள்ள இந்தப் பாடலை கவிஞர் உமாதேவி எழுதியுள்ளார்.
இந்த நிலையில் தங்கலான் படவெற்றி விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்,
“தங்கலான் திரைப்படம் முக்கியமான விவாதத்தை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. எனக்குள் இருப்பதை திரைக்கதையின் வாயிலாக மக்களிடன் நான் பேச நினைக்கும் வேட்கைதான் தங்கலான் படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதை சரியாக புரிந்துகொண்டு கொண்டாடுகிற நிறைய மக்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த படம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதைப் பார்க்கும்போது நான் சரியான படத்தைத்தான் எடுத்துள்ளேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த படத்தில் வேலை செய்தவர்கள் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளனர். என்னுடைய படைப்பின் மீதும், என் மீதும் தீராத காதல் உள்ளவர்கள் மட்டும்தான் எனக்காக இந்த அளவிற்கு வேலை செய்ய முடியும்.
இது எனக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற பெரிய பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தரும் அன்புதான் எனக்கு உந்துதலாக இருக்கிறது.
‘தங்கலான்’ வெற்றி எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இன்னும் பல காலங்கள் கடந்தாலும் இப்படம் பொக்கிஷமாகக் கருதப்படும். அதற்கான வேலைப்பாடுகள் இந்தப் படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்தப் படத்தில் விக்ரம் நடித்திருப்பதற்குக் காரணம், கலையின் மீதும் ரசிகர்கள் மீதும் அவர் வைத்துள்ள அன்புதான். அது தீராத போராட்ட குணமுடையதாக உள்ளது.
பல பரிமாணங்களுடைய கதாபாத்திரங்களைத் தேடித் தேடி நடிக்கக் கூடிய ஒரு நடிகராக விக்ரம் இருக்கிறார். அதனால் அவருக்குத் தீனி போடுவது சவாலான ஒன்று.
தங்கலான் படம் அவருக்கு ஈடுசெய்யக்கூடிய தீனியாக அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான நடிகருடன் நான் வேலை செய்தது எனக்கு சாவாலான அதேநேரம் மகிழ்ச்சியான விஷயமும்கூட” என நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.