தம்பி அலையாத்தி செந்தில், பதிவு அஞ்சல் மூலமாக, அனுப்பி வைத்த, அருமையான கட்டமைப்புடன் கூடிய ‘கிடை’ என்ற ஒரு புத்தகம் வந்து சேர்ந்தது.
‘சோழ தேசத்தின் பருவகாலக் கிடை’ என்பது அந்த நூலின் துணைத்தலைப்பு. அந்தப் புத்தகம், மேய்ச்சல் சமூக பண்பாட்டு ஆய்வுக் காலாண்டிதழ். கால்நடை வளர்ப்போர் நல நடுவத்தின் வெளியீடு அது.
புத்தகத்தை பூப்போல மெல்லப் புரட்டினேன்.
‘மறிக்கும் மரித்தலுக்கும் நடுவில்’, ‘புல்நுனி’ என சின்னச்சின்ன கவிதைகள், செழுமையான கட்டுரைகள் புத்தகத்தின் பக்கங்கள்தோறும் பாங்காக அழகு சேர்த்திருந்தன.
அலையாத்தி செந்திலின் ‘ரொக்கம்’ என்ற சிறுகதை மிக அருமை. இயல்பான சொல்லாடல்கள், கிடை பற்றிய தகவல்களுடன், ரெத்தினத் தேவர் இடுப்பிலிருந்து உருவி உருட்டிவிட்ட வெத்தலப் பொட்டலத்தைப் போல உள்ளத்தில் வந்து மெல்ல உட்கார்ந்து கொண்டது அந்த சிறுகதை.
கிடை என்ற சொல்லுக்கு இன்னொரு பெயர் பட்டி. இந்த பட்டி என்ற சொல் பல நினைவுகளை உள்ளுக்குள் கிளர்த்துகிறது.
ஆடு, மாடுகளை அடைக்கும் பட்டி அல்லது கிடை என்பவை ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் அல்ல, நாடுகளின் தலைநகரங்களில் கூட இருந்திருக்கின்றன.
இலங்கைத் தலைநகரமான கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெரு என்ற தெரு உள்ளது. ஒரு காலத்தில் அது கிடையாக இருந்திருக்க வேண்டும்.
அவ்வளவு ஏன்? பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் ஆட்டுப்பட்டி இருந்திருக்கிறது.
எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ‘திரீ மஸ்கிடியர்ஸ்’ நாவலில், கதைநாயகன் டார்க்டானனும், மூன்று மஸ்கிடியர் வீரர்களும் பாரிஸ் நகரின் லக்சம்பர்க் பகுதியின் பின்புறம் உள்ள ஆட்டுப்பட்டியில்தான் ஆங்கிலேய வீரர்களுடன் பொறிபறக்க வாள்சண்டையில் ஈடுபடுவார்கள்.
ஒருகாலத்தில், இப்படி தலைநகரங்களில் இருந்த கிடைகள், காலப்போக்கில் மெல்ல மறைந்திருக்கும்.
‘மேய்ச்சல் நிலத்தில் ஆட்டைத் திருடினால்தான் தவறு, அந்த ஆட்டிடம் இருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடினால் தவறில்லை(!)’ என்பது மாதிரியான மேட்டுக்குடி தர்க்கங்களால் கிடைகள் மெல்ல மெல்ல காணாமல் போயிருக்கும்.
‘புல்நுனி’ என்ற வெற்றிச்செல்வனின் கவிதையில் இறுதியில் வரும், ‘புல்நுனிக்கும், நுனிப்பல்லுக்குமான தொடர்பிரச்சினை. அதுதான் எம் மேய்ச்சல் நிலத்தின் மீதான மரபார்ந்த உரிமை’ என்ற வரிகள் அதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.
கிடை என்ற இந்த காலாண்டிதழ் இன்னும் பல நினைவுகளைக் கிளறுகிறது.
தமிழகத்தில், கோவில்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி என பட்டிகளின் பெருமையை பறைசாற்றும் ஊர்கள் இன்றும்கூட ஏராளம்.
மலையாளத்தில் பட்டி என விளிக்கப்படும் நாய் கூட மந்தையைக் காவல்காக்கும் பயிற்சி பெற்ற நாயாகவே இருந்திருக்க வேண்டும். பட்டியைக் காவல் புரிந்தததால் பட்டி என்ற பெயர் நாய்க்கு வந்திருக்கக் கூடும்.
சங்ககால தமிழகத்தில் கற்கோட்டை கட்டி வாழ்ந்த ஆயர் குலத் தலைவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் வீழ்த்தப்பட்ட கழுவுள் அதுபோன்ற சங்ககால ஆயர் குலத்தலைவர்களில் ஒருவர்.
சேர நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் இடைப்பட்ட பூழிநாடு, சங்க காலத்தில் ஆட்டுவளம் நிறைந்த பகுதியாக விளங்கியிருக்கிறது.
கொங்குப் பகுதியில் சங்க காலத்தில் கால்நடைகள் இறங்கி நீர் அருந்த பாழி என்ற நீர்நிலைகள் இருந்திருக்கின்றன. வேளை மரங்களும், இலைப்புல்லும் அந்த பாழிகளின் அருகில் செறிந்திருந்ததாக சங்க இலக்கியம் பேசுகிறது.
ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு இடம்விட்டு இடம்பெயரும் மேய்ப்பர்களின் வலசையும் அவர்களது வாழ்வும் எவ்வளவு இக்கட்டானது, வலி நிறைந்தது என்பதை உஸ்பெக் எழுத்தாளர்களில் ஒருவரான கஃபூர் குல்யாமின், குறும்பன் என்ற நாவல் உணர்த்தும்.
இரு குறும்புக்காரச் சிறுவர்கள், ஆட்டுமந்தையை இடம்விட்டு இடம் நகர்த்திச் செல்லும்போது அவர்கள் அனுபவிக்கும் வலி, அந்த நாவலின் ஒருபகுதியில் இடம்பெற்றிருக்கும்.
ஆற்றில் இறங்கி நீந்தும் ஆடுகளை, ‘பாலில் விழுந்த சுண்டெலிகள் போல’ என்று கஃபூர் குல்யாம் வர்ணிப்பது அத்தனை அழகு!
சுள்ளென சுட்டெரிக்கும் வெயில், ஆடுகளின் மேல்வீசும் வாசனையுடன், ஆடுகளின் சிறுநீர் மணம், கதறல் என ஓரிடத்தில் ஆட்டுச்சந்தையில் நாம் நேரில் நிற்பது போல ஒரு சித்திரத்தை அந்த புதினத்தில் எழுதிக் காட்டியிருப்பார் கஃபூர் குல்யாம்.
கிடை காலாண்டிதழில், தமிழகத்துக்கே உரித்தான மாட்டினங்கள், ஆட்டினங்கள், மேய்ப்பர்களின் வலசைப் பாதை போன்ற பல தகவல்கள் உள்ளன.
கூடவே கடல்சார்ந்த கட்டுரைகள், சூழலுக்கு கேடுசெய்யும் இறால் பண்ணைகள் தொடர்பான கட்டுரைகளும் நூலுக்கு அணி சேர்க்கின்றன.
கிடை காலாண்டிதழை வெறும் நுனிப்புல்தான் மேய்ந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது இன்னொருமுறை இதை நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டும்.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு